Monday, September 23, 2019

சங்கவிலக்கியத்தில் ஆதன் : 


அண்மையில் கீழடி அகழ்வாய்வின் பானையோடுகளில் எழுதிய பெயர்களில் ஆதன் என்பதும் ஒன்று. இப்பெயர் தமிழவை நூல்களில் பலவிடங்களிலுண்டு. பெரும்பாலும் சேரமரபினரின் பெயர்களே ஆதன் என்றுள்ளன. ஆனால், பாண்டி நாட்டில் கிடைத்த தொல்சான்றில் சேரப்பெயரான ஆதனெனும் பெயர் நம்முள் பலவினாக்களைத் தொடுக்கிறது. எது எவ்வாறோ இருக்கட்டும். இப்பெயர், சங்கநூல்களில் யாங்கெல்லாம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்பதை எடுத்தியம்பும் சிறுபதிவே இது. அடியனுக்குக் கிடைத்த சிலசான்றுகளை உமக்கும் அறிவிக்கிறேன்.



ஆதன் பெயர்க்காரணம் : 


மூச்சுக்காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகையுண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது. உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ். ஆதன் என்பது உயிர்வளி. உயிர் என்றும் பொருளாகும்.

வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது.

ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர்.

ஆதன் பெயர்கள் :


1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் - புறம் 2

2. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் - புறம் 8

3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் - புறம் 62

4. பெருஞ்சேரலாதன் - புறம் 65

5. ஆதன் அழிசி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நன்பர்களுள் ஒருவன் - புறம் 71

6. ஆதன் - ஓரியின் தந்தை - புறம் 153

7. நெடுவேள் ஆதன் - போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன் - புறம் 338

8. நல்லியாதன் - ஓய்மான் நல்லியக்கோடன் - புறம் 376

9. ஓய்மான்வில்லியாதன் - இலங்கையரசன் - புறம் 379

10. ஆதனுங்கன் - வேங்கடநாட்டு அரசன் - புறம் 389

11. ஆதன் - வாட்டாற்று எழினியின் மகன் - புறம் 396

12. ஆடுகோட்பாட்டச்சேரலாதன்

13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

14. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்

15. ஆதனூர் - "மேற்காநாட்டு ஆதனூர்" - திருட்தொண்டர் மாக்கதை.

*******************

நன்றி. வணக்கம்.

பதிவிற்கு உதவிய நூல்கள் :
1. புறநானூறு நூல்
2. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
3. சங்ககாலவரசர் வரிசை நூல்
4. பெரியபுராணம்.

தொகுப்பு  : தனித்தமிழாளன்

Wednesday, September 18, 2019

உதயசூரியன் சின்னத்தை உருவாக்கிய இரட்டைமலையார்

உதயசூரியன் சின்னத்தை உருவாக்கிவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் : 

தற்காலத்தமிழ்த்தேசியர்க்கு திராவிட அடிமை.

உதயசூரியன் சின்னம் யார் சிந்தனையில் முதன் முதலில் உதயமானது என்று தேடிப்போனால் கண்டடையும் முகம் இரட்டைமலை சீனிவாசனார்.



1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை இயக்க மாநாட்டுக்காக ஒரு கொடி தயார் செய்யப்பட்டது. தியாகராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர், பெரியார் உருவம் தாங்கிய அந்தக் கொடியில் சூரியன் உதிப்பதுபோல இருக்கும். ஆனால், இரண்டு மலைகளில் இருந்து உதயம் ஆவதைப் போன்ற சின்னம் ரெட்டைமலை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் உருவாக்கியதாக அமைந்திருந்தது.

‘சென்னை மாகாண செட்யூல்டு வகுப்பினர் ஃபெடரேஷன்’ என்ற அமைப்பை 1936-ல் இவர் தொடங்கியபோது அந்த அமைப்புக்கு சூரியன்தான் சின்னமாக அமைந்து இருக்கிறது. சூரியனைவைத்து கொடி தயாரித்துள்ளார். மாநாடுகளில் அந்தக் கொடியையே ஏற்றியுள்ளார். அதனால், அந்தக் கட்சிக்கு ‘சூரியக் கட்சி’ என்ற பெயரும் இருந்து உள்ளது.

சுவர் விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள், இரண்டு மலைகளுக்கு நடுவே சூரியன் உதயமாவதைப்போல. ரெட்டைமலை சீனிவாசனின் பெயரில் இருந்த இரட்டை மலைகளை வரைந்து அதில் இருந்து சூரியன் உதயமாவதைப்போல அந்தக் காலத்தில் வடிவம் கொடுத்துள்ளார்கள். இந்த அமைப்புக்காக குடியாத்தம் பகுதியில் இருந்து எஸ்.பி.பாலசுந்தரமும், ஜெ.ஜெ.தாசும் இணைந்து 1941-ல் ஓர் இதழ் தொடங்கினார்கள். இந்த இதழின் பெயர் ‘உதயசூரியன்.’

“உதயசூரியன் இதழில்தான் இரண்டு மலைகளுக்கு நடுவில் உதயசூரியன் இருப்பது போன்ற சின்னம் வரையப்பட்டது’’ என்கிறார் ரெட்டைமலை சீனிவாசனின் பேத்தி முனைவர் நிர்மலா அருட்பிரகாசு.

ரெட்டைமலை சீனிவாசன் மனதில் உதயசூரியன் எப்படி உதித்தது? இளம் பருவத்தில் இருந்தே தினமும் சூரியனை வணங்கும் பழக்கத்தை விடாமல் கடைப்பிடித்தவர் அவர். அது அவரது இறை நம்பிக்கை.

பட்டியல் இனத்து மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று புதுப் பெயர் வைத்து கோயிலுக்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை காந்தியின் நிர்மாணத் திட்டங்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்தபோது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அதனை எதிர்த்தார் ரெட்டைமலை சீனிவாசன்.

‘‘ஒரு காலத்தில் இந்தக் கோயில்கள் எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தவை. அதில் இருந்து எங்களை விரட்டிவிட்டு கைப்பற்றிக்கொண்டீர்கள். எங்களுக்குச் சொந்தமான கோயில்களைத் திரும்பக் கேட்காமல் அதனுள் நுழைய மட்டும் அனுமதி கேட்பது என்ன நியாயம்?’’ என்று கேட்டார் ரெட்டைமலை சீனிவாசன். ‘‘ஆலயத்துக்குள் அனுமதித்தால் மட்டும் சாதி இழிவு போய்விடாது” என்றும் சொன்னார்.

சாதிக் கொடுமையில் இருந்தும், தீண்டாமைத் தீ வினையில் இருந்தும் விடுபட வேண்டுமானால், இந்து மதத்தில் இருந்து மாற்று மதத்துக்கு மாற வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னபோது, காந்தி உள்ளிட்ட பலரும் எதிர்த்தார்கள். அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் ரெட்டைமலை சீனிவாசனும் எதிர்த்தார்.

‘‘நாம்தான் இந்து மதத்தில் இல்லையே. அவர்ணஸ்தர் அதாவது, வருணம் அற்றவர் ஆயிற்றே! இந்துக்களே அல்லாத நாம் இந்து மதத்தில் இருந்து எப்படி விலக முடியும்?’’ என்று கேட்ட இவர், ‘‘ஆதி திராவிடர் மதம் மாறுவது தேவையற்றது. எந்த மதத்துக்கு மாறினாலும் இழிவுபோகாது’’ என்று சொன்னார்.

இளமைக்காலம் முதல், தான் அனுபவித்த தீண்டாமைக் கொடுமையே அவரை இப்படி யோசிக்க வைத்தது. இந்தச் சமூக அழுக்கைத் துடைப்பதற்காகவே 1890-ம் ஆண்டு திராவிட மகாசன சபையை பண்டித அயோத்திதாசருடன் இணைந்து தொடங்கினார். பிறகு தனது அமைப்பின் பெயரை, ‘ஆதிதிராவிட மகாசன சபை’ என மாற்றினார். ‘பறையன்’ என்ற இதழைத் தொடங்கினார். ‘‘எந்த வார்த்தையைச் சொல்லி இழிவுபடுத்துகிறார்களோ, அதையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

1894-ல் இவர் அனுப்பிய விரிவான மனுதான், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிகமோசமான சாதி, தீண்டாமைக் கட்டமைப்பு தலைவிரித்து ஆடுகிறது என்பதை பிரிட்டிஷ் அரசுக்கு உணர்த்தியது. இதன்பிறகு உருவாக்கப்பட்டதே தொழிலாளர் நல ஆணையம். இதுதான் பட்டியல் இன மக்களுக்குக் கல்வி நிலையங்கள், குடியிருப்புகள், மனைகள், விவசாய நிலங்கள் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்க வழி வகுத்தது.

இந்தக் கோரிக்கைகளை நேரடியாக பிரிட்டிஷாரிடம் சொல்வதற்காக லண்டன் பயணமானார். லண்டன் செல்வதற்கு முன் தென்னாப்பிரிக்கா போனார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அங்கேயே தங்கிவிட்டார். அங்கு காந்திக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. அனைவரும் பார்த்து இருப்பீர்கள், எம்.கே.காந்தி என்று தமிழில் காந்தி போட்ட கையெழுத்தை. அதைக் கற்றுக்கொடுத்தவர் இந்த ரெட்டைமலை சீனிவாசன்தான். 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு மீண்டும் வந்தவர், முன்னிலும் உற்சாகமாகப் போராடத் தொடங்கினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டமேஜை மாநாட்டில் பங்கெடுத்தவர் ரெட்டைமலை சீனிவாசன். ஜார்ஜ் மன்னரையும் ராணியையும் வின்சர் கேஸல் மாளிகையில் ரெட்டைமலை சீனிவாசன் சந்தித்தார். மன்னர் கைகொடுத்தார். சீனிவாசன் கை கொடுக்கவில்லை. ‘‘என்னைத் தொட்டால் உங்களுக்கு தீட்டுப் பட்டுவிடும்’’ என்றார் இவர். ‘‘அப்படியா... தீண்டாமை என்றால் என்ன?’’ என்று ஜார்ஜ் மன்னர் கேட்டார். ‘‘எங்கள் நாட்டில் மேல்சாதிக்காரன், கீழ்சாதிக்காரனை தொடமாட்டான். தொட்டால் தீட்டாகிவிடும்’’ என்றார்.

 ‘‘அப்படியானால் கீழ்சாதிக்காரன் தெருவில் விழுந்தால் மேல்சாதிக்காரன் தொட்டுத் தூக்கமாட்டானா?’’ என்று ஜார்ஜ் மன்னர் திருப்பிக் கேட்டார். ‘‘தூக்க மாட்டான்’’ என்றார் ரெட்டைமலை சீனிவாசன். ‘‘அப்படி நடக்க எனது ராஜ்யத்தில் நான் விடமாட்டேன்’’ என்ற ஜார்ஜ், ரெட்டைமலை சீனிவாசனின் இரண்டு கையையும் பிடித்துக் குலுக்குகிறார். ‘‘அன்புக்குரிய இந்திய மக்கள் வளமுடன் ஆனந்தமாக வாழ வழிகாட்டிய மாமனிதர்களின் வரலாற்றில் உங்கள் பெயரும் இடம்பெறும்’’ என்று அப்போது ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் சொன்னது இவரைத்தான்.

இப்படி வாழ்நாள் முழுவதும், சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர், திராவிட என்னும் பெயரில் புரட்சி செய்ததால், தற்கால தமிழ்த்தேசியர்கள் பாங்கில் போற்றவேண்டுமென்றால் திராவிட அடிமை இரட்டைமலை சீனிவாசன் நினைவைப்போற்றுவோம்.

*******
நன்றி, விகடன்.

தனித்தமிழாளன்

Tuesday, September 17, 2019

பெரியாரைப்பற்றி தமிழறிஞர்கள் கூறியது

பெரியாரைப்பற்றி தமிழ்த்தேசியத்தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் கூறியது :




பெரும்பணியைச் சுமந்த உடல்
பெரும்புகழைச் சுமந்த உயிர்
“பெரியார்” என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை!
அழற்கதிரைச் சுமந்த மதி!
அறியாமை மேல்
இரும்புலக்கை மொத்துதல் போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா, இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்றதம்மா!

மணிச்சுரங்கம் போல்அவரின்
மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த
மழலைக் கொச்சை!
அணிச்சரம் போல் மளமளவென
அவிழ்கின்ற பச்சை நடை!
ஆரியத்தைத்
துணிச்சலுடன் நின்றெதிர்த்துத்
துவைத்தெடுத்த வெங்களிறு!
தோல்வியில்லாப்
பணிச்செங்கோ! அடடா, இப்
பகுத்தறிவைத் தமிழ் நாடும்
சுமந்த தம்மா!

உரையழ கிங்கெவர்க்குவரும்?
உடலழகிங் கெவர்பெற்றார்?
ஒளிர்முகத்தின்
நரையழகிங் கெவர்க்குண்டு?
நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடை நடந்து
திரையுடலை, நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரைகடலை அடடா இவ் வெரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்ததம்மா!

எப்பொழுதும் எவ்விடத்தும்
எந்நேரமும் தொண்டோ டினைந்த பேச்சு! முப்பொழுதும் நடந்தநடை!
முழுஇரவும் விழித்தவிழி!
முழங்குகின்ற
அப்பழுக்கி லாதவுரை!
அரிமாவை அடக்குகின்ற அடங்காச் சீற்றம்! எப்பொழுதோ, அடடா, இவ்
வேந்தனையித்
தமிழ்நாடும் ஏந்தும் அம்மா?

பெற்றிழந்தோம், பெரியாரை!
பெற்றிழந்தோம்! அவரின்
பெருந்த லைமை
உற்றிழந்தோம்; உணர்விழந்தோம் உயிரிழந்தோம்; உருவிழந்தோம்!
உலையாத் துன்பால்
குற்றுயிராய்க் குலையுயிராய்க் கிடக்கின்ற தமிழினத்தைக்
கொண்டு செல்லும்
தெற்றுமணித் தலைவரினை,
அடடா, இத் தமிழ்நாடும்
நெகிழ்ந்ததம்மா!

பெரியாரைப் பேசுகின்றோம்;
பெரியாரை வாழ்த்துகின்றோம்;
பீடு, தங்கப் பெரியாரைப் பாடுகின்றோம்; பெரியார்நூல் கற்கின்றோம்;
பீற்றிக் கொள்வோம்!
உரியாரைப் போற்றுவதின் அவருரைத்த பலவற்றுள் ஒன்றை யேனும்
சரியாகக் கடைப்பிடித்தால்
அடடா, இத் தமிழ்நாடும்
சரியாதம்மா!

           - பாவலரேறு பெருஞ்சித்திரனார். 1973

*************

ஒளியைப் பரப்பிய ஊழித் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்
பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால் - ஊசிய
கருத்தை உரைத்த புராணங்கள், வேத அழுக்குகள், பொய்ம்மை விளக்கங்கள் - ஊதை
உளுத்தைகள் நச்சிலா உரைகளா?

*************

பெரியார் உணர்வினைப்பாவேந்தர் பீடினை அறியாத் தமிழராய், ஐயகோ, அழிகிறோம்! தமிழர் இனமே! தாழ்ந்துபோம் இனமே! : இமியும் பொறுத்திடற் கில்லை! இனியேனும் அமிழா உணர்வினால் ஆர்ந்துடன் எழுகவே!

           - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1983

*******************

பெரியாரைப்பற்றி தமிழ்த்தேசியக்கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் :




அவர்தாம் பெரியார் - பார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்                                                                                                                 (அவர்தாம்)

மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு
வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப்பெரும்படையின்தொகுப்பு                                                                                                 (அவர்தாம்)

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்                                                                                                               (அவர்தாம்)

                 - கனக சுப்புரத்தினம்

***************

பெரியாரின் பார்ப்பானிய எதிர்ப்பைப்பற்றி தமிழ்த்தேசியக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் :




பார்ப்பனியம் மேலென்று சொல்லிச் சொல்லிப்
        பழையயுகப் பொய்க்கதைகள் காட்டிக் காட்டி
வேர்ப்புறத்தில் வெந்நீரை வார்த்து வார்த்து
        மிகப்பெரிய சமூகத்தை இந்நாள் மட்டும்
தீர்ப்பரிய கொடுமைக்குள் ஆக்கி வைத்த
        செயல்அறிந்து திடுக்கிட்ட தலைவா! உன்னை
ஊர்ப்புறத்து மாந்தரெலாம் உணருங் காலை
        உவக்கின்றாய் உன்பணியில் ஓய்ந்தாய் இல்லை
ஆர்ப்பரித்தே பணிசெய்த தன்மை கண்டோம்
        அப்பணிக்கே நாங்கள்உனை வணக்கம் செய்தோம்.

                                                        - பாவேந்தர்

*****************

பெரியாரைப்பற்றி தமிழ்த்தேசியர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் :




தமிழன் விடுதலை தலைவர் மூவருள்
அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்
தமியின் மொழியினர் தவநன் மறைமலை
இமிழ்தன் மானியர் இராமசாமியார்

                                         - தேவநேயர்

தமிழினத்தை காக்க, முன்னேற்ற மூவர் தோன்றினர்கள் அவர்கள் திருவள்ளுவர், மறைமலையடிகள், மற்றும் பெரியார்.

**************

பெரியாரைப்பற்றி தனித்தமிழியக்கத்துத் தந்தை மறைமலையடிகள் கூறியது :



நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்

Sunday, September 15, 2019

தனித்தமிழியக்கம் தோன்றக் காரணம்

தனித்தமிழியக்கம் காண காரணப்பா:


பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற #_தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

     - திருவருட்பா, 2ஆம் திருமுறை.

செந்தமிழோடு வடமொழியைச்சேர்த்து எழுதிப்பேசிய மணிப்பிரவாளநடை என்னும் இழிநிலை தமிழுக்கு நேர்ந்தகாலத்தில் தனித்தமிழியக்கம் தோன்றியது.



மறைமலையடிகள், தம் மகளார் நீலாம்பிகை அம்மையாரோடு தம்முடைய தோட்டத்தில் உலாவிவரும்போது, மறைமலையடிகள், வள்ளலாரின் "பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்" என்னும் மேற்கண்ட பாடலைப் பாடிவிட்டு, தம் மகளை நோக்கி, அம்மா, இப்பாடல் நல்ல தனித்தமிழில் உள்ளது. ஆனால், இதில் தேகம் என்னும் வடமொழியை நீக்கி, யாக்கை என்னும் தனித்தமிழ்ச்சொல்லை பயன்படுத்தியிருந்தால் மிகவும் இனிமையாக இருந்திருக்கும்.

இப்படி தமிழில் வடமொழியைக்கலப்பதால் தமிழின் இனிமை கெட்டுவிடுவதோடு காலப்போக்கில் அத்தமிழ்ச்சொற்களும் மறைந்துவிடும் என்று கூறினார். இவற்றை எண்ணிப்பார்த்த அடிகளும் அம்மையாரும், அன்று முதல் தனித்தமிழிலேயே நாம் உரையாடுவோமென்று உறுதிபூண்டனர். இவ்வரலாற்றை அம்மையார் தமது "தனித்தமிழ்க்கட்டுரைகள்" என்னும் நூலில் முகவுரையாக எழுதியுள்ளார். அம்மையார் மற்றும் மறைமலையடிகளின் இவ்வுறுதிப்பாடு தனித்தமிழியக்கமாகத் தோன்றி வளர்ந்தது.

இவ்வியக்கம் 1916 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், பரிதிமாற் கலைஞர், கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள்.

வடமொழியிலிருந்த தம் இல்லத்தார் பெயர்களை, அடிகளார் தனித்தமிழில் மாற்றினார்.

வேதாசல சுவாமிகள் - மறைமலையடிகள்
திருஞானசம்பந்தன் - அறிவுத்தொடர்பன்
மாணிக்கவாசகம் - மணிமொழி
சுந்தரமூர்த்தி - அழகுரு
திரிபுரசுந்தரி - முந்நகரழகி
குஞ்சிதபாதம் - தூக்கிய திருவடி என்று மாற்றினார்.

அவர் நடத்திய மாதஇதழ் ஞானசாகரம் - அறிவுக்கடல் என்றாயிற்று. அவர் நடத்திய சன்மார்க்கசங்கம் - பொதுநிலைக்கழகம் என்றாயிற்று.

ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் முதன்முறையாகத் தமிழ்நிலத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டன.

காங்கிரசிலிருந்து விலகிய ஈ.வே.ரா. பெரியார் திராவிட இயக்கம் தொடங்கினார். பார்ப்பனர்களுக்கு அவர் எதிர்ப்புத்தெரிவிக்க மறைமலையடிகளின் ஆராய்ச்சியே பயன்பட்டது. அக்காலத்தில் மேடையில் பேசும்போது “பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்“ என்னும் மறைமலையடிகளில் நூலைக் கையில் வைத்துக்கொண்டு பேசினார். அவருடைய இயக்கத்தாரும் அவருடைய கருத்துகளையே எடுத்துப்பரப்பி வந்தனர்.

மறைமலையடிகளைப் பின்பற்றியே தமிழ்த்திருமணம், தமிழர்மதம் ஆகிய கொள்கைகளைப் பெரியார் பரப்பினார். ஆரிய ஏமாற்று, மூடநம்பிக்கைகள், மதச்சடங்குகள், முதலியவற்றையும் பெரியார் மக்களிடத்தில் பரப்பினார். தி.மு.க வும் அதே கருத்துகளைப் பெரிய அளவில் மக்களிடத்தில் பரப்பியது. மக்களிடத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தி.மு.க வினர் வடமொழியிலிருந்த தம் பெயர்களைத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டனர்.
தமிழ்த்திருமண நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பண்பாட்டு மீட்பும் தமிழ்க்காப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படத்தொடங்கின. தமிழறிஞர் மறைமலையடிகளின் எண்ணத்தைப் பொதுமக்களின் எண்ணங்களாக மாற்றி வாழ்க்கை முறை அடியோடு மாறுவதற்குத் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும், தி.க. வும் திமு.க.வும் கரணியராய் அமைந்தனர்.

தனித்தமிழியக்கம் செய்த இத்தகைய பெரும்புரட்சியால் மணிப்பிரவாளநடை என்னும் இழிநிலை தமிழைவிட்டகன்று தனித்தமிழ் நிலைபெற்றது. இத்தமிழியக்கங்கண்ட மறைமலையடிகளின் நினைவுநாள் இன்று.

நம் செயலகளால் மறைமலையடிகளின் உயிர் அமைதி பெற்றிருக்குமா? ஒரு நூற்றாண்டுகாலம் புரட்சிசெய்து தனித்தமிழைக்காத்த வரலாறுகளையெல்லாம் மறந்துவிட்டு மிகச்சாதாரணமாக பிறமொழிகளை தமிழில் கலந்து, குற்றவுணர்வு சிறிதுமின்றி தமிழின் தனித்தன்மையை குலைத்துக்கொண்டிருக்கிறோம் நாம். தமிழைக்காத்த சான்றோர்க்கு, இதுவா நாம் செய்யும் கைமாறு? வெட்கித்தலைகுனியுங்கள் தமிழர்களே.

தனித்தமிழியக்கத்துத் தந்தை மறைமலையடிகள் மறைந்த இந்த நாளிலாவது, தனித்தமிழே பேசுவோம் எழுதுவோம் என்னும் உறுதிமொழியைக் ஏற்கவேண்டும் நாம்.

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்

Saturday, September 14, 2019

மறைமலை மறைந்தநாள்

"மறைமலை மறைந்த நாள்"


தனித்தமிழியக்கத்துத்தந்தை மறைமலையடிகள் மறைந்த நாள் இன்று.



அடிகள் ஆக்கிய நூல்கள்  :


1) பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
2) மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
3) மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
4) யோக நித்திரை: அறிதுயில் (1922)
5) தொலைவில் உணர்தல் (1935)
6) மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
7) சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
8 ) சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
9) ஞானசாகரம் மாதிகை (1902)
10) Oriental Mystic Myna Bimonthly (1908-1909)
11) Ocean of wisdom, Bimonthly(1935)
12) Ancient and Modern Tamil Poets (1937)
13) முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
14) முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
15) பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
16) சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
17) முதற்குறள் வாத நிராகரணம் (1898)
18) திருக்குறள் ஆராய்ச்சி (1951)
19) முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
20) மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
21) அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
22) கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
23) குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) (1911)
24) மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
25) அறிவுரைக் கொத்து (1921)
26) அறிவுரைக் கோவை (1971)
27) உரைமணிக் கோவை (1972)
28) கருத்தோவியம் (1976)
29) சிந்தனைக் கட்டுரைகள் (1908)
30) சிறுவற்கான செந்தமிழ் (1934)
31) இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
32) திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
33) மாணிக்க வாசகர் மாட்சி (1935)
34) மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
35) மாணிக்க வாசகர் வரலாறு (1952)
36) சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
37) சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
38) கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
39) திருவாசக விரிவுரை (1940)
40) சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
41) துகளறு போதம், உரை (1898)
42) வேதாந்த மத விசாரம் (1899)
43) வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
44) Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
45) சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
46) சிவஞான போத ஆராய்ச்சி (1958)
47) Can Hindi be a lingua Franca of India? (1969)
48) இந்தி பொது மொழியா ? (1937)
49) Tamilian and Aryan form of Marriage (1936)
50) தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
51) பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
52) வேளாளர் நாகரிகம் (1923)
53) தமிழர் மதம் (1941)
54) பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)

ஆகிய 54 நூல்கள்.

நன்றி
தனித்தமிழாளன்

Wednesday, September 11, 2019

ஆரியமொழிந்து தமிழைப்போற்றிய வள்ளற்பெருமான்

ஆரியமொழிந்து தமிழைவிரும்பிய வள்ளற்பெருமான்:




"இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.

இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

இங்ஙனம்,
- சிதம்பரம் இராமலிங்கம் "

{ சமரச சுத்த சன்மார்க்க சத்தியப்பெருவிண்ணப்பம்}

தமிழர்விழவு திருவோண நன்னாள்

தமிழர்விழவு திருவோண நன்னாள்:


உலகத்தமிழர்கட்கு ஓணநன்னாள் வாழ்த்துகள். திருவோணத்திருவிழவு தமிழரின் நன்னாள் என்பதற்குக் கிடைக்கும் சான்றுகளான சில :

மதுரைக்காஞ்சி, பெரியாழ்வாரின் திருப்பால்லாண்டு, திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு ஆகியனவாகும்.



தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சி 590 முதல் 605 அடிகள் வரை :


"கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய #_வோண_நன்னாள்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம்பர லுறுப்ப
கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதர
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து
பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்
திவவுமெய்ந் நிறுத்துச் #_செவ்வழி பண்ணிக்
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி"

***********************************

நாலாயிரப்பனுவலில் பெரியாழ்வாரின் திருப்பால்லாண்டு :


எந்தைதந்தைதந்தை தந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் #_திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய் மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித்
#_திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9

***********************************

திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு:


"மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி #_ஓண_விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

{ஐப்பசியில் ஓணவிழவு கொண்டாடியதாக சம்பந்தர் குறிப்பிடுகிறார்}

************************************

தரவு நூல்கள் :
1. மதுரைக்காஞ்சி
2. நாலாயிரப்பனுவல், மற்றும்
3. தேவாரம்

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Wednesday, August 14, 2019

வான்பொய்ப்பினும் பொய்யாக் காவிரி - பட்டினப்பாலை

வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரி:

நூல் : பட்டினப்பாலை முதலேழு அடிகள்


நூல்களைப் படிக்கும்போது நமக்கு ஏதோவொரு சொல்லோ, தொடரோ நம் மனத்தில் பதிந்துவிடும். அப்படி பட்டினப்பாலையில் எனக்குப் பெருவியப்பைத்தந்து மனத்தில் பதிந்த ஒருதொடர் "வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரி" என்னும் சொற்றொடர். தமிழ்நாட்டில் மழைபெய்யாமல் காவிரியில் மட்டும் அளவிறந்த நீர் நமக்கு கிடைக்கிறது என்னும் செய்தியைக்கேட்டதும், என் நினைவிற்கு வந்தது இச்சொற்றொடர் தான்.



பத்துப்பாட்டுள் திருமாவளவனாகிய கரிகாற்பெருவளத்தானை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில், சோணாட்டுள் பட்டினமாகிய காவிரிப்பூம்பட்டினத்தை வளஞ்செய்கின்ற காவிரியின் சிறப்பை, நூலின் முதலேழு அடிகளில் பாடி சிறப்புச்செய்கிறார் புலவர்.

"வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவின்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்."

உரை :


குற்றமில்லாத புகழுடனே விளங்குகின்ற வெள்ளியாகிய மீன், தன்னுடைய திசையாகிய வடக்கிலிருந்து மாறி தெற்கிற்குப் போனாலும், வானின் நீரை உணவாகவுடைய, தன்னைப்பாடிய வானம்பாடியென்னும் பறவை, உணவின்றி வருந்தும்படி, மழை பெய்தலைத் தவிர்ந்து, வானம்பொய்த்துப் பஞ்சமுண்டானாலும், தான் தவறாமல் காலந்தோறும் பெருக்கெடுத்துவருகின்றதும், குடகுமலையினடத்தே தலையை {தொடக்கத்தை} உடையதும், கடலினிடத்துச் சேர்வதுமான காவிரி, தன் நீரைப்பரவி பொன்னைக் கொழிக்கும்.

{வெள்ளிக்கோள் வடதிசையிலிருப்பது இயல்பு. அது, தென்திசை சாய்ந்திருப்பின் அது பஞ்சத்திற்கு அறிகுறியென்று எண்ணுவது பண்டைத்தமிழர் வழக்கு. இது, பதிற்றுப்பத்து மற்றும் இன்னபிற நூல்களால் அறியப்படும் செய்தி}

*****************************

"வானம் பொய்த்துப்போனாலும் காவிரி பொய்க்கமாட்டாள்" என்னும் உருத்திரங்கண்ணனாரின் ஈராயிரமாண்டுகளுக்கு முந்தைய செஞ்சொல்வாக்கும் பொய்க்கவில்லை. இதை அன்றே கூறிச்சென்ற புலவரை எண்ணி பெருவியப்படைந்தேன். காவிரியாள், தன்மக்களை எப்போதும் கைவிட்டதில்லை, இப்போதும் கைவிடவில்லை. ஆனால் இப்போது, ஆண்டவர்களும் ஆள்பவர்களும் தான் பொன்னி தரும் பொன்னைப் பாதுகாக்காமல் கைவிட்டுவிட்டனர். மேட்டூர் அணை தூர்வாரப்படவேயில்லை, முக்கொம்பு தடுப்பணை இன்னும் சீர்செய்யப்படவில்லை. நீர்வரும்வழிகளைத் தூர்வாரவில்லை, நீரைச்சேமிக்கும் திட்டங்களும் இல்லை, பொதுப்பணித்துறை உயிரோடிருக்கிறதா செத்துத்தொலைந்துவிட்டதாவென்றும் தெரியவில்லை.

******************************

தரவு : பட்டினப்பாலை நூல்
படம் : புகைக்கும்கல் என்னும் ஒகேனக்கல் அருவிகள். அருவிகளையே மூழ்கடித்துப் பாயும் காவிரி.

நன்றி, வணக்கம்.
தனித்தமிழாளன்

Monday, August 12, 2019

கலித்தொகை - தோழிகூற்று

கலித்தொகை - ௧௩௩ 

நெய்தற்கலி - தோழிகூற்று
பாடியவர் : நல்லந்துவனார்


மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன்
கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த
நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப்
பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்

ஆற்றுதலென்பதொன் றலந்தவர்க் குதவுதல்
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுத
லன்பெனப் படுவது தன்கிளைசெறாஅமை
யறிவெனப்படுவது பேதையார் சொன்னோன்றல்
செறிவெனப்படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறரறியாமை
முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

ஆங்கதையறிந்தனி ராயினென் றோழி
நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க
தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைத
னின்றலை வருந்தியா டுயரஞ்
சென்றனை களைமோ பூண்கநின் றேரே.

                                                 - நல்லந்துவனார்

'வரைவு உடம்பட்டோர்க் கடாவல் வேண்டினும்' என்பதனால், தலைவன் தெருளாதவனைத் தெருட்டி, வரைவு கடாயது.




தனக்கு வலியைத்தரும் என்று கருதித் தான் வழிபட்ட தெய்வம் தன்னைச் சேர்ந்தவர்கட்கு நெஞ்சழியும் நோய் கைமிகும்படி வருத்தமாகிய தன்மைபோல நின்னைத்தனக்குவலியென்று வழிபட்டஎன்றோழியை நீ செய்த பழி எங்கும்பரந்து அலர்தூற்றுகையினாலே உண்டான மிக்க நினைவு வருத்த, நீங்குதல் கொடிதுகாணெனத் தோழி வரைவுகடாயினாள்.

பொருள்:


முண்டகப் பூ, தில்லைப் பூக்களோடு சேர்ந்து மலர்ந்திருக்கும் கானல் நிலத்தில் உயர்ந்த மணல் மேட்டில், கையில் கரகம் தொங்கவிட்டுக்கொண்டிருக்கும் முனிவன் போல, தாழம்பூ மலர்ந்து தொங்கும் தொங்கும் துறையை உடையவனே, நான் சொல்வதைக் கேள்.

ஆற்றுதல் என்பது அலைக்கழிவோருக்குத் தொண்டாற்றி உதவுதல். போற்றுதல் என்பது தம்மைப் புணர்ந்தவரைப் பிரியாமல் இருத்தல். பண்பு என்று சொல்லப்படுவது பெருமை தரத்தக்கது எது என அறிந்து அதன்படி நடத்தல்.
அன்பு எனப்படுவது தன் உறவுக்காரர்களை விட்டு விலகாமை. அறிவு என்று சொல்லப்படுவது அறியாவர் சொல்லும் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்.
செறிவு எனப்படுவது சொன்ன சொல்லை மறுத்துப் பேசாமை. நிறை எனப்படுவது தான் மறைக்கவேண்டடிய நிகழ்வுகளை பிறர் அறியாவண்ணம் நடந்துகொள்ளுதல்.
முறை எனப்படுவது குற்றம் செய்தவனுக்கு இரக்கம் காட்டாமல் அரசன் அவன் உயிரை வாங்குதல். பொறை எனப்படுவது. தன்னைப் போற்றாதவர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.

இவற்றை இப்படி நீர் அறிந்தவர் ஆயின், என் தோழியின் நலத்தை உண்டபின் அவளைக் கைவிடுதல் என்பது, பால் குடிப்பவர் குடித்த பின்னர் பால் இருந்த பாத்திரத்தைத் தூக்கி எறிதல் போன்றது. உனக்காக அவள் வருந்திக்கொண்டிருக்கிறாள். அவளது துன்பத்தை நீ போக்க வேண்டும். அதற்காக நீ செல்ல உன் தேரைப் பூட்டுக.

இந்தி - இந்திய ஒன்றியத்தின் தேசியமொழியல்ல

இந்தி என்பது இந்தியத்துணைக்கண்டத்தின் தேசியமொழியல்ல.

இந்தியாவிற்கென எந்த தேசியமொழியுமில்லையென்று உறுதிப்படுத்தியது இந்திய அரசு. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட செய்தி.




நன்றி: "இந்தி திணிப்புக்கு எதிரான மக்கள் இயக்கம்" முகநூல் பக்கம்.

ஆடித்திருவாதிரை இராசேந்திரசோழன் பிறந்தநாள்:

ஆடித்திருவாதிரை இராசேந்திரசோழன் பிறந்தநாள்:


"அய்யர் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் (இராசேந்திர சோழன்) பிறந்த ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்.."

- திருவாரூர்க் கல்வெட்டு.


குறுந்தொகையில் நற்றலைவனின் உறுதிமொழி

குறுந்தொகையின்கண் ஓர் தலைவிக்கு ஓர் நற்றலைவனின் உறுதிமொழி :


நூல் : குறுந்தொகை - 40
திணை : குறிஞ்சி
பாடியவர் : செம்புலப்பெயல்நீரார்

"இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர்ப் பிரிவரெனக்கருதி அஞ்சிய தலைமகளது குறிப்புவேறுபாடுகண்டு தலைமகன் கூறியது".





மூலப்பா:


யாயு ஞாயும் யாரா கியரோ
வெந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெயனீர் போல
வன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.

சீர்பிரித்த எளியவடிவப்பா:


யாயும் யாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பொருள் : 


தலைவனும் தலைவியும் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்னர், தலைவன் தன்னைவிட்டுப்பிரிந்துவிடுவானோ எனவெண்ணி அஞ்சுகிறாள் தலைவி. தலைவியின் செயல்குறிப்புகளால் அதை உணர்ந்த தலைவன், தலைவிக்குத் 'தான் பிரியமாட்டேன்' என்பதை இப்பாடலால்  உறுதிகூறுகிறான்.

என் தாயும் நின் தாயும் யார்யாரோ. என் தந்தையும் நின் தந்தையும் எம்முறையில் உறவினர்கள்? இதற்கு முன்பு யானும் நீயும் எவ்வழியில் அறிந்தவர்கள்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் இயற்கையாக கலந்தது போல, அன்புடைய நம் இருவர் நெஞ்சமும் தாமாகக் கலந்துவிட்டன இப்போது.

இப்படி இயற்கையாகக் கலந்த மண்ணையும் நீரையும் எவ்வாறு பிரிக்கமுடியாதோ, அதுபோல இயற்கையான அன்பால் இணைந்த நம்மிருவரிடையே பிரிவு உண்டாகாது என்று தலைமகளுக்கு மண்ணையும் நீரையும் உவமைகாட்டி மறைபொருளாக உறுதிகூறுகிறான் நற்றலைவன்.

***************

இதைவிட நல்ல அறவுறுதியை நல்லுவமைகூறி புலமையுடனாகிய பாவால் ஈராயிரமாண்டுகளுக்கு முன்பு உலகில் வேறு எம்மொழியாலும் கூறிவிடவியலுமா? இப்பாவை இயற்றிய புலவரின் பெயர் அறியக்கிடைக்கவில்லை. இப்பாட்டின்கண் வரும் "செம்புலப்பெயல்நீர்" என்னும் செவ்வுவமைச்சொல்லால் "செம்புலப்பெயல்நீரார்" என்னும் பெயரால் அடையாளங்காட்டப்படுகிறார். {செம்புலப்பெய்ந்நீர் என்றும் பாடவேறுபாடுண்டு}

பாடியவர் : செம்புலப்பெயல்நீரார்
உரை : தனித்தமிழாளன்

நன்றி. வணக்கம்.

வள்ளுவர் வாக்கில் நட்பு

நட்பை பற்றி வள்ளுவர் உரைத்தவை :


மனிதனுக்கு நட்பென்பது எந்த அளவிற்கு இன்றியமையாததென்பதை விளக்கவே, திருவள்ளுவர் ஐந்து அதிகாரங்களில் ஐம்பது குறட்பாக்களைப்பாடி நட்பை வலியுறுத்தியுள்ளார்.




அதிகாரவெண் மற்றும் அதிகாரம்


௭௯) நட்பு (79)
௮०) நட்பாராய்தல் (80)
௮௧) பழைமை (81)
௮௨) தீநட்பு (82)
௮௩) கூடாநட்பு (83)

நட்பு : 

நட்பின் தன்மையையும் நட்பு எத்தகையதென்றும் நட்பின் சிறப்பை விளக்குகிறார்.

நட்பாராய்தல் : 

நன்கு ஆராய்ந்து நல்லவர்களோடு நட்புகொள்ளல் வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்.

பழைமை : 

பழைய நண்பர்களை விட்டுவிடக்கூடாதென்றும் அதன் சிறப்பையும் விளக்குகிறார்.

தீநட்பு :

தீயவர்களோடு நட்புகொள்ளக்கூடாதென்றும் அவர்களால் தீமையே ஏற்படும் என்று விளக்குகிறார்.

கூடாநட்பு : 

பொருந்தாத நட்பையும், யார்யாரிடம் நட்புகொள்ளக்கூடாதென்றும் அறிவுறுத்துகிறார்.

வேறு எதற்கும் வள்ளுவர் இத்தனை அதிகாரங்கள் படியாதாகத்தெரியவில்லை.

நட்பை சிறப்பிக்க நண்பர்கள் நாளைக் கொண்டாடும் வழக்கத்தை 1935ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசு தீர்மானம் நிறைவேற்றி ஆங்கிலேயன் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே நட்பு என்பது யாது? அதன் தன்மை, அது எவ்வாறு இருக்கவேண்டும், எத்தகையோரிடம் நட்புகொள்ளக்கூடாது என்று நட்பிற்கு இலக்கணம் வகுத்து இத்தனை விரிவாக விளக்கிய நம் பேராசான் திருவள்ளுவரைப் பெற்றது தமிழத்தாய் பெற்ற பெரும்பேறேயாம். இதைப்போல் பழைய அறநூல் உலகில் வேறெந்த மொழியிலும் இருக்காதென்று துணிந்துச்சொல்லலாம்.

தமிழ்க்குடியில் பிறந்ததற்கு நாம் மீப்பெருமைகொள்ள வேண்டும். உலகில் பலமொழிகள் தோன்றுவதற்கு முன்னமே மொழியில் சிறந்துவிளங்கி வாழ்வியல் இலக்கணநெறிமுறைகளை வகுத்தோர் பெருமைமிகுதமிழர்களாகிய நாம்.

நண்பர்கள் நாள் வாழ்த்துப்பெருக்கு

தமிழரென நெஞ்சுயர்த்திப் பெருமைகொள் தமிழா

வாழ்க வள்ளுவம், வாழ்க தமிழம்

நன்றி
தனித்தமிழாளன்

தமிழிலக்கியம் புகழ் நண்பர்கள் சிலர்

இலக்கியத்தில் நண்பர்கள் சிலர் :




1. கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையார், பொத்தியார், கண்ணகனார், பெருங்கருவூர்ச்சதுக்கத்துப் பூதநாதனார் ஆகியோரும்.

2. ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனும் மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகியோரும்.

3. பாரியும் கபிலரும்

4. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் சிறுகுடிப்பண்ணனும்

5. நன்னனும் மிஞிலியும்

6. இளங்கண்டீரக்கோவும் இளவிச்சிக்கோவும்

7. இளங்கோவடிகளும் சீத்தலைச்சாத்தனாரும்

8. சிவபெருமானும் நம்பியாரூரரும்

9. நம்பியாரூரரும் சேரமான்பெருமாளும்

**************
தொகுப்பு : தனித்தமிழாளன்

தரவு நூல்கள்: 


1. புறநானூறு 70, 71, 113, 151, 173, 212 முதல் 223
2. அகநானூறு 375
3. சிலப்பதிகாரம்
4. தேவாரம், திருத்தொண்டர் மாக்கதை

கலித்தொகையில் தலைவியின் உடன்போக்கு

கலித்தொகை ௯(9)ஆம் பாட்டு


பாலைக்கலி  - சேரமான் பெருங்கடுங்கோ


பண் : பழம்பஞ்சுரம் (இராகம் : சங்கராபரணம்)


கலித்தொகையில் தலைவியின் உடன்போக்கும் செவிலித்தாயின் தேடலும்



எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!'
'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,

நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே.

       -- பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ

பொருளுரை:


தலைவி, தான் விரும்பிய தலைவனுடன் உடன்போக்கு (ஓடிப்போதல்) நிகழ்த்திவிட்டாள். அவர்களைத்தேடி தலைவியின் செவிலித்தாய் செல்கிறாள். அவ்வாறு உடன்போக்கு நிகழ்த்துவோர் பாலைநிலத்திற்குச்செல்வர். பாலைநிலவழியே கள்வர்களும் முக்கோற்பகவர்களும் (துறவிகளும்) செல்வர். தலைவியை தேடிவரும் செலிவித்தாய் எதிர்ப்படும் முக்கோற்பகவரிடம் தம்மகளைப்பற்றி வினவுவதாக அமைந்துள்ளது இப்பாட்டு.

வெயிலில் நிழலுக்காக குடை பிடித்தும், நீர்க்கரகமும், கையிலே முக்கோலையும் பிடித்துக்கொண்டுவரும் துறவிகளே,

"என் மகள் ஒருத்தியும், பிறளின் மகன் ஒருவனும் தங்களுக்குள் காதல்கொண்டவர்கள். அப்படிப்பட்ட இருவரை இவ்வழியே காண்டீர்களா பெருமானே?"

துறவி சொல்கிறார், "காணாமலில்லை. கண்டோம். ஆண் என்பதற்கே உரிய அழகான ஒருவனோடு, சிறந்த அணிகலன்களை அணிந்தபெண்ணின் தாய் நீரே போலும்".

"மலையில் இருக்கும் ஆரம்(சாந்து, சந்தனம்), மலையிலே பிறந்தாலும், அந்த ஆரத்தால் மலைக்கு என்ன பயன்? அதை அரைத்து நறுமணம்வீச பூசிக்கொள்பவர்க்கு அல்லவா சந்தனம் உரிமையுடையது. அப்படி நினைத்தால், உம்மகள் உங்களுக்கு அத்தகையவளே.

கடலில் பிறக்கும் முத்து, அதை அணிந்துகொள்பவர்களுக்கு அல்லது, கடலிலே பிறந்தாலும், அந்த முத்தால் கடலுக்கு என்ன பயன்? அப்படித்தேர்ந்தால், உம்மகள் உங்களுக்கு அத்தகையவளே.

ஏழிசையானது அதைக்கேட்டு இன்புறுபவர்களுக்கன்றி, அவ்வேழிசை யாழிலே பிறந்தாலும் அந்த யாழுக்கு அவ்வேழிசையால் என்ன பயன்? அப்படிப்பார்த்தால், உம்மகள் உங்களுக்கும் அத்தகையவளே.

அதனால், நீங்கள் துன்பம் கொள்ளாதீர். உம்மகள் அவள் விரும்பிய சிறந்த ஆண்மகனோடே சென்றாள். அவ்வுடன்போக்கு அறமே. அவர்களை வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்தியனுப்பினோம் நாங்கள். நீர் துன்பப்படாது வீடு திரும்புக."

என்று அறங்கூறியனுப்பினர்.

********************************

உதவி : கலித்தொகை நூலில் பாலைக்கலி
பாடியவர் : சேரமான் பெருங்கடுங்கோ
உரை : தனித்தமிழாளன்

நன்றி.

Saturday, August 3, 2019

இலக்கியத்தில் பறையின் பெயர்கள்

இலக்கியத்தில் பறையின் பெயர்கள்:


தொல்காப்பியர், திணைகளின் கருப்பொருளை கீழுள்ள நூற்பாவில் தொகுக்கிறார். அவற்றுள் ஒன்று பறை.

"தெய்வம், உணாவே, மா, மரம், புள், #_பறை,
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ,
அவ்வகை பிறவும் கரு' என மொழிப". - 965

அவ்வகையில் பண்டைக்காலத்திருந்த சில பறையின் பெயர்களை ஈண்டு அறிவோம்.. 



குறிஞ்சி:

1. தொண்டகப்பறை
2. முருகியப்பறை
3. வெறியாட்டுப்பறை

முல்லை :

4. ஏறுகோட்பறை

மருதம் :

5. மணமுழாப்பறை
6. நெல்லரிகிணைப்பறை

நெய்தல் :

7. நாவாய்ப்பறை
8. மீன்கோட்பறை

பாலை :

9. ஆறலைப்பறை
10. ஆறெரிப்பறை
11. சூறைகோட்பறை

இவையன்றி,

********
12. அரிப்பறை
13. ஆகுளிப்பறை
14. உவகைப்பறை
15. ஒருகண் பறை
16. கிணைப்பறை
17. குரவைப்பறை
18. குறும்பறை
19. கொடுகொட்டிப்பறை
20. கோட்பறை
21. சாக்காட்டுப்பறை
22. சாப்பறை
23. சிறுபறை
24. செருப்பறை
25. தடாரிப்பறை
26. தணிபறை
27. தலைப்பறை
28. துடிப்பறை
29. தெடாரிப்பறை
30. நிசாளப்பறை
31. பன்றிப்பறை
32. பூசறண்ணுமை
33. முழவுப்பறை
34. மென்பறை
35. வெறுப்பறை

{இதில், ஒரே பறைக்குப் பலபெயர்களுண்டு. அவற்றிற்குத் தனி எண்ணிட்டுள்ளேன்}

இத்தனை பறைகளையும் மறந்துவிட்டு, இன்று நாம் அறிந்திருப்பது சாக்காட்டுப்பறை, சாப்பறை என்னும் சாவுக்கு இசைக்கும் பறையை மட்டுமே.

நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தனித்தமிழாளன்

*****************

உதவிய நூல்கள்:

1. புறநானூறு
2. தொல்காப்பியம்
3. சிலம்பு
4. நன்னூல்
5. இன்னுஞ்சில நூல்கள்

Friday, August 2, 2019

கலித்தொகையில் ஓர் கவின்மிகு காதற்காட்சி:

கலித்தொகை ௫௧(51) குறிஞ்சிக்கலி - கபிலர்

கலித்தொகையில் ஓர் கவின்மிகு காதற்காட்சி:




சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறுபட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!

உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள் என, யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,

'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி,
நகைக் கூட்டம் செய்தான், அக் கள்வன் மகன்.

‘புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ தலைவி, தோழிக்குக் கூறியது.

உரை :

தலைவி தன்தோழியிடம் கூறியதாக அமைந்துள்ளது இப்பா.

ஒளிபொருந்திய வளையலை அணித்தவளே, கேள். ஒருநாள், நானும் என் தாயும் வீட்டில் இருந்தோம். அப்போது, வாசலிலிருந்து ஒரு குரல் கேட்டது. "அம்மா, தாகத்திற்கு தண்ணீர்" என்று. அதைக்கேட்ட என் தாய், யாரோ தண்ணீர் கேட்கிறார்கள், போய்க்கொடு என்றாள்.

தண்ணீர் எடுத்துவந்தேன், வாசலில் நின்ற இளைஞனிடம் செம்பைக்கொடுத்தேன். செம்பை வாங்கியதோடு நிற்காமல் என் செங்கையையும் பற்றி இழுத்தான். "அம்மா", என்று அலறினேன்.

கரம் பற்றி இழுத்தவன் யாரென்று பார்த்தேன். அவன் தான் அந்த சுட்டிப்பயல், நாம் சிறுவயதில் மணல்வீடு கட்டி விளையாடும்போது அதை காலால் உதைத்து சிதைத்து விளையாடுவானே. நம் வரிப்பந்தையையும் எடுத்துக்கொண்டு ஓடுவானே, அந்த நாய்ப்பயல், அவன்தான். கண்ணையும் கருத்தையும் கவரும் கட்டிளம் காளையாகி வந்துநின்றான். கண்டேன் அவனை, உள்ளம் பறிகொடுத்தேன்.

"அம்மா, இவன் செய்வதைப் பார்" என்று நான் அலறியதைக்கேட்ட என் தாய் ஓடிவந்து, என்ன என்று கேட்டாள். என்னசொல்வதென்று விழித்தேன். கையைப்பிடித்து இழுத்தான் என்று சொல்லமுடியுமா. அப்படிச்சொன்னால் அவனை நையப்புடைத்து விரட்டிவிடுவார்களே. அப்படிச்சொல்லக்கூடாது என்று, ஒரு பொய்யைக்கூறினேன்.

"மடமடவென்று தண்ணீர் குடித்தான், அவனுக்கு புரையேறிற்று. எங்கே இவன் இறந்துவிடுவானோ என்று உன்னை அழைத்தேன்" என்று பொய் கூறினேன்.

அதற்கு தாயும், "அப்படியா, என்னப்பா அவசரம்? மெதுவாக தண்ணீர் குடிக்கக்கூடாதா" என்றுகூறி அவன் முதுகில் தடவிக்கொடுத்தாள்.

"அப்போது அந்த திருட்டுப்பயல் என்னசெய்தான் தெரியுமா? என்னைப்பார்த்து கண்ணைச்சிமிட்டினான். புன்முறுவல் பூத்தான்".

*******************************

நன்றி. வாழி
தனித்தமிழாளன்

Wednesday, July 24, 2019

அதியமான் நெடுமானஞ்சி ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தல்

அதியமான் நெடுமானஞ்சி ஒளவையாருக்கு அரிய நெல்லிக்கனியை ஈந்த வரலாறுகூறும் புறநானூற்றுப்பாடல் - ௯௧


வணக்கம்,
வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி ஒளவையாருக்கு நீண்டநாள் வாழவைக்குந் தன்மையுடைய அரியவகை நெல்லிக்கனியை ஈந்தார், அதனாற்றான் நெடுமானஞ்சி கடையெழுவள்ளல்களில் வைத்துப்போற்றப்பெறுகிறான் என்ற கதை நாம் அனைவருமறிவோம். ஆனால், இக்கதை எங்கு, யாரால் கூறப்பட்டது? உண்மையிலேயே நெடுமானஞ்சி நெல்லிக்கனியை ஒளவைக்கு ஈந்தானா இல்லையா? என்று நாம் அறிந்திலோம். அதற்குச்சான்று ஏதேனுமுண்டா என்றும் தேடினோமல்லோம். அதனால், அச்சான்றைத் தேடலாம் என்று புறநானூற்றில் உலாவினேன்.

சான்றுண்டு. இதற்குச்சான்றாக நெல்லிக்கனியைப்பெற்ற ஒளவையாரே நெடுமானஞ்சியை வாழ்த்தி பாடல்பாடியிருக்கிறார். இதோ அச்செய்யுளை இங்கே பதிந்துள்ளேன். அந்நெல்லிக்கனி சாகாத்தன்மையளிக்கவல்லதென்பர், அஃது அறிவுக்கொவ்வாதது. உண்மையில் அது சாகாத்தன்மையுடைத்தாயின் அதையுண்ட ஒளவையார் இந்நாள்வரை சாகாது இருந்திருக்கவேண்டுமே.!!

ஒருக்கால் நீண்டநாள் வாழவைக்கும் அரிய மருத்துவத்தன்மையள்ளதாய் இருந்திருக்கலாம் அன்றி மிகச்சுவையுடையதாய் இருந்திருக்கலாம்.
எது எவ்வாற்றாயினும் நெல்லிக்கனியை ஈந்து நெடுமானஞ்சி வல்லளெனப் போற்றப்பெற்றான் என்பது உண்மை.

இந்நெல்லிகனியீந்த வரலாற்றை,  சிறுபாணாற்றுபடையில் ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நத்தத்தனார் பாடும்போது,

" .................மால்வரை
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக் கீந்த
வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும்"

என்று குறிப்பிடுகிறார்.

அதியமான் நெடுமானஞ்சி தகடூரை தலைநகராகக்கொண்டு தகடூர்நாட்டையாண்ட குறுநில மன்னன். தகடூரென்பது தற்போதைய தருமபுரியாகும். இம்மாவட்டத்தில் அதியமான்கோட்டை என்னும் ஊர் தற்போதுமுண்டு.

நன்றி வணக்கம்.

*****************************

புறநானூறு_௯௧(91)

பாடியவர் : ஔவையார்.
பாடப்பட்டோன் : அதியமான் நெடுமானஞ்சி.
திணை : தும்பை.
துறை : வாழ்த்தியல்.




செய்யுள்:

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

விளக்கம் :

வெற்றிவாள் ஏந்தி பகைவர் போர்க்களத்திலையே மடியும்படி வென்ற வீரக்கழல் அணிந்தவன் அதியர் கோமான். அதியர் களிப்புக்காக நறவுக்கள்ளை உண்பவர்கள். இவன் போரிலே வென்ற திருவினைப் பொன்மாலையாக்கி அணிந்திருப்பவன். ‘அஞ்சி’ என்னும் பெயர் கொண்டவன். சிவபெருமான் பால்போன்ற வெண்ணிற நெற்றியைக் கொண்டவன். நீலமணி நிறம் கொண்ட தொண்டையை உடையவன். பெருமானே, நீ இந்தச் சிவபெருமான் போல நிலைபெற்று வாழ்வாயாக! தொன்றுதொட்டுப் பெருமலை வெடிப்பு ஒன்றில் பெறுவதற்கு அரிதாக, ‘சிறியிலை நெல்லி’ப் பழம் ஒன்றை, உண்டால் சாகாமல் நீண்டநாள் வாழக்கூடிய அதன் தன்மையை உன் மனத்திலேயே வைத்துப் பூட்டிக்கொண்டு, நான் சாகாமல் நீண்டநாள் வாழவேண்டும் என்று எண்ணி என்னை உண்ணச் செய்தாயே. (அதனால் நீ சிவபெருமானைப் போல வாழ்க).

******************************

உதவி : புறநானூறு மற்றும் சிறுபாணாற்றுப்படை நூல்கள்

தொகுப்பு : தனித்தமிழாளன்

படம் : தகடூர் அதியமான்கோட்டை என்னும் ஊரில் நெடுமானஞ்சி மற்றும் ஒளவையாருக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுமண்டபத்திலுள்ள சிலைகள்.

நன்றி. வணக்கம் 🙏

Monday, July 22, 2019

முருகன் வெறியாடல் வழிபாடு

முருகனுக்குக் குருதிகலந்த தினை தூவி வெறியாடல் - முருகாற்றுப்படுத்துதல்


நெடுவேள் முருகனுக்கு ஆட்டைப் பலிகொடுத்து, அதன் குருதியை செந்தினையில் கலந்து தூவி முருகவேளை ஆற்றுப்படுத்தி வழிபட்ட செய்தியை விளக்கும் பதிவு இது. பலியில்லா வழிபாடே தமிழர் வழிபாட்டுப் பண்பாடு என்று வாதிடுவோர் பார்த்துத்தெளிதற்கு. பேருரையைப் படித்து விளக்கிக்கொள்ள இயலாதவர்கள், என் சிற்றுரையைப் படிக்கவும்.




நூல் :  அகநானூறு_22

பாடியவர் : வெறிபாடிய காமக்கண்ணியார்


அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்
இதுஎன அறியா மறுவரற் பொழுதில்
'படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை 5

நெடுவேட் பேண தணிகுவள் இவள்' என,
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 10

முருகுஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற, அருவிடர்த் ததைந்த
சாரல் பல்பூ வண்டுபடச் சூடி,
களிற்று - இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப்புலி போல, 15

நல்மனை, நெடுநகர்க் காவலர் அறியாமை
தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப,
இன்உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே - எய்த்த
நோய்தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? 21

துறை :

வரைவிடை வைத்துப் பிரிந்தகாலத்து, தலைமகள் ஆற்றாளாக, தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது, தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉமாம்.

பேருரை :


தெய்வத்தை உடைய உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து விழும் ஊற்றுக் கூட்டங்களைக் கொண்ட அருவியினால் வளர்ந்த காடுகள் பொருந்திய நாடனாகிய தலைவனது, நன்மணம் கமழும் அகன்ற மார்பு வருத்தியதனால் உண்டான துன்பம் இது என்று அறியாத செவிலியும் தாயும் மனஞ்சுழலும் சமயத்தில், பகைவர்களை அழித்த பலவகையான புகழ்களையும் பரந்த கைகளையும் உடைய நெடிய முருகவேளை வழிபட இவள் நோய் தனிவாள் என்று முதுமையான வாயையுடைய பெண்டிர் அதுவே உண்மையாகக் கூற,

அதைக் கேட்ட தாய்மார் வேலனைக் கொண்டு வெறியாடும் களத்தை நன்றாக அமைத்து முருகனுக்குக் கண்ணியைச் சூட்டி வளப்பமுடைய கோயிலில் எதிரொலிக்கும்படி பாடச்செய்து, பலியைக் கொடுத்து அழகிய சிவந்த தினையை இரத்தத்தோடு தூவி முருகனை வழிப்படுத்தி வருவித்த அச்சம் நிரம்பிய நடுயாமத்தில், சந்தனம் மணம் வீச அரிய மலைப்பிளப்பிலே தழைத்துப்பூத்த மலைச்சாரலுக்குரிய பலவகை மலர்களை வண்டுகள் மொய்க்கும்படி தலையில் அணிந்து, யானையாகிய இரையைத் தேடிய பார்வையையும் நடையையும் ஒளித்து இயங்கும் வழக்கத்தையும் வலிமையையும் உடைய புவியைப்போல, நல்ல மனைகளையுடைய நீண்ட ஊரைக் காக்கும் காவலர் அறியாமல், தன்னை விரும்பும் விருப்பத்தை உடைய உள்ளத்தைப் பெற்ற நம்முடைய விருப்பம் நிறைவேறும்படியாக, இனிய உயிர் வாடாமல் தளிர்க்கும் படி  தலைவர் அனையுந்தோறும், உடம்பு பூரித்துச் சிரித்தேன் அல்லனோ யான், என் உடம்பு இளைத்தற்குக் காரணமான காமநோயைத் தணிக்கும் காதலரின் வரவு இங்கு அயலானாகிய வேலனுக்குத் தெரியாமற் போனதைக் கண்டு?

****************************

சிற்றுரை :


தலைவன் தலைவியை மணஞ்செய்துகொள்வேன் என்றுகூறிவிட்டுச் பணிநிமித்தம் சென்றுவிடுகிறான். தலைவன் வர காலதாமதமாகவே, தலைவி தூயருற்று, பித்துபிடித்தாற்போல் இருக்கிறாள். இதைக்கண்ட தாயும் செவிலித்தாயும், தலைவிக்கு ஏதோ பேய்பிடித்ததாக எண்ணி, முருகனுக்கு வெறியாடல் வழிபாடு செய்தால் சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். முதுபெண்டிரும் அதுவே சரி என்கின்றனர்.

வெறியாடற்களம் அமைத்து நெடுவேலை நாட்டி, கண்ணி சூட்டி, பலி கொடுத்து, செந்தினையில் அந்தக்குருதியைக் கலந்து வேலுக்கும் முருகனுக்கும் தூவி வழிபட்டு முருகனை வரவழைக்கின்றனர். இதைக்கண்ட தலைவி, "நான் தலைவனின் பிரிவால் தான் இப்படி இருக்கிறேன் என்ற காரணத்தை அறியாத தாயும் செவிலியும் இப்படி முருகனுக்கு வெறியாடல் நிகழ்த்துகின்றனரே", இதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், முருகனுக்கும் இது தெரியவில்லையா" என்று நினைக்கிறாள். தலைவனின் வருகையே இதற்கு மருந்து என்று நகைத்துக்கொள்கிறாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தோழி, தலைவனிடம் இவற்றைக்கூறி விரைவாக வந்து தலைவியை மணந்துகொள்க என்று கூறுகிறாள். முருகனுக்கு வெறியாடல் செய்யும் அந்த நடுஇரவு நேரத்தில் தலைவனும் அங்கு வருகிறான்.

**********

இப்பாடலை படித்துவிட்டு, இதெல்லாம் பொய், முருகனுக்கு உயிர்ப்பலி குருதித்தினையைத் தூவியெல்லாம் வழிபாடு நடக்கவில்லை என்று வாதிடுவோர், தக்க சான்றுகளுடன் வரவும். இதை நம்பாதவர்களுக்கு நாளை திருமுருகாற்றுப்படையிலேயே இதற்குச் சான்று காட்டுகிறேன். அப்போதாவது நம்புவீராவென்று பார்ப்போம்.

நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தனித்தமிழாளன்

***********

மதவலி நிலைஇய மாத்தாட் கொழவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிச்
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துனையற அறுத்துக் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் கிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட”

இந்த அகநானுற்றுப் பாடலிலும் திருமுருகாற்றுப் படைப் பகுதியிலும் சொல்லப் பெறும் முருக பூசையில் பல செய்திகள் பொதுவாக இருத்தலைக் காணலாம்.

இப்பாட்டில் அணங்குடை நெடுவரை, சாரல் என்பன குறிஞ்சித் திணைக்குரிய நிலம். உருகெழு நடுநாள் என்பது அதற்குரிய காலம், இவை இரண்டும் முதற் பொருள்.

1. மிக்க வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுத்த ஆட்டுக்கிடாயின் இரத்தத்தோடு கலந்த தூய வெள்ளையரிசியைச் சிறு பலியாக இட்டு, பல தானியக் கூடைகளை வைத்து, பசிய சிறிய மஞ்சள் நீரோடு மணமுடைய பண்டங்களைத் தெளித்து, தன்மையையுடைய அலரியின் மணமுடைய மாலையை அளவு சரியாக இருக்கும் படி, நறுக்கி, எங்கும் தொங்கப்படி அலங்கரித்து, மணமுடைய தூபம் எடுத்துக் (குறிஞ்சிப் பண்ணைப் பாடி, ஒலிக்கின்ற இசையையுடைய அருவியின் ஓசையோடு இனிய வாத்தியங்கள் முழங்க, பல நிறங்களையுடைய மலர்களைத் தூவி, யாரும் அஞ்சும்படி மிகச் சிவந்த தினையைப் பரவ வைத்து, குறமகளாகிய பூசாரிச்சி முருகனுக்குரிய துடியையும் தொண்டகப் பறையையும் வாசிக்கச் செய்து, தெய்வம் இல்லை யென்பவரும் அஞ்சும்படியாக முருகனை வருவித்த அழகையுடைய விசாலமான கோயிலில், வெறியாடும் இடம் எதிரொலிக்கும்படி பாடி, பலவாகிய கொம்புகளை ஒருங்கே ஊதி, வளைந்த மணியை அடித்து, ஓடாத வீரத்தையுடைய முருகனுடைய வாகனமாகிய பிணி முகம் என்னும் யானையை வாழ்த்தி, வேண்டியவர்கள் வேண்டியபடி யெல்லாம் வந்து முருகனை வழிபட.

Saturday, July 20, 2019

தமிழரின் வேல்வழிபாடு

தமிழரின் வேல்வழிபாடு


என்னடா தைப்பூசம் எல்லாம் முடிந்துவிட்டதே, இப்போது இந்த வேல்வழிபாட்டைப்பற்றி பதிவிடுகிறானே என்று நினைக்கிறீர்களா? என்ன செய்ய இப்போதுதான் நேரம் கிடைத்தது. தைப்பூசத்திற்கு மட்டும் வேலை வணக்குபவர்களல்லர் யாம்.
"வேலை வணங்குவதே வேலை" யாகக்கொண்டோர். எப்போது பதிவிட்டாலென்ன?



௧) #வேல் - பெயர்க்காரணம்:

வெல் = வேல்!
'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது! ஆகவே, வேல் = வெற்றி!

௨) #வேல் - தமிழ்த்தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்! ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா! வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு! சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!  பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன! சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, சிலை மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது.

௩) #வேலின்_அமைப்பு:


பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!  எஃகு ஒரு கலப்பு உலோகம்! இரும்பு + கரிமம் குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி! மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்! ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க, வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்!

௪) #வேலின்_தோற்றம்!

* வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
* வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்;
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)

* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடற்று (hollow) ஆக இருக்கும்!
* வேலின் முகமோ,  பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

௫) #வேலும்_ஈட்டியும்_ஒன்றா??

வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
* வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
* வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!

வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!

கான முயல் எய்த அம்பினில் - யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு அம்பு, யானைக்கு வேல்!

௬) #வேல்_வழிபாடு:

சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது?
வேலன் வெறியாட்டு, வெறி அயர்தல்-ன்னு சொல்லுவர். இதில்...."வேல்" ஒரு முக்கியமான பூசைப் பொருள்!

"வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
பந்தல் இட்டு, பூ பல பெய்து
பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி" என்று அலங்கரித்து (அணி செய்து), வேலை மையமாக நட்டு வழிபடுதல் வழக்கம்!

பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை கொல்? இவள் அணங்கி யோற்கே -(ஐங்குறுநூறு, கபிலர்)

* எதாச்சும் தலைவியின் காதல் நோய் இன்னதென்று அறியாத தாய், தலைவியின் மேல் ஏதோ பித்து/சூர் இறங்கி விட்டதாக நினைத்து, அதைப் போக்க முருகனுக்கு எடுக்கும் பூசை! இதை ஒரு ஆண் (வேலன்) நிகழ்த்துவான்!

* (அல்லது) தலைவியே, தன் காதலனைச் சேர முடியாது, அவன் ஒதுக்கியதால் அவனையே எண்ணியெண்ணி அன்பு மிகுந்து போய், முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!

இதை ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!
* ஆண் ஆடும் போது = பூசை/குறி! கிடா வெட்டிப் பலி குடுத்து, அதன் குருதியை, அரிசியொடு கலந்து தூவுதல்
* பேதுற்ற பெண் ஆடும் போது = காதல் வலி! வெறியில் முருகனையே திட்டிப் பூக்களைத் தூவுவாள்!

தொல்காப்பியரும் இதற்கு ஒரு துறை ஒதுக்கி உள்ளார்! முருகனுக்கு உரிய காந்தள் பூச்சூடி ஆடுவது!

வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்)

காதல் வலி மிகுந்து போய் பெண்கள் ஆடிய வேலன் வெறியாட்டு, மிகவும் மனத்தை வலிக்க வைப்பவை!
ஒரு அழகிய மயில் (மஞ்ஞை), வெறியில் ஆடினா எப்படி இருக்கும்? ஆடி ஆடியே, அழுது அழுது, உள்ளமும் உடலும் தேய்ந்து போனாள்!

கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல் 
அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள் 
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கு
சூர் மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே - (குறுந்தொகை 105, நக்கீரர்)

ஒரு கட்டத்தில், காதல் வலியால், முருகனையே "மடையா"-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைக் காணலாம்!

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! - (நற்றிணை 34)

"காதலன் திடீரென்று என்னை ஒதுக்கும் போக்கில் துடிச்சிப் போய் நான் வாழுறேன்! இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா. உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தையா?

நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை! மடவை முருகா (மடப்பயலே முருகா)...
நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!!"  என்று இவள்....முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி.

௭) #சிலப்பதிகாரத்தில்_வேல்:



பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வேலைப் பற்றிச் சிறிதளவே சொன்னாலும், அதை ஈடுகட்டவோ என்னவோ.... சிலம்பில், இளங்கோவடிகள், வேலின் பெருமையை மிக அழகாக, குன்றக் குரவையில் விவரிப்பார்!

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!

சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்! -ன்னு முருக பக்தரான நக்கீரர், இரண்டு அடிகளே பாட...

இரண்டே அடிகளா? இளங்கோ அடிகளா?

- என்று வேல் விருத்தமாய், அன்றே பாடினார் சமணச் செல்வரான இளங்கோ! இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே!!

சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், 
ஏரகமும், நீங்கா இறைவன் கை "வேல்" அன்றே! -ன்னு தொடங்கும் இளங்கோ, வரிசையாக, "வேல் வேல்"-ன்னு ஒரு வேல் விருத்தத்தை, அருணகிரிக்கும் முன்பே பாடிவிட்டுச் செல்கிறார்!

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே!
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல் அன்றே!
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல் அன்றே!

-ன்னு சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, 'பாட்டு மடை'யாகப் பெருகி வரும்!

௮) #முருகன்_வேறு, #வேல்_வேறு_அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வ என்பது ஒரு பெயர்.
(உடன் பிடித் தெய்வம்)

நன்றி வணக்கம்
உதவி : வலைத்தளம்
தனித்தமிழாளன்

நாட்டெல்லைகள்

நாட்டெல்லைகள் :


வடக்குத் திசைபூழி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமே தெற்காகும் உள்ளெண் பதின்காதம்
சேரநாட் டெல்லையெனச் செப்பு.

கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள் வெள்ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லையெனச் சொல்.

வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவழியாம்
தெள்ளாற் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி.

மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்
ஆர்க்கு மூவரி அணிகிழக்கு - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு.

வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்குக்
குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கிழக்கு
கழித்தண் டலைசூழும் காவிரிநன் னாடா
குழித்தண் டலையளவும் கொங்கு.

**************

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்

சங்க இலக்கியத்தில் மாட்டிறைச்சி

சங்கவிலக்கியத்தில் மாட்டிறைச்சி :




பண்டைத்தமிழர்கள் அனைத்திறைச்சிகளையும் உண்டவர்கள்தாம், அதில் மாட்டிறைச்சியும் விதிவிலக்கன்று. கள்ளும் இறைச்சியும் உண்டுகளித்தோரே தமிழர்களென்பது தமிழவைநூல்கள்வல்ல அறிவுடைச்சான்றோரறிவர். இவ்வாவூனுணவு தமிழர்கள் உண்டவற்றுளொன்றென நிறுவ சங்கவிலக்கியத்துளுள்ள மூவிரண்டு குறிப்புகளைத் தக்கசான்றுகளைக்கொண்டு விரித்துவரைகிறேன். சங்கவிலக்கியத்தில் இறைச்சியைப் பற்றிய குறிப்புகள் எண்ணிலடங்கா. அதில், மாட்டிறைச்சியை பற்றிய குறிப்புகளை மட்டும் தேடினேன். நேரங்கிடைக்காத  காரணத்தால் மிகுதியாகத் தேடவியலவில்லை, பொறுப்பீர்.

********************

#_அகநானூறு - 129 :
"கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்ப
கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர்"

பொருள் : கலங்குதற்குக் காரணமாகியா போர்முனையையுடைய சிறிய ஊரினர் தலையில் கையை வைத்து வருந்தும்படி, அவர்களுடைய கொழுத்த ஆவினை {மாடு} கவர்ந்துசென்று தின்ற கூரிய படையையுடைய மழவர்.

*****************

அகநானூறு -249 :
"தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகா வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுக்களந் துழைஇயத் துகள்வாய்க் கோடை"

பொருள் : மயிலின் தோகையிலுடைய இறகுகளை மாலையாகத் தொடுத்து அணிபவர்கள் மழவர்கள். அவர்கள், கன்றினையுடைய பசுவைக் கொன்று அதன் ஊனைச்சுட்டுத்தின்பார்கள். புலால்மணம் வீசும் அந்த இடத்தைத் துழாவியவாறு, புலால் துணுக்குகள் கலந்த புழுதியைத் தன்பால் கொண்டதாக, மேல்காற்று எழுந்து வீசும். {நாகா-நாகு+ஆ.|| நாகு-இளம்பசு,கன்று. ஆ-பசு}

*****************

அகநானூறு - 309 :
"வயவா ளெறிந்து வில்லி னீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மழவ
ரம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா வெறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்க ணகலறைக்"

பொருள் : வெற்றிவாளினாலே வெட்டிக்கொன்றும், வில்வினைத்தொழினாலே அடித்து வெருட்டியும், பசு மந்தைகளைக் கைகொண்ட அஞ்சாமையாளர்களான மறவர்கள், அம்புகளை தொலைவிற்குச் செல்லுமாறு செலுத்தி நிரைகாவலரை விரட்டியபின், அந்த நிரைகளோடு வன்மையான காட்டு நிலத்தையடைந்தனர்.

அங்கு, தெய்வம் குடிகொண்டிருக்கும் பருத்த அடியினையுடைய வேம்பிற்கு {வேப்பமரம்} ஒரு பசுவினைக் கொன்று பலியிட்டனர். அதன் குருதியைத் தூவித் தெய்வத்தைப் போற்றி வழிபட்டனர். பின், அப்பசுவின் ஊனைப் புழுக்கி உண்டுவிட்டுச்சென்றனர்.

*****************

#_நற்றிணை - 310 :
"...........வல்லை
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுமைத் தண்ணுமை போல"

பொருள் : விரைவாக ஆன் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணனின் கையிலிருப்பதாகியதும், பெரியதாக உயிர்த்தலை உடையதுமாகிய தண்ணுமைப்போல. {தண்ணுமை - தோலிசைக்கருவி}

*****************

#_சிறுபாணாற்றுப்படை -175-177 :

"எயிற்றியர் சுட்ட இன்புளி வெண்சோறு தேமா
மேனிச் சில் வளையாய மொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்”

பொருள் : முல்லை நிலத்தில் பாணர்களுக்கு எயினர்குலப் பெண்கள்  புளியங்கறியிட்ட சோற்றுடன் ஆமானின் இறைச்சியையும் தந்து அவர்களுடைய  பசியைத் தீர்ததனர்.
{ஆமான் - ஆ+மான் - பசுவும் மானும் கலந்ததுபோல ஒரு விலங்கு - இங்கு முல்லைநிலம் என்பதால் அது ஒருவகை பசுவாகத்தான் இருக்கவேண்டும்}

******************

மற்றும் பிற்காலத்தில் இது கீழ்மையாகப் பார்க்கப்பட்டது. தேவாரத்தில் "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்" - மாட்டையுரித்துத் தின்று அலையும் புலையர்கள் என்று குறிப்பிடுகிறார் நாவுக்கரசர்.

சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் மாக்கதையுள், நந்தனார் என்பவர் சிவபெருமான் கோயிலுக்குத் தோல்பறை செய்துகொடுத்தார் என்றும் குறிப்பிடுகிறார். நந்தனார் பறைக்குடியார் ஆகையால், அவர் செய்துகொடுத்த தோல்பறை, மாட்டைக்கொன்று தின்று அதன் தோல்பறையாகவே இருக்கவேண்டும்.

*******************

இதைப்படித்துவிட்டு, தமிழாலேயே இதை மறுக்கவேண்டுமென அறிவுடையோர் சிலர்,  திருவள்ளுவர் புலான்மறுத்தல், கொல்லாமை என்று அறிவுறுத்தியுள்ளாரென எதிர்ப்பர். அவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன், இவ்விரு அதிகாரங்களையும் துறவறவியலின்கண் வைத்தார் வள்ளுவர். நாங்கள் இல்லறம் நடாத்துகிறோம், துறவு பூணவில்லை. துறவுபூணுங்கால் இவற்றைக் கடைபிடித்துக்கொள்கிறோம்.

வடவர்கள் பசுவைக்கொன்று தின்னவில்லையென்றும் என்னிடம் வாதிடவேண்டாம். யாகம் என்னும் பெயரில் மாட்டிறைச்சி தின்றவர்கள் அவர்கள்.

*************

மேலே குறிப்பிட்ட சங்கவிலக்கிய குறிப்புகளைக் கொண்டெழுதிய இம்மறுப்புப்பதிவை அறுப்போர் தக்கசான்றுகளுடன் அறுக்கலாம். மறுப்பறுப்புகள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி. வணக்கம்.

பதிவிற்குதவிய நூல்கள்:
1. அகநானூறு
2. நற்றிணை
3. சிறுபாணாற்றுப்படை
4. தேவாரம்
5. திருத்தொண்டர் மாக்கதை

தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

Thursday, July 11, 2019

புறநானூறு பாடினோரும் பாடப்பட்டோரும்

புறநானூறு பாடினோரும் பாடப்பட்டோரும்


(யார் யாரைப்பாடியது என்னும் பெயர்த்தொகுப்பு)


அன்புடைத் தமிழர்களே வணக்கம்.
தன்னிகரில்லாத் தமிழரின் புறவாழ்வின் சிறப்பைப்பேசும் பழந்தமிழ்க்கருவூலம் புறநானூறு. புலவர்கள் பலர் பலரைப்பாடிய ஒப்பற்ற இந்நூல் நானூறு செய்யுட்களைக்கொண்டது. அவர்களின் பெயர்களை புறநானூறு பாடியோர் என்றும் புறநானூறு பாடப்பட்டோர் என்றும் பன்னாட்களுக்கு முன்னமே தனித்தனியே அடியேனின் முகநூலில் பதிவிட்டிருந்தது தாமனைவரும் அறிந்ததே. இருப்பினும், இப்பாக்கள் யார் யாரைப்பாடியது என்பதை தேடியறிவது அரிதான செயல். ஆகையால், அதனைத்தொகுத்து ஒரே பதிவில் கொண்டுவரவேண்டும் என்பது என்னுடைய பன்னாள் அவா. அதனால், அதைத்தொகுக்கும் பணியை மேற்கொண்டு ௪ நாட்களில் முடித்தேன்.

புறநானூறு என்பது பலரால் பலகாலங்களில் பலரைப்பாடிய தொகுப்பாகும். எனவே, இதில் தமிழவைக்கால பாக்களும் அதற்குப்பின்னே தோன்றிய பாக்களும் என்று இப்புறநானூற்றுநூல் தொகுக்கப்பட்ட காலத்திற்கு முன்புவரை தோன்றிய செய்யுள்கள் அடங்கி இருக்கும். இதில் பழந்தமிழ்ப்பாக்களும் ஆரியக்கதைகளும் அதன் குறிப்புகளுள்ள பாக்களும் என சேர்ந்தே இருக்கும். பாடிய பாடப்பட்டவர்களின் பெயர்களுள் சிலவும் அச்சார்புடையதாகவும் இருக்கும். உள்ளதை உள்ளவாறே தொகுத்துள்ளேன்.

செய்யுட்களை பாடினோர் பாடப்பட்டோர் பெயர்களை மட்டும் அறிவதோடமையாது. புறநானூறு நூலையும் குற்றமறக்கற்று தமிழறத்தோடு வாழ்க.

இப்பெயர்த்தொகுப்பு புறநானூறு நூலில் பயின்றுவரும் பண்டைத்தமிழ்ப்பெயர்களை அறியவிரும்புவோர்க்கு துணைபுரியும் அன்றி, குறிப்பிட்ட செய்யுள் யாரால் யாரைப்பாடியது என்று எளிதில் அறியவியலும்.

பாக்களின் எண்களை தமிழில் இட்டு, அச்செய்யுள் யாரை யார் பாடியது என்பதையும் பொதுப்பாகளுக்கு பாடியவர் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.  விருப்புளோர் படித்தறிக, வெறுப்புளோர் விடுத்தொழிக. நன்றி. வணக்கம்.

(0-०, 1-௧, 2-௨, 3-௩, 4-௩, 5-௫, 6-௬, 7-௭, 8-௮, 9-௯, 10-௰)

*********************************************

௧) இறைவனை பெருந்தேவனார் பாடியது.

௨) சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது.

௩) பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியது.

௪) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியை பரணர் பாடியது.

௫) சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரலை நரிவெரூஉத் தலையார் பாடியது.

௬) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை காரிக்கிழார் பாடியது.

௭) சோழன் கரிகாற்பெருவளத்தானை கருங்குழல் ஆதனார் பாடியது.

௮) சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

௯) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

௰) சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதிபசுங்குடையார் பாடியது.

௧௧) சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவை பேய்மகள் இளவெயினியார் பாடியது.

௧௨) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

௧௩) சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௧௪, ௧௫) சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

௧௬) சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை பாண்டரங்கண்ணனார் பாடியது.

௧௭) சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர்கிழார் பாடியது.

 ௧௮) பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது.

௧௯) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது.

௨०) சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர்கிழார் பாடியது.

௨௧) கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது.

௨௨) சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர் கிழார் பாடியது.

௨௩) பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௨௪) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை மங்குடிக்கிழார் பாடியது.

௨௫) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௨௬) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை மங்குடிக்கிழார் பாடியது.

௨௭ முதல் ௩௩ வரை) சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

௩௪) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௫) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடியது.

௩௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௭) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௩௮) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௩௯)  சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௪०) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௪௧) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்க்கிழார் பாடியது.

௪௨) ௩௭) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடியது.

௪௩) சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை தாமப்பல் கண்ணனார் பாடியது.

௪௪) சோழன் நெடுங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௪௫) சோழன் நலங்கிள்ளியையும் நெடுங்கிள்ளியையும் கோவூர்க்கிழார் பாடியது.

௪௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்க்கிழார் பாடியது.

௪௭) காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௪௮, ௪௯) சேரமான் கோக்கோதை மார்பனை பொய்கையார் பாடியது.

௫०) சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை மோசிகீரனார் பாடியது.

௫௧) பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.

௫௨) பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதியை மருதனிளநாகனார் பாடியது.

௫௩) சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையை பொருந்தில் இளங்கீரனார் பாடியது.

௫௪) சேரமான் குட்டுவன்கோதையை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

௫௫) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் பாடியது.

௫௬) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).

௫௭) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௫௮) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனையும்
பாண்டியன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியையும் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௫௯) பாண்டியன் சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறனை மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் பாடியது.

௬०) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௬௧) சோழன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய
நலங்கிள்ளி சேட்சென்னியை கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௬௨) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியையும் கழாத்தலையார் பாடியது.

௬௩) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியையும் பரணர் பாடியது.

௬௪) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.

௬௫) சேரமான் பெருஞ்சேரலாதன், இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது
புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது கழாத்தலையார் பாடியது.

௬௬) சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடியது.

௬௭) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் பாடியது.

௬௮) சோழன் நலங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௬௯) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலந்தூர் கிழார் பாடியது.

௭०) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலந்தூர் கிழார் (கோவூரழகியார்) பாடியது.

௭௧) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடியது.

௭௨) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன் பாடியது.

௭௩) சோழன் நலங்கிள்ளி பாடியது. (நல்லுருத்திரன் பாட்டு எனவும் பாடம்)

௭௪) சேரமான் கணைக்காலிரும்பொறை பாடியது.

௭௫) சோழன் நலங்கிள்ளி பாடியது.

௭௬, ௭௭, ௭௮, ௭௯) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

௮०, ௮௧, ௮௨) சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியை சாத்தந்தையார் பாடியது.

௮௩, ௮௪, ௮௫) சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியை பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் பாடியது.

௮௬) காவற்பெண்டு பாடியது (காதற்பெண்டு)

௮௭ முதல் ௧०௧ வரை) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௧०௨) அதியமான் நெடுமானஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஔவையார் பாடியது.

௧०௩, ௧०௪) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௧०௫ முதல் ௧௧௧ வரை) வேள்பாரியை கபிலர் பாடியது.

௧௧௨) பாரி மகளிர் பாடியது.

௧௧௩ முதல் ௧௨० வரை) கபிலர் பாடியது.

௧௨௧, ௧௨௨, ௧௨௩, ௧௨௪) மலையமான் திருமுடிக்காரியை கபிலர் பாடியது.

௧௨௫) தேர்வண் மலையனை வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் பாடியது.

௧௨௬) மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௧௨௭ முதல் ௧௩௫ வரை) ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௧௩௬) ஆய் அண்டிரனை துறையூர் ஓடைக்கிழார் பாடியது.

௧௩௭) நாஞ்சில் வள்ளுவனை ஒருசிறைப் பெரியனார் பாடியது.

௧௩௮, ௧௩௯) ஆய் அண்டிரனை மருதனிளநாகனார் பாடியது.

௧௪०) ஆய் அண்டிரனை ஔவையார் பாடியது.

௧௪௧, ௧௪௨) வையாவிக் கோப்பெரும் பேகனை பரணர் பாடியது.

௧௪௩, ௧௪௪, ௧௪௫) வையாவிக் கோப்பெரும் பேகனை கபிலர் பாடியது.

௧௪௬) வையாவிக் கோப்பெரும் பேகனை அரிசில்கிழார் பாடியது.

௧௪௭) வையாவிக் கோப்பெரும் பேகனை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது.

௧௪௮, ௧௪௯, ௧௫०) கண்டீரக்கோப்பெருநள்ளி வன்பரணர் பாடியது.

௧௫௧) இளவிச்சிக்கோவை பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௧௫௨, ௧௫௩)
வல்வில்லோரியை வன்பரணர் பாடியது.

௧௫௪, ௧௫௫, ௧௫௬) கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது.

௧௫௭) ஏறைக்கோனை குறமகள் இளவெயினியார் பாடியது.

௧௫௮, ௧௫௯, ௧௬०, ௧௬௧) குமணனை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௨) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௩) பெருஞ்சித்திரனாரின் மனைவியை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௪, ௧௬௫) குமணனை பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௧௬௬) சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௬௭) சோழன் கடுமான்கிள்ளியை கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௬௮) பிட்டங்கொற்றனை கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

௧௬௯) பிட்டங்கொற்றனை காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௧௭०) பிட்டங்கொற்றனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௧௭௧) பிட்டங்கொற்றனை காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௧௭௨) பிட்டங்கொற்றனை வடமண்ணக்கன் தாமோதரனார் பாடியது.

௧௭௩) சிறுகுடிக்கிழான் பண்ணனை சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் பாடியது.

௧௭௪) மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௧௭௫) ஆதனுங்கனை கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

௧௭௬) ஓய்மான் நல்லியக் கோடானை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௧௭௭) மல்லி கிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௭௮) பாண்டியன் கீரஞ்சாத்தனை (பாண்டிக் குதிரைச்சாக்கையன்) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௭௯) நாலைக்கிழவன் நாகனை வடநெடுந்தத்தனார் பாடியது.

௧௮०) ஈர்ந்தூர்க்கிழான் தோயனை கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௮௧) வல்லார் கிழான் பண்ணனை சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.

௧௮௨) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது.

௧௮௩) ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடியது.

௧௮௪) பாண்டியன் அறிவுடை நம்பியை பிசிராந்தையார் பாடியது.

௧௮௫) தொண்டைமான் இளந்திரையன் பாடியது.

௧௮௬) மோசிகீரனார் பாடியது.

௧௮௭) ஔவையார் பாடியது.

௧௮௮) பாண்டியன் அறிவுடைநம்பி பாடியது.

௧௮௯) மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

௧௯०) சோழன் நல்லுருத்திரன் பாடியது.

௧௯௧) பிசிராந்தையார் பாடியது.

௧௯௨) கணியன் பூங்குன்றன் பாடியது.

௧௯௩) ஓரேருழவர் (ஓர் ஏர் உழவர்) பாடியது.

௧௯௪) பக்குடுக்கை நன்கணியார் பாடியது.

௧௯௫) நரிவெரூஉத் தலையார் பாடியது.

௧௯௬) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௯௭) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௯௮) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் பாடியது.

௧௯௯) பெரும்பதுமனார் பாடியது.

௨००) கபிலர் பாடியது.

௨०௧, ௨०௨) இருங்கோவேளை கபிலர் பாடியது.

௨०௩) சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௨०௪) வல்வில் ஓரியை கழைதின் யானையார் பாடியது.

௨०௫) கடிய நெடுவேட்டுவனை பெருந்தலைச்சாத்தனார் பாடியது.

௨०௬) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௨०௭) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨०௮) அதியமான் நெடுமானஞ்சியை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨०௯) மூவனை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨௧०, ௨௧௧) சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறையை பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௨௧௨) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் பாடியது.

௨௧௩) கோப்பெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது. (கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப்பாடிச் சந்து செய்தது)

௨௧௪) கோப்பெருஞ்சோழன் பாடியது.

௨௧௫) கோப்பெருஞ்சோழன் பாடியது. (சோழன் வடக்கிருந்தான், பிசிராந்தையார் வருவார் என்றான். 'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர். அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது)

௨௧௬) கோப்பெருஞ்சோழன் பாடியது. (வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது.)

௨௧௭) பொத்தியார் பாடியது. (கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர். அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது)

௨௧௮) கண்ணகனார் (நத்தத்தனார்) பாடியது. (பிசிராந்தையார் வடக்கிருந்தார், அதனைக் கண்டு பாடியது)

௨௧௯) கோப்பெருஞ் சோழனை பெருஞ்கருவூர்ச்சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.

௨௨०) பொத்தியார் பாடியது. (சோழன் வடக்கிருந்தான். அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார், சோழன் உயிர் நீத்தான். அவனன்றி வறிதான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது).

௨௨௧) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது. (சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது)

௨௨௨) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது. (தன்மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச்சென்று, தாமும் உயிர்விடத்துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக்கேட்டுப் பாடியது இச்செய்யுள்).

௨௨௩) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது.

௨௨௪) சோழன் கரிகாற்பெருவளத்தானை கருங்குழல் ஆதனார் பாடியது.

௨௨௫) சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.

௨௨௬) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௨௨௭) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.

௨௨௮) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஐயூர் முடவனார் பாடியது.

௨௨௯) கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை கூடலூர்க்கிழார் பாடியது. (அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது).

௨௩०) அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.

௨௩௧, ௨௩௨) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௨௩௩, ௨௩௪) வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

௨௩௫) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௨௩௬) கபிலர் பாடியது. (வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது).

௨௩௭) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது. (வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப் பாடிய செய்யுள் இது).

௨௩௮) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது. (வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக் கவனிக்க.)

௨௩௯) நம்பி நெடுஞ்செழியனை பேரெயின் முறுவலார் பாடியது.

௨௪०) ஆயை குட்டுவன் கீரனார் பாடியது.

௨௪௧) ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௨௪௨) ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை குடவாயிற்தீரத்தனார் (கடவாயில் நல்லாதனார்) பாடியது.

௨௪௩) தொடித்தலை விழுத்தண்டினார் பாடியது.

௨௪௪) பாடப்பட்டோரும் பாடினோரும் அறியவியலாவளவிற்கு சிதைந்தே கிடைத்தது இப்பா.

௨௪௫) சேரமான் கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை பாடியது.

௨௪௬) பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பாடியது.

௨௪௭) பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டை மதுரைப் பேராலவாயர் பாடியது.

௨௪௮) ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.

௨௪௯) தும்பி சொகினனார் (தும்பிசேர் கீரனார்) பாடியது.

௨௫०) தாயங்கண்ணியார் பாடியது.

௨௫௧, ௨௫௨) மாற்பித்தியார் பாடியது.

௨௫௩) குளம்பாதாயனார் பாடியது.

௨௫௪) கயமனார் பாடியது.

௨௫௫) வன்பரணர் பாடியது.

௨௫௬, ௨௫௭) பாடியவர் பெயர் தெரிந்திலது.

௨௫௮) உலோச்சனார் பாடியது.

௨௫௯) கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.

௨௬०) வடமோதங்கிழார் பாடியது.

௨௬௧) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௨௬௨) மதுரைப் பேராலவாயர் பாடியது.

௨௬௩) பாடியவர் பெயர் தெரிந்திலது.

௨௬௪) உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

௨௬௫) சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.

௨௬௬) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியை பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௨௬௭, ௨௬௮) இப்பாக்களின் படிகள் கிடைத்தில.

௨௬௯) ஒளவையார் பாடியது.

௨௭०) கழாத்தலையார் பாடியது.

௨௭௧) வெறிபாடிய காமக்கண்ணியார் பாடியது.

௨௭௨) மோசிசாத்தனார் பாடியது.

௨௭௩) எருமை வெளியனார் பாடியது.

௨௭௪) உலோச்சனார் பாடியது.

௨௭௫) ஒரூஉத்தனார் பாடியது.

௨௭௬) மாதுரைப் பூதனிளநாகனார் பாடியது.

௨௭௭) பூங்கணுத்திரையார் பாடியது.

௨௭௮) காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.

௨௭௯) ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.

௨௮०) மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௨௮௧) அரிசில் கிழார் பாடியது.

௨௮௨) பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.

௨௮௩) அடைநெடுங் கல்வியார் பாடியது.

௨௮௪) ஓரம் போகியார் பாடியது.

௨௮௫) அரிசில் கிழார் பாடியது.

௨௮௬) ஒளவையார் பாடியது.

௨௮௭) சாத்தந்தையார் பாடியது.

௨௮௮, ௨௮௯) கழாத்தலையார் பாடியது.

௨௯०) ஒளவையார் பாடியது.

௨௯௧) நெடுங்கழுத்துப்பரணர் பாடியது.

௨௯௨) விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.

௨௯௩) நொச்சி நியமங்கிழார் பாடியது.

௨௯௪) பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௨௯௫) ஔவையார் பாடியது.

௨௯௬) வெள்ளை மாளர் பாடியது.

௨௯௭) பாடியவர் பெயர் கிடைத்தில.

௨௯௮) ஆவியார் பாடியது.

௨௯௯) பொன்முடியார் பாடியது.

௩००) அரிசில் கிழார் பாடியது.

௩०௧) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௩०௨) வெறிபாடிய காமக் கண்ணியார் பாடியது.

௩०௩) எருமை வெளியனார் பாடியது.

௩०௪) அரிசில்கிழார் பாடியது.

௩०௫) மதுரை வேளாசானார் பாடியது.

௩०௬) அள்ளூர் நன்முல்லையார் பாடியது.

௩०௭) பெயர் கிடைத்தில.

௩०௮) கோவூர்க்கிழார் பாடியது.

௩०௯) மதுரை இளங்கண்ணிக்கௌசிகனார் பாடியது.

௩௧०) பொன்முடியார் பாடியது.

௩௧௧) ஒளவையார் பாடியது.

௩௧௨) பொன்முடியார் பாடியது.

௩௧௩) மாங்குடி மருதனார் பாடியது.

௩௧௪) ஐயூர் முடவனார் பாடியது.

௩௧௫) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௩௧௬) மதுரைக் கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.

௩௧௭) வெம்பற்றூர்க்குமரனார் பாடியது.

௩௧௮) பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௩௧௯) ஆலங்குடி வங்கனார் பாடியது.

௩௨०) வீரை வெளியனார் பாடியது.

௩௨௧) உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௩௨௨) ஆவூர்கிழார் பாடியது.

௩௨௩) பெயர்கள் கிடைத்தில

௩௨௪) ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௨௫) உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

௩௨௬) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் பாடியது.

௩௨௭, ௩௨௮) பெயர்கள் கிடைத்தில.

௩௨௯) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.

௩௩०) மதுரை கணக்காயனார் பாடியது.

௩௩௧) உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார்) பாடியது.

௩௩௨) விரியூர் கிழார் பாடியது.

௩௩௩) பெயர்கள் கிடைத்தில.

௩௩௪) மதுரைத் தமிழக்கூத்தனார் பாடியது.

௩௩௫) மாங்குடிக்கிழார் பாடியது.

௩௩௬) பரணர் பாடியது.

௩௩௭) கபிலர் பாடியது.

௩௩௮) குன்றூர்க்கிழார் மகனார் பாடியது.

௩௩௯, ௩௪०) பெயர்கள் கிடைத்தில.

௩௪௧) பரணர் பாடியது.

௩௪௨) அரிசில் கிழார் பாடியது.

௩௪௩) பரணர் பாடியது.

௩௪௪, ௩௪௫) அடைநெடுங்கல்வியார் பாடியது. பாடப்பட்டோன் பெயர் கிடைத்தில.

௩௪௬) அண்டர்மகன் குறுவழுதி பாடியது.

௩௪௭) கபிலர் பாடியது.

௩௪௮) பரணர் பாடியது.

௩௪௯) மதுரை மருதனிளநாகனார் பாடியது.

௩௫०) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் பாடியது.

௩௫௧) மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.

௩௫௨) பரணர் பாடியது.

௩௫௩) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௩௫௪) பரணர் பாடியது.

௩௫௫) பெயர்கள் கிடைத்தில.

௩௫௬) தாயங்கண்ணனார் பாடியது.

௩௫௭) பிரமனார் பாடியது.

௩௫௮) வான்மீகியார் பாடியது.

௩௫௯) கரவட்டனார் பாடியது.

௩௬०) சங்க வருணர் என்னும் நாகரியர் பாடியது.

௩௬௧) பெயர்கள் கிடைத்தில.

௩௬௨) சிறுவெண்டேரையார் பாடியது.

௩௬௩) ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.

௩௬௪) கூகைக் கோரியார் பாடியது.

௩௬௫) மார்க்கண்டேயனார் பாடியது.

௩௬௬) தருமபுத்திரனை கோதமனார் பாடியது.

#_௩௬௭) சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஔவையார் பாடியது. (மூவேந்தரையும் ஒருங்கே பாடிய சிறப்புடையது இப்பா)

௩௬௮) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் கழாத் தலையார் பாடியது.

௩௬௯) சேரமான் கடலோட்டிய வெல்கெழுகுட்டுவனை பரணர் பாடியது.

௩௭०) சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௩௭௧) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௩௭௨) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடிக்கிழார் பாடியது.

௩௭௩) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்கிழார் பாடியது.

௩௭௪, ௩௭௫) ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேர் முடமோசியார் பாடியது.

௩௭௬) ஓய்மான் நல்லியாதனை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௭௭) சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.

௩௭௮) சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௩௭௯) ஓய்மான்வில்லியாதனை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௮०) நாஞ்சில் வள்ளுவனை கருவூர்க்கதப்பிள்ளை பாடியது.

௩௮௧) கரும்பனூர் கிழானை புறத்திணை நன்னகனார் பாடியது.

௩௮௨) சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் பாடியது.

௩௮௩) மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. பாடப்பட்டோன் பெயர் கிடைத்தில. (கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்தது கொண்டு,அவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்).

௩௮௪) கரும்பனூர் கிழானை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௮௫) அம்பர்கிழான் அருவந்தையை கல்லாடனார் பாடியது.

௩௮௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர் கிழார் பாடியது.

௩௮௭) சேரமான் சிக்கற்பள்ளித்துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனை குண்டுகட் பாலியாதனார் பாடியது.

௩௮௮) சிறுகுடிகிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது.

௩௮௯) நல்லேர் முதியன் ஆதனுங்கனை கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

௩௯०) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது

௩௯௧) பொறையாற்றுக் கிழானை கல்லாடனார் பாடியது.

௩௯௨) அதியமான் நெடுமானஞ்சியின்மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.

௩௯௩) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.

௩௯௪) சோழிய ஏனாதி திருக்குட்டுவனை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௩௯௫) சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரனார் பாடியது.

௩௯௬) வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.

௩௯௭) கோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனனை எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் பாடியது.

௩௯௮) சேரமான் வஞ்சனை திருத்தாமனார் பாடியது.

௩௯௯) தாமான் தோன்றிக்கோனை ஐயூர் முடவனார் பாடியது.

௪००) சோழன் நலங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

**********************************************

உதவி : பல பதிப்பகத்துப் புறநானூறு நூல் பதிப்புகள் மற்றும் இணையம்

தொகுப்பு : தனித்தமிழாளன்