Thursday, May 28, 2020

மீப்பெரும் திருக்குறளுரை

மீப்பெரும் திருக்குறளுரை 5000 பக்கங்கள்:

திருக்குறளுக்குப் பலர் உரையெழுதியிருப்பினும் அவை யாவும் தமக்கு நிறைவாகயில்லையென்றெண்ணிய பாவலரேறு பெருஞ்சித்திரனார், அவர் சிறைப்படுத்தப்பட்ட 1975-76ஆம் ஆண்டு திருக்குறளுக்கு ஒரு மெய்ப்பொருளுரைகாணத் திட்டமிட்டார்.



முதலில் திட்டமிட்டது 5000 பக்கங்களுடன் 50000 குறிப்புகளடங்கிய உரைநூல். ஆனால், பின்னர் அது 8000 பக்கங்கள் நீளவும் வாய்ப்புள்ளதென்று அவரே கூறுகிறார். 1800 பக்கங்களை சிறையிலிருக்கும்போதே எழுதிமுடித்தார்.
(600 பக்கங்கள் கொண்ட 14 அல்லது 15 நூல் தொகுதிகளாக, அதாவது 9000 பக்கங்களாக எழுதுவது அவரின் திட்டம்).

இவ்வுரைநூலை சிற்றுரை என்றும் விரிவாக எழுத நேரமின்மையால் இயலவில்லையென்றும் கூறுகிறார் பெருஞ்சித்திரனார். 😲

அவ்வுரைநூலின் முன்னுரை மட்டுமே 300 பக்கங்கள். அறம் என்னும் சொல்லின் பொருளையும் அவ்வதிகாரத்தையும் விளக்க, அதற்கு மட்டுமே தனியாக வேறொரு முன்னுரை 66 பக்கங்கள். முதற்குறளுக்கு விளக்கம் 11 பக்கங்கள்.

வலைத்தளத்தில் எனக்கு 4 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அதில், 240 குறட்பாக்களுக்கு மட்டுமே உரை உள்ளது. முன்னுரையோடு சேர்த்து 240 குறட்பாக்களின் உரை மட்டுமே 1200 பக்கங்கள்.

இவ்வுரைநூலே மிகப்பெரிய திருக்குறளுரை நூல் போலும்.

இவ்வளவிற்குக் கூடவா ஒரு உரைநூலை எழுதமுடியும்..!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் எத்தகைய பேரறிவாளரென்பதை சிறிதே நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

(இவ்வுரைநூல் முழுவதும் கிடைக்காததால், அதன் மொத்த பக்கங்கள் 5000மா அன்றி 8000மா என்பதை அடியேனறியேன்).

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

தமிழிலக்கணநூல்கள்

தமிழிலக்கண நூல்கள்:


உலகமொழிகள் பலவற்றிற்கு இலக்கியவரலாறு எழுதலாம். ஆனால், உலகமொழிகளுள் தமிழுக்கு மட்டுமே இலக்கணவரலாறு எழுதலாம். ஒருமொழியை பண்படுத்த இத்தனை இலக்கணநூல்கள் தோன்றியுள்ளனவென்றால், அம்மொழியின் இலக்கியவளமென்ன, சொற்பழமையென்ன, மொழியின் தொன்மையென்ன என்பவற்றையெண்ணுங்கால் அது கற்பனைக்கும் எட்டாததாகவேயுள்ளது. கீழேயுள்ள இலக்கணநூற்பட்டியலைக்கண்டு வியப்புறுவீர். இவற்றை விடுத்து நீவீரறிந்த இலக்கணநூல்களை பின்னூட்டத்தில் அறிவியுங்கள்.



௧. தொல்காப்பியம்
௨. புறப்பொருள் வெண்பாமாலை
௩. யாப்பருங்கலம்
௪. யாப்பருங்கலக்காரிகை
௫. தண்டியலங்காரம்
௬. நன்னூல்
௭. நம்பியகப்பொருள் விளக்கம்
௮. இறையனார் அகப்பொருள்
௯. தொன்னூல் விளக்கம்
௰. இலக்கண விளக்கம்
௰௧. தமிழ்நெறி விளக்கம்
௰௨. சிதம்பரப்பாட்டியல்
௰௩. நவநீதப்பாட்டியல்
௰௪. பன்னிரு பாட்டியல்
௰௫. வீரசோழியம்
௰௬. இலக்கணக்கொத்து
௰௭. தமிழ்நூல்
௰௮. முத்துவீரியம்
௰௯. சுவாமிநாதம்
௨௰. நேமிநாதம்
௨௧. அறுவகை இலக்கணம்
௨௨. மாறனலங்காரம்

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

Saturday, May 23, 2020

நச்செள்ளையார் - காக்கைப்பாடினியார் பெயர்க்காரணம்

நச்செள்ளையாருக்குக் காக்கைப்பாடினியார்என்று பெயர்வரக்காரணம் :


நச்செள்ளையார் பெண்பாற்புலவராவர். அஃதே அவரின் இயற்பெயராகும். அக்காலத்தில் நச்செள்ளையென்று பெண்மக்களுக்குப் பெயரிடும் வழக்கமிருந்தது போலும். எட்டுத்தொகையுள் குறுந்தொகையில் ௨௧० ஆம் பாட்டும், புறநானூற்றில் ௨௭௮ ஆம் பாட்டும் மற்றும் பதிற்றுப்பத்தில் ஆறாம்பத்தும் என மொத்தம் பன்னிரண்டு பாட்டுகள் இவரால் பாடப்பட்டவை. அவற்றுள், குறுந்தொகையின் பாட்டால்தான் இவர் காக்கைப்பாடினியார் என்னும்பெயர்பெற்றதாகச் சான்றோர் கருதுவர். அப்பாட்டு,



நூல் : குறுந்தொகை
திணை : முல்லை
பாட்டெண் : ௨௧०

தலைவியைப் பிரிந்துசென்று மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்த நன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.

செய்யுள் :


திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. 

                                            - நச்செள்ளையார். 

விளக்கம்:


திண்ணிய தேரையுடைய நள்ளியென்னும் அரசனது காட்டிலுள்ள இடையர்களுக்குரிய பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில் முற்றும் ஒருங்கே விளைந்த வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடையசோற்றை ஏழு பாத்திரங்களில் ஏந்திக்கொடுத்தாலும், என் தோழியாகிய தலைவியினுடைய பெரிய தோளை நெகிழச்செய்த துன்பத்தை நீக்கும்பொருட்டு விருந்தினர் வரும்படி கரைந்த காக்கைக்குரிய அப்பலியானது சிற்றளவினதே யாகும். (தலைவன் வருவான், தலைவியே நீ கவலை கொள்ளாதே என்றுகூற பெரிய கூட்டமாக வந்து காக்கைகள் கரைந்தனவாம். அப்பெரிய காக்கைக்கூட்டத்திற்கு இந்த சோறு போதாதாம்).

முடிபு: 

சோறு ஏந்தினும் கரைந்த காக்கையது பலி சிறிது.   

கருத்து: 

காக்கை கரைதலாகிய நின்வரவுக்குரிய நிமித்தங் காட்டி, யான் தலைவியை ஆற்றுவித்தேன்.   

இப்படி காக்கை கரைந்ததைச் சிறப்பித்துப்பாடியதால் தான் இவருக்கு காக்கைப்பாடினியார் என்னும் சிறப்புப்பெயர் ஏற்பட்டது என்று கருதுவர்.

இப்பாட்டில் நாம் அறியுஞ்செய்திகள் இரண்டு,
நச்செள்ளையார் சிறப்புப்பெயர்பெற்ற வரலாறு, மற்றும் காக்கை கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவர் என்று நம்பும் வழக்கம் ஈராயிரமாண்டுகளாகவே நம்மிடையே இருந்துவருகிற செய்தி.

******************************************

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

சங்க இலக்கியம் - பாட்டும் தொகையும்

சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) என்னும் நூல் சு. வையாபுரிப்பிள்ளை தொகுத்த நூல்களில் ஒன்று. [1] இந்தப் பதிப்பில் பாடலாசிரியரின் பாடல்கள் வெவ்வேறு நூல்களில் காணப்படினும் அனைத்தும் ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. சில புலவர்களின் பெயர்கள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றை அறிஞர் கழகம் ஆய்ந்து கண்டு ஒருவரே என்று முடிவு செய்துள்ளது. [2] புலவர் பெயர்கள் அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.


பாடல்கள்தொகு

  • ஆசிரியர் பெயர் காணாப் பாடல்கள் 132 2250-2381
  • பாடிய புலவர்கள் 473
  • இவர்கள் பாடிய பாடல்கள் 2279


பதிப்பில் காணப்படும் தலைப்புகள்
தொகு

  • உரிமையுரை – ஆசிரியப்பா வடிவில்
  • எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் அடங்கியுள்ள நூல்களை தொகுத்துக் கூறும் நினைவு வெண்பாக்கள்
  • நன்றியுரை – க. அ. செல்லப்பன்
  • முகவுரை – மு. சண்முகம்
  • முதற்பதிப்பின் முகவுரை – மு. பாலசுப்பிரமணியன்
  • கடவுள் வாழ்த்து [3]
  • நூல் [4]
  • ஆசிரியர் பெயர் காணப்படுவன [5]
  • ஆசிரியர் பெயர் காணாதன [6]
  • பிரதிகளில் அகப்படாத பாட்டுகளின் எண்கள் [7]
  • சங்க இலக்கியங்களின் வரலாறு முதலியன [8]
  • சங்க இலக்கியங்களின் பதிப்பு விவரம் [9]
  • சிறப்புப் பெயர் அகராதி [10]
  • புலவர்களும் பாடற்றொகையும் [11]
  • பாட்டெண்களின் ஒப்புநோக்க அட்டவணை [12]
  • புலர்களின் பெயர் வகை [13]
  • புலவர்களும் அவர்களாற் பாடப்பட்டோரும் [14]
  • அரசர் முதலானோரும் அவர்களைப் பாடினோரும் [15]
  • புலவர்கள் அகராதி [16]
  • பாட்டு முதற்குறிப்பு அகராதி [17]
  • பிரதிகளின் அட்டவணை [18]


அடிக்குறிப்பு
தொகு

  1.  சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) வையாபுரிப் பிள்ளை தொகுப்பும் பத்திப்பும், அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிய அரிய பதிப்பு, சென்னை, பாரி நிலையம் வெளியீடு, முதற் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967.
  2.  நூலின் முகவுரை
  3.  பக்கம் 1-7
  4.  பக்கம் 8-1368
  5.  பக்கம் 8-1320
  6.  பக்கம் 1321-1368
  7.  பக்கம் 1369
  8.  பக்கம் 1370-1373
  9.  பக்கம் 1374-1377
  10.  பக்கம் 1378-1402
  11.  பக்கம் 1403-1405
  12.  பக்கம் 1406-1421
  13.  பக்கம் 1422-1435
  14.  பக்கம் 1436-1460
  15.  பக்கம் 1461-1485
  16.  பக்கம் 1486-1502
  17.  பக்கம் 1503-1534
  18.  பக்கம் 1535-1540

இந்த இரண்டு நூல்களை பதிவிறக்க கீழேயுள்ள இணைப்புகளை சொடுக்குக


சங்க இலக்கியம் - பாட்டும் தொகையும் முதல் தொகுதி:
https://drive.google.com/file/d/1kC2_MJUb5vzYVLXz2b3no4aIQIyVXl9l/view?usp=drivesdk





Friday, May 15, 2020

தொல்காப்பிய இயல்கள்

தொல்காப்பிய நூல் தலைப்புகள் :


தொல்காப்பியம் என்பதே இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூல் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும். தொல்காப்பியம் அதன் சிறப்புப்பாயிரத்தொடு சேர்த்து ௧௬०௨ நூற்பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என முப்பெருமதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்திற்கு ௯ இயல்கள் முறையே, ௨௭ இயல்களைக்கொண்டுள்ளது இந்நூல். இதற்குத் தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கராம் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். தொல்காப்பியத்தைதான் பயிலப்போவதில்லை நாம், குறைந்தளவு அந்நூலின் தலைப்புகளையாவது தெரிந்துகொள்வோம்.


சிறப்புப்பாயிரம்


எழுத்ததிகாரம்


௧. நூல் மரபு
௨. மொழி மரபு
௩. பிறப்பியல்
௪. புணரியல்
௫. தொகைமரபு
௬. உருபியல்
௭. உயிர்மயங்கியல்
௮. புள்ளிமயங்கியல்
௯. குற்றியலுகரப்புணரியல்

சொல்லதிகாரம்


௧. கிளவியாக்கம்
௨. வேற்றுமையியல்
௩. வேற்றுமைமயங்கியல்
௪. விளிமரபு
௫. பெயரியல்
௬. வினையியல்
௭. இடையியல்
௮. உரியியல்
௯. எச்சவியல்

பொருளதிகாரம்


௧. அகத்திணையியல்
௨. புறத்திணையியல்
௩. களவியல்
௪. கற்பியல்
௫. பொருளியல்
௬. மெய்ப்பாட்டியல்
௭. உவமயியல்
௮. செய்யுளியல்
௯. மரபியல்

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

கோழியூர் - உறையூர்

கோழி - கோழியூர் - உறந்தை - உறையூர்


கரிகால் அமைத்த உறையூரின் பண்டைப்பெயர் "கோழி" என்னும் சான்றுகள்.



"முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்"

- சிலம்பு (புகார்க்காண்டம், நாடுகாண் காதை)




பொருள்:
முறம்போலுஞ் செவியினையுடைய யானையை முன்னர்ச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறகினையுடைய கோழி என்னும் நகரின்கண் விரும்பிப் புக்கார் என்க.
(கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு, மதுரையை நோக்கிச் செல்கையில் உறையூரையடைந்ததை இளங்கோவடிகள் எழுதியது). புறஞ்சிறை வாரணம் - கோழி.

*************

"குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழ நன்னாட்டுப் படினே, #கோழி
உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,"

- புறநானூறு - 67ஆம் பாட்டு 6 முதல் 9 வரை அடிகள்.


பொருள் : அன்னச்சேவலே, நீ குமரித்துறை அயிரை மீனை உண்டபின்னர் வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாயாயின் இடையில் கோழி (உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறுக.

************

பின்னாளில், தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், உறையூரை மூக்கீச்சரம் என்னும் பெயரில் பாடியுள்ளார். அதில், அவ்வூரை கோழி என்று இரண்டு பாடல்களில் குறிப்பிடுகிறார்.

"தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்" - 4ஆம் பாட்டு

"வடமன்நீடு புகழ்ப்பூழி யன்றென்ன வன்கோழிமன்" - 5ஆம் பாட்டு.

*************

முற்காலத்து ஓர் கோழி கரிகாலின் யானையொடு போரிட்டு வென்ற நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று. அந்நகர் காணும்பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறஞ்சிறை வாரணம் எனப்பட்டது என்பர் அரும்பதவுரையாசிரியர். இக்காரணக்கதை பொருநராற்றுப்படையிலும், பட்டினப்பாலையிலும் கூறப்படவில்லை.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

உதவி :

1. சிலப்பதிகாரம் நூல்
2. புறநானூறு நூல்
3. தேவாரம் - இரண்டாம் திருமுறை

படம் : உறையூர் ஐவண்ணத்தப்பர் கோயிற் கருவறையின் வலப்புறவெளிச்சுவற்றிலுள்ள சிற்பம். யானையைக் கோழி கொத்துவதுபோன்றது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

புறநானூறு - பாடல் 192

யாதும் ஊரே யாவரும் கேளிர்


இச்சொற்றொடர் எங்கிருந்து வந்தது? யாரால் பேசப்பட்டது அல்லது பாடப்பட்டது? இதற்கு விடை புறநானூற்றில் 192 ஆம் பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பாடலை இயற்றியவர் கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் ஆவார். முற்காலத்தில் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்டு, தற்காலத்தில் மகிபாலன்பட்டி எனப்படும் ஊரே இவர் பிறந்த ஊர் ஆகும். இவ்வூர் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் இவ்வூரில் பிறந்து, புகழுடன் வாழ்ந்த இன்னொரு தமிழ் மேதை பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் ஆவார்.

பூங்குன்றனார் துன்பம் வந்தபோதும், துயர் வந்த போதும் அயராத உள்ளமும், கலங்காத அமைதியும் கொண்டவர். தனக்கு நல்லது செய்தாரென ஒருவரைப் பாராட்டவும், கெடுதல் செய்தாரென ஒருவரை இகழவும் செய்யாதவர். அதுபோல, பெரியோர், வசதியானவர் என ஒருவரைப் புகழவும், சிறியோர், வசதியற்றவர் என அவரைப் புறக்கணிக்கவும் செய்யமாட்டார். எல்லா மனிதரும் அவரவர் செய்த வினைக்கேற்ப இன்ப துன்பமும், உயர்வு தாழ்வும், செல்வமும் வறுமையும் அடைவார்கள் என்பதை தாம் அறிந்த நூல்களாலும், நடைமுறை வாழ்க்கையாலும் நன்கு தெரிந்தவர்.

அதனால், நல்லிசைப் புலமை மிக்க கணியன் பூங்குன்றனார் எத்தகைய வேந்தரையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடியதில்லை. இதனை அறிந்த அக்காலச் சான்றோர் வியந்து, அவரிடம் வந்து “பாடுபெறு சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாததற்கு என்ன காரணம்?” என்று கேட்டனர். அதற்குப் பதிலாக, இவர் கூறிய பாடலைப் பார்ப்போம்.



யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

                       - கணியன் பூங்குன்றனார்

பதவுரை: 


யாதும் ஊர் – எல்லா ஊரும் எனக்கு ஊர்

யாவரும் கேளிர் – எல்லா ஊரிலுமுள்ள மக்கள் அனைவருமே எனக்கு உறவினர்தான்

தீதும் நன்றும் பிறர் தர வாரா – நமக்கு நேரும் தீமையும், நன்மையும் வேறு யாரும் தந்து வருவதில்லை

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன – நம் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் வேதனைகளும், அவற்றைப் போக்க நாம் செய்யும் செயல்களும் அத்தன்மைத்ததே, நம் செயல்களினால் ஏற்படும் விளைவுகளே

சாதலும் புதுவது அன்று – இவ்வுலகில் பிறந்தவர் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை, இறப்பதும் ஒன்றும் புதிதல்ல

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலம் – வாழ்க்கை வாழ்வது மிக இனிதென்று நான் ஆனந்தம் மிக அடைந்ததுவுமல்லை

முனிவின் இன்னாது என்றலும் இலம் – வாழ்க்கை வெறுத்து இவ்வாழ்க்கை வேண்டேன் என்று ஒதுங்கியதுமில்லை

மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது - மின்னலுடன் கூடிய மேகம் குளிர்ந்த மழைத் துளிகளை பெய்ததுடன் நில்லாது

கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று – அங்கங்கே வழியில் இருக்கும் கற்களில் மோதி ஒலி எழுப்பி ஓடும் பெரிய ஆற்றில்

நீர் வழிப்படூஉம் புணை போல் – நீரின் வழியே இழுத்துச் செல்லப்படும் மிதவை போல

ஆர் உயிர் முறை வழிப்படூஉம் என்பது – அருமை பெருமையான நம் உயிர் போக வேண்டிய நேரம் வந்தால் போய்ச் சேரும் என்று

திறவோர் காட்சியின் தெளிந்தனம் – நல்ல நீதிநெறி அறிந்தோர் சொல்லிய நூல்களால் அறிந்து தெளிவுடன் இருக்கிறேன்

ஆகலின் - அதனால்

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலம் – தங்கள் குணநலன்களால் பேறு பெற்ற பெரியோர்களைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட மாட்டேன்

சிறியோரை இகழ்தல் அதனினும் இலம் -.அதைவிட, குணநலன் இல்லாத மதியற்றோரை ஏளனமாக எண்ணி இகழவும் மாட்டேன்.

பொருளுரை: 


அன்புசால் சான்றோர்களே!

நமக்கு நேரும் தீமையும், நன்மையும் வேறு யாரும் தந்து வருவதில்லை. நம் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் வேதனைகளும், அவற்றைப் போக்க நாம் செய்யும் செயல்களும் அத்தன்மைத்ததே, நம் செயல்களினால் ஏற்படும் விளைவுகளே.

இவ்வுலகில் பிறந்தவர் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை, இறப்பதுவும் ஒன்றும் புதிதல்ல. வாழ்க்கை வாழ்வது மிக இனிதென்று நான் ஆனந்தம் மிக அடைந்ததுவுமல்ல. வாழ்க்கை வெறுத்து இவ்வாழ்க்கை வேண்டேன் என்று ஒதுங்கியதுமில்லை.

மின்னலுடன் கூடிய மேகம் குளிர்ந்த மழைத்துளிகளை பெய்ததுடன் நில்லாது, மழை நீரானது அங்கங்கே வழியில் இருக்கும் கற்களில் மோதி ஒலி எழுப்பி ஓடும் பெரிய ஆற்றில் நீரின் வழியே இழுத்துச் செல்லப்படும் மிதவை போல, அருமை பெருமையான நம் உயிர் போக வேண்டிய நேரம் வந்தால் போய்ச் சேரும் என்று நல்ல நீதிநெறி அறிந்தோர் சொல்லிய நூல்களால் அறிந்து தெளிவுடன் இருக்கிறேன்.

அதனால், தங்கள் குணநலன்களால் பேறு பெற்ற பெரியோர்களை, வசதியானவர்களைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு புகழவும் மாட்டேன். அதைவிட, குணநலன் இல்லாத மதியற்றோரை, வசதியற்ற எளியவர்களை ஏளனமாக எண்ணி இகழவும் மாட்டேன். எனவே, எல்லா ஊரும் எனக்கு ஊர். எல்லா ஊரிலுமுள்ள மக்கள் அனைவருமே எனக்கு உறவினர்தான்.

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

Sunday, May 10, 2020

கரிகாற்வளவனின் பெயர்கள் இடம்பெற்ற இலக்கிய வரிகள் சில

கரிகாற்வளவனின் பெயர்கள் :




"வென்வேல் உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்"
"கண்ணார் கண்ணி கரிகால் வளவன்".
"காவிரி புரக்கும் நாடு கிழவோன்".

                                   - பொருநராற்றுப்படை.


"அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமாவளவன்".

                                   - பட்டினப்பாலை.


"இருநில மருங்கின் பொருநரைபெறா அச்
செரு வெங் காதலின் திருமாவளவன்".

                                          - சிலப்பதிகாரம்.


"வெறுவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
பெருவளக் கரிகால்".
"காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்".
"கழா அர் முன்றுறை கலிகொள் சுற்றமொடு கரிகால்".           

                                                    - பரணர்.

"வளவ.!!! "

           - கருங்குழலாதனார்.


"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக !!
களி அயல் யானைக் கரிகால் வளவ !! "

                               - வெண்ணிக்குயத்தியார்


மேற்கண்டவை, கரிகாற்பெருவளத்தானின் பெயர்கள் பயின்றுவரும் சில இலக்கிய வரிகள்.

நன்றி. வணக்கம்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

தமிழிசை அடிப்படைக் குறிப்புகள்

தமிழிசைத்துளி :


தற்காலத்துத்தமிழர் நாம் இயற்றமிழை ஓரளவு காத்தோம். இசைத்தமிழை மறந்தேபோனோம். தமிழிசைப்பாட்டைக்கற்று வருந்தலைமுறைக்கு கற்பித்தல் நங்கடமையே. அதைமுயல்வோம். அதற்கு தமிழிசைப்பற்றியறிதல் இன்றியமையாமையாகும். அங்ஙனம் இசைகற்க விருப்பிலாரும், குறைந்தவளவு தமிழிசைப்பற்றி அறிந்துகொள்ளல்வேண்டும். ஆரியர்கள் நம் தமிழிசையைக் களவாண்டு கருநாடக இசை என்று பெயரிட்டனர்.


இசை:

பாடுபவனின் அல்லது கருவிகள் மூலம் ஒலி இயக்குபவனின் கருத்தும் ஓசையும் கேட்பவனின் செவியில் விழுந்து மனதில் புகுந்து, எண்ணத்தில் கலந்து உள்ளத்தை அந்த கருத்தோசையோடு இசைவிக்கச் செய்வதால் இசை எனப்பட்டது.

இசையாவது கீழுள்ள வகையாகும்:

௧) மிடற்றிசை - குரலிசை
௨) நரம்புக்கருவியிசை - யாழிசை
௩) காற்றுக்கருவியிசை - குழலிசை
௪) தாளயிசை - பறையிசை

பண்: (இராகம்):

நல்லவண்ணம் பண்படுத்தி, செவிக்கு இனிய ஓசையைச் செய்த(பண்ணிய)தால் இன்னிசை பண் எனும் பொதுப்பெயரால் வழங்கப்பட்டது. ஆரியர் இதை (இ)ராகம் என மாற்றிக்கொண்டனர்.

"குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே" - (திவாகரநிகண்டு)

"வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு
குதிரையும் யானையும்குயிலும்தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை" - (பிங்கலநிகண்டு)

விலங்கு மற்றும் பறவை இனங்களின் ஓசைகளைக்கொண்டு ஏழிசையைப்படைத்தனர் பழந்தமிழர். அதைத்திருடி ஆரியர்கள் தமதாக்கிக்கொண்டனர்.

௧) குரல் - சடஜம்
௨) துத்தம் - ரிஷபம்
௩) கைக்கிளை - காந்தாரம்
௪) உழை - மத்திமம்
௫) இளி - பஞ்சமம்
௬) விளரி - தைவதம்
௭) தாரம் - நிஷாதம்

இவற்றைக்குறிக்க கீழுள்ள அலகுகளை வகுத்தனர்.

'ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற
ஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்'
-- (பிங்கலநிகண்டு)

இயற்றமிழின் உயிர் நெடில் எழுத்துகளாகிய, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகியவை ஏழிசைக்குரிய அலகுகள் என்னும் குறியீடுகளை அமைத்தனர். பின்னர் வசதி, எளிமை கருதி தமிழர்களே ச, ரி, க, ம, ப, த, நி என்ற குறியீட்டு எழுத்துகளை அவற்றிற்கு மாற்றாக வகுத்தனர். இவை சுரங்கள் எனப்பட்டன. சுர் என்ற வேர்ச்சொல்லால் சுரம் என்பது பிறந்தது. அதை ஸ்வரம் என்று மாற்றினர் ஆரியர்.

இவ்வேழ்ச்சுரங்களின் ஏறுநிரல் இறங்குநிரல் - ஆரோசை அமரோசை எனப்பட்டது. அதை ஆரோகணம் அவரோகணம் என்று திரித்தனர்.

இவ்வேழ்ச்சுரங்கள் 12ஆக விரியும்:


1) குரல்
2) மென்துத்தம்
3) வன்துத்தம்
4) மென்கைக்கிளை
5) வன்கைக்கிளை
6) மெல்லுழை
7) வல்லுழை
8 ) இளி
9) மென்விளரி
10) வன்விளரி
11) மென்தாரம்
12) வன்தாரம்



"இசையென்பது நரப்படை வாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகளும்."
---(சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை)

இச்சுரங்களைக்கொண்டு அமைக்கப்பட்ட பழந்தமிழிசை பண்கள் 103 ஆக இருந்தனவென்பர். அது பின்னர் விரிவடைந்து சிலப்பதிகாரக்காலத்தில் 11991 ஆதிபண்களாக (இராகங்கள்) இருந்தன என்று மேற்கண்ட பாடலால் அறியலாம்.




ஏழ்பெரும்பாலைப்பண்கள் :

௧. செம்பாலை
௨. படுமலைப்பாலை
௩. செவ்வழிப்பாலை
௪. அரும்பாலை
௫. கோடிப்பாலை
௬. விளரிப்பாலை
௭. மேற்செம்பாலை

பழந்தமிழிசைநூல்களுள் சில:

௧. முதுகுருகு - பெருங்குருகு
௨. முதுநாரை - பெருநாரை
௩. இசைநுணுக்கம்
௪. தாளவகையோத்து
௫. இந்திரகாளியம்
௬. பஞ்சமரபு

இசையின் அடிப்படையே இன்னும் மிகுதியாகவுள்ளது. ஆனால், இக்குறிப்புகள் இப்போதைக்கு போதுமென நினைக்கிறேன்.

***********************

உதவிய நூல்கள் :

யாழ்நூல்
தமிழிசையியல்
தமிழிசை இலக்கண மரபு

நன்றி. வணக்கம்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

உலகத்தமிழிசை மாநாடுகள்

உலகத்தமிழிசை மாநாடுகள்


இருநூறாண்டுகளாகத் தமிழ்நாட்டு இசையரங்குகளில் தமிழரிசைக்கு இடந்தரப்படாமல் வேற்றுமொழிப்பாடல்களே பாடப்பட்டன. அப்போது, 1900 முதல் 1919 வரை "தமிழிசை இயக்கம்" என்னும் பெயரில் தமிழிசைக்கென்று ஒரு இயக்கம் உருவாக்கி, ஏழு தமிழிசை மாநாடுகளை நடத்தினார் ஐயா.ஆபிரகாம் பண்டிதர்.

வாராது வந்த மாமணி ஆபிரகாம் பண்டிதர்



அதற்குப்பிறகு தமிழிசையைப்பற்றி மக்கள் கண்டுகொள்ளவில்லை. அந்நேரத்தில், தில்லையில் 1941ஆம் ஆண்டு, தில்லை சர்.அண்ணாமலையார், சண்முகனார், பெரியார் ஆகியோரின் பெருமுயற்சியால் தமிழிசை மாநாடு நடத்தப்பெற்றது. அம்மாநாட்டில் பெரியார்,

"தமிழனுக்குத் தெரியாத, புரியாதமொழியில் தமிழன் பாட்டைக்கேட்கவேண்டும். இதற்குப்பெயர்தான் கலைவளர்ச்சியாம். அறிஞர்களே, நமக்குப் பாட்டுக்கேட்கக்கூட தெரியாதென்றும், நம்மொழி பாட்டிசைக்கக்கூட பயன்படாதென்று சொன்னால், இவ்விழிசொல் நம் உயிரைப்போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது? என்று மிகவும் வருத்தமாகக் கூறுகிறேன். சுருக்கமாகச்சொன்னால் தமிழன், தான் நுகரும் இசையை தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப்பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதை தமிழர்களுக்கு பயன்படுமாறு பாடு என்கிறேன்" என்று உரையாற்றினர்.

பிறகு, 1942ஆம் ஆண்டு தேவக்கோட்டையில் மீண்டும் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது. பலவறிஞர்கள் பங்கேற்றனர்.

அதன்பிறகு, 1943ஆம் ஆண்டு மதராசப்பட்டினத்தில் பெரிய அளவில் தமிழிசை மாநாடு அரங்கேறியது.

******************

இவற்றையெல்லாம் அடிப்படையாகக்கொண்டு தமிழகமெங்கும் தமிழிசை பரவவேண்டுமென்ற எண்ணத்தில், நா.அருணாசலனார் என்பவரால் "பெரியார் தமிழிசை மன்றம்" என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இம்மன்றம், தமிழிசைப்பாணர் ஐயா.புசுபவனம் குப்புசாமி அவர்களின் குரலிசையில் "தமிழிசைப்பாடல்கள் - பகுதி 1 மற்றும் 2 என்னும் இரண்டு பகுதிகளில் 20 தமிழிசைப்பாடல்களை வெளியிட்டுள்ளது. ஐயாவிற்கும், இம்மன்றத்திற்கும், ஒலிப்பதிவு செய்த Vijay Musical's நிறுவனத்திற்கும் அடியேனின் பணிவான நன்றியைத் தெரியவித்துக்கொள்கிறேன். இப்பாடல்கள், புரட்சிக்கவிஞர் பாவேந்தர், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் முதலானோரால் இயற்றப்பட்டனவாகும்.

*****************

இப்படியெல்லாம் பாடுபட்டு தமிழிசையைக் காக்கும் அறிஞர்களுக்கிடையில் நாமோ பிறமொழிப்பாடல்களைத் தான் இசையரங்குகளில் ஏற்றுகிறோம். நாம் நம் இசையைக்கேட்பது எக்காலம்?


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலகத்தமிழிசை மாநாடு, மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் கடந்தவாண்டு 2019ல் திசம்பர் மாதம் 14, 15 ஆகிய நாள்களில் நடைபெற்றது.

*************

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்