Saturday, May 23, 2020

நச்செள்ளையார் - காக்கைப்பாடினியார் பெயர்க்காரணம்

நச்செள்ளையாருக்குக் காக்கைப்பாடினியார்என்று பெயர்வரக்காரணம் :


நச்செள்ளையார் பெண்பாற்புலவராவர். அஃதே அவரின் இயற்பெயராகும். அக்காலத்தில் நச்செள்ளையென்று பெண்மக்களுக்குப் பெயரிடும் வழக்கமிருந்தது போலும். எட்டுத்தொகையுள் குறுந்தொகையில் ௨௧० ஆம் பாட்டும், புறநானூற்றில் ௨௭௮ ஆம் பாட்டும் மற்றும் பதிற்றுப்பத்தில் ஆறாம்பத்தும் என மொத்தம் பன்னிரண்டு பாட்டுகள் இவரால் பாடப்பட்டவை. அவற்றுள், குறுந்தொகையின் பாட்டால்தான் இவர் காக்கைப்பாடினியார் என்னும்பெயர்பெற்றதாகச் சான்றோர் கருதுவர். அப்பாட்டு,



நூல் : குறுந்தொகை
திணை : முல்லை
பாட்டெண் : ௨௧०

தலைவியைப் பிரிந்துசென்று மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்த நன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.

செய்யுள் :


திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. 

                                            - நச்செள்ளையார். 

விளக்கம்:


திண்ணிய தேரையுடைய நள்ளியென்னும் அரசனது காட்டிலுள்ள இடையர்களுக்குரிய பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில் முற்றும் ஒருங்கே விளைந்த வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடையசோற்றை ஏழு பாத்திரங்களில் ஏந்திக்கொடுத்தாலும், என் தோழியாகிய தலைவியினுடைய பெரிய தோளை நெகிழச்செய்த துன்பத்தை நீக்கும்பொருட்டு விருந்தினர் வரும்படி கரைந்த காக்கைக்குரிய அப்பலியானது சிற்றளவினதே யாகும். (தலைவன் வருவான், தலைவியே நீ கவலை கொள்ளாதே என்றுகூற பெரிய கூட்டமாக வந்து காக்கைகள் கரைந்தனவாம். அப்பெரிய காக்கைக்கூட்டத்திற்கு இந்த சோறு போதாதாம்).

முடிபு: 

சோறு ஏந்தினும் கரைந்த காக்கையது பலி சிறிது.   

கருத்து: 

காக்கை கரைதலாகிய நின்வரவுக்குரிய நிமித்தங் காட்டி, யான் தலைவியை ஆற்றுவித்தேன்.   

இப்படி காக்கை கரைந்ததைச் சிறப்பித்துப்பாடியதால் தான் இவருக்கு காக்கைப்பாடினியார் என்னும் சிறப்புப்பெயர் ஏற்பட்டது என்று கருதுவர்.

இப்பாட்டில் நாம் அறியுஞ்செய்திகள் இரண்டு,
நச்செள்ளையார் சிறப்புப்பெயர்பெற்ற வரலாறு, மற்றும் காக்கை கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவர் என்று நம்பும் வழக்கம் ஈராயிரமாண்டுகளாகவே நம்மிடையே இருந்துவருகிற செய்தி.

******************************************

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment