Thursday, April 23, 2020

தமிழவை இலக்கியங்களில் முருகு :


தமிழரின் குறிஞ்சிநிலத்தலைவன் சங்கவிலக்கியங்களில் சேயோன், வெஞ்சேய், அருந்திறல் கடவுள், நெடுவேள், கொற்றவை சிறுவ, பழையோள் குழவி, முருகன் என பலபெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளான். அவற்றுள், முருகு, முருகன் என்றும் இம்முருகை அடியொற்றி தோன்றியிருக்கும் சொற்களையும் தேடவெண்ணினேன். அவ்வகையில் தேடிக்கிடைத்த சிலவற்றை ஈண்டு பதிவிடுகிறேன்.


முருகு என்னும் பெயர் :


முருக்கேறிய முருக்கன் தான் முருகனா? என்னும் ஆய்விற்குள் நாம் செல்லவேண்டாம். பொதுப்பொருளையே அறிந்துகொள்வோம். முருகு என்பதற்கு "இளமை" என்று திவாகர நிகண்டும், "அழகு" என்று பிங்கல நிகண்டும் பொருள்கூறுகின்றன. இளமை என்பது ஒர் உயிரியின் பிறப்பிற்கும் முழுவளர்ச்சிக்கும் இடைப்பட்ட நிலைமை அல்லது காலம். இளமைப் பருவத்திலேயே உருவச்சிறுமையும் உடல்மென்மையும் அழகுநிறைவும் மறவுணர்ச்சியும் வலிமைமிகுதியும் பொதுவாக அமைந்திருத்தலால் இளமைக் கருத்திற் சிறுமை, மென்மை, அழகு, மறம், வலிமை முதலிய கருத்துகளும் தோன்றும். முருகு என்பதனோடு சேர்த்து "அன்" என்ற ஆண்பால் விகுதிபெற்று "முருகன்" ஆனது. குறிஞ்சி நிலத்தலைவனை இளைஞனென்று கருதியே குறிஞ்சிநில மக்கள் முருகன் என்றனர்.


முருகு என்னுஞ்சொல் பயின்றுவரும் அடிகள் :


"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"

புறம் 16


"சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின்"

புறம் 23


"முருகொத் தீயே முன்னியது முடித்தலின்"

புறம் 56


"முருகுமெய்ப் புலைத்தி போலத்"

புறம் 259


"அணங்குடை முருகன் கோட்டத்துக்"

புறம் 299


"முருக னற்போர் நெடுவே ளாவி"

அகம் 1


"முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநா"

அகம் 22


"சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து"

அகம் 59


"முருகென மொழியும் ஆயின்"

ஐங்குறுநூறு


"மடவை மன்ற வாழிய முருகே!"

நற்றிணை 34


"முருகயர்ந்து வந்த முதுவாய் வேந்தன்"

குறுந்தொகை 362


"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"

பொருநராற்றுப்படை 131ஆம் அடி


"முருகிய நிறுத்து முரணின ருட்க
முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனகர்"

முருகாற்றுப்படை 243, 244


"அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக"

முருகாற்றுப்படை 269


"படையோர்க்கு முருகயர"

மதுரைக்காஞ்சி 38


"அருங்கடி வேலன் முருகொடு வளைஇ"

மதுரைகாஞ்சி 611


"முருகமர்பூ முரண்கிடக்கை"

பட்டினப்பாலை 37


"முருகியம்" - முருகியப்பறை - வெறியாட்டுப்பறை

தொல்காப்பியம், பொருள். 18 உரை




*****
நன்றி. வணக்கம்🙏

***********************

பதிவிற்குதவிய நூல்கள் :


1. செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலி
2. அகநானூறு
3. புறநானூறு
4. ஐங்குறுநூறு
5. நற்றிணை
6. பொருநராற்றுப்படை
7. முருகாற்றுப்படை
8. மதுரைக்காஞ்சி
9. பட்டினப்பாலை
10. தொல்காப்பியவுரை

தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

**********************

No comments:

Post a Comment