தமிழ்நாட்டின் எல்லை :
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியினைக் காரிக்கிழார் பாடிய
"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்"
என்ற புறநானூற்றுப் பாடலில் இமயமலைதான் தமிழகத்தின் வடக்கெல்லை என்று கூறப்பட்டுள்ளது.
“வடக்கின்கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும், தெற்கின்கண்ணது உட்குந்திறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும், கீழ்க்கண்ணது கரையைப்பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும், மேல்கண்ணது பழைதாய் முதிர்ந்த கடலின் மேற்கும்”
என்பதே அந்த வரிகளுக்கான பொருளென அப் புறநானூற்றுக்கான பழைய உரை கூறுகிறது.
இதனால், அம் முதுகுடுமிப் பெருவழுதிக் காலத்தில் ‘வடாஅது பனிபடு நெடுவரை’ எனப்படும் இமயமலைதான் தமிழர்களின் வடவெல்லையாயிருந்தது என்பது உறுதிப்படுகிறது.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் தளைப்படுத்தப்பட்டிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங்கோழியூர்க்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலிலும்,
"தென்குமரி, வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை"
என்றுள்ளது.
“தென்திசைக்கண் கன்னியும் வடதிசைக்கண் இமயமும் கீழ்த்
திசைக்கண்ணும் மேற்றிசைக் கண்ணும் கடலும் எல்லையாக”
எனப் புறநானூற்றின் பழைய உரை அவ் வரிகளுக்குப் பொருள் கூறுவதும் அதனை உறுதிசெய்கிறது. அதேபோல்,
"தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலாஎல்லைத்
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப"
எனும் "மதுரைக் காஞ்சி" வரிகளுக்குப் பொருள் கூறுகிற நச்சினார்க்கினியர்,
“தென்திசைக்குக் குமரி எல்லையாக வடதிசைக்குப் பெரியமேரு எல்லையாகக் கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் கடல் எல்லையாக இடையில் வாழ்வோரெல்லாம் தம்முடன் பழமையைச் சொல்லி ஏவல் கேட்கும்படி”
என்று கூறுகிறார்.
இதனால், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் காலத்திலும்கூட இமயமலையே தமிழர்களின் எல்லையாயிருந்தது என்பது உறுதிப்படுகிறது.
இந்த நிலையே சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம் வரையில் நீடித்தது என்பதைப்
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி!"
எனும் சிலப்பதிகார வரிகள் காட்டுகின்றன.
வடவேங்கடம் என்பது விந்தியமலையைக் குறிக்கும். ‘வெப்பத்தைக் கடத்தும் மலை’ என்று பொருள்படுகிற 'வெம்+கடம்' என்பதே ‘வேங்கடம்’ என்றானதாம். ஆனால், 'தென்வேங்கடம்' என்பது திருப்பதி மலையைக் குறிக்கும். இதனடிப்படையில் பார்த்தால்,
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து"
என்ற தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் ‘வடவேங்கடம்’ என்பது விந்தியமலையைத்தான் குறிக்கும். மிகத் தொன்மையான தொல்காப்பியத்திற்குக்
கி. மு. 9ஆம் நூற்றாண்டில்தான் பனம்பாரனர் என்பவரால் பாயிரம் எழுதப்பெற்று நூலின் முன்பு ஒட்டப்பட்டது. இதனால், தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதப்பெற்ற 9ஆம் நூற்றாண்டில் வடவேங்கடம் எனும் விந்தியமலை தமிழ்ப் பெருநிலத்தின் எல்லையாக சுருங்கியது புலப்படும்.
தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் தமிழ்தான் பேசப்பட்டிருக்க வேண்டும்.
குணா அவர்களின் தொகுப்பு
No comments:
Post a Comment