குடிமக்கள் குறைதெளிந்த பாண்டியன் நெடுஞ்செழியன் :
அக்கால தமிழரசர்கள் ஆட்சியும், இக்கால அரசுகளின் ஆட்சியும். ஒரே ஒரு சொல்லில் வேறுபடுத்துகிறேன். சிலம்பு, நாமனைவருமறிந்ததொரு காப்பியம், அதிலிருந்தொருசொல்.
சிலம்பு - மதுரைக்காண்டம் - வழக்குரை காதை.
கணவனையிழந்த கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்க வாயிற்காவலனை கடந்து அரசவைக்குள்ளே வருகிறாள். வந்த கண்ணகியை கண்ட மன்னன் நெடுஞ்செழியன் அவளை நோக்கி இவ்வாறு பேசத்தொடங்குகிறான்.
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோநீ மடக்கொடியோய்
இதன் பொருள், நீரொழுகுகிற கண்ணுடன் எம்முன் வந்தாய், யாரோ நீ மடக்கொடி போன்றவளே?
இதிலுள்ள "நீர்வார் கண்ணை" என்பதுதான் அச்சொல். நாட்டு மக்களுக்கு குறையேதுமில்லா அளவிற்கு மன்னன் செங்கோன்மையாற்றவேண்டும். அதையும் மீறி குடிமக்கள் அரசனை காணவந்தால், அக்குடிமக்கள் வந்தவுடன், அவர்கள் தாமேதம் குறைகளை கூறுவதற்கு முன்னரே அவர்களின் கண்களைக்கண்டே குறைகளை நீக்கவேண்டும். இத்தகைய சிறந்த செங்கோன்மையே அக்கால அரசு. அவ்வாறு கண்ணகி அரசவைக்கு வந்தவுடன், மன்னன் அவளைக்கண்டு, இப்பெண் ஏதோ குறையோடு வந்துள்ளாள் என்றெண்ணி அவளின் கண்களில் நீர்வருவதை கண்டு கேட்கிறான், "நீர்வார் கண்ணை" என்று. குடிமக்களின் கண்களில் இவ்வாறு கண்ணீர் வரும் அளவிற்கு நாம் கொடுங்கோலாட்சி செய்கிறோமோ என்றெண்ணி தன்னைத்தானே வெட்கும் அளவிற்கு இருந்தது கண்ணகியின் நீரொழுகு கண்கள். நாட்டிலுள்ள ஏதோ ஒரேயொரு குடிமகளின் கண்ணீருக்கு இவ்வளவு மதிப்பளித்த நம் தமிழ் மன்னர்கள் எங்கே? தற்போது, தலைநகரில் 30 நாட்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கும் வேளாண்பெருங்குடிமக்களை காண வராத இந்நாட்டு முதன்மையமைச்சனும் (Prime minister) மாநில முதலமைச்சனும் (Chief Minister) எங்கே?
மன்னன் நெடுஞ்செழியன் இவ்வாறுதான் நினைத்தான் என்று ஐயமற கூறமுடியாது. ஏனெனில் என்றோ நடந்த கதையை காப்பியமாக புனைகிறான் இளங்கோ. அது பொய்யென்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால், இக்காப்பியம் செய்த இளங்கோ இவ்வாறு அரசாட்சியிருந்தது என காப்பியம் படைக்கிறான். எத்தகைய மேன்மையுடைய செங்கோன்மை பொருந்தியிருந்தனர் நம் தமிழ் மன்னர்கள் என்பதை இந்த #_நீர்வார்_கண்ணை என்னும் ஒரு சொல் விளக்கிவிட்டது.
அடஅட தமிழ் நூற்களைப் படியுங்கள் ஐயா, அன்பும் அறமும் அரசாட்சியும் கற்கலாம். மனிதன் மனிதனாகலாம்.
தமிழ் வாழ்க
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment