Monday, April 27, 2020

பத்துப்பாட்டு பாடினோரும் பாட்டுடைத்தலைவர்களும்

பத்துப்பாட்டு பாட்டுடைத்தலைவர்களும் பாடியோரும்:


தமிழவை இலக்கியகளில் ஓர் தொகுப்பாம் பத்துப்பாட்டு பாடியோர் பாடப்பட்டோர் பெயர்கள். இவற்றை எளிதாக நினைவிலிருத்திக்கொள்ள கீழேயுள்ள வாய்ப்பாடுகளையும் கற்றறிக.



௧) குமரவேளை மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப்படை

௨) சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநாராற்றுப்படை

௩) ஓய்மான்நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டுநல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாணாற்றுப்படை

௪) தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படை

௫) காவிரிப்பூம்பட்டினத்து பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டு

௬) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சி

௭) பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய நெடுநல்வாடை

௮) ஆரிய அரசன் பிரகத்தனை தமிழறிவித்தற்கு கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு

௯) சோழன் கரிகாற்பெருவளத்தானை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை

௰) பல்குன்றக்கோட்டத்து செங்கண்மாத்து வேள்நன்னன் சேய் நன்னனை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய மலைபடுகடாம்

**********************************

நூல் தொகை:

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

பாட்டுடைத் தலைவர்கள்:

முருகாறு செவ்வேள், பொருநாறு பாலை
கரிகாலன், நெடுஞ்செழியன் காஞ்சி - இருபாணும்
நல்லியக் கோடன் இளந்திரையன், நன்னன் கடாம்
கல்வித் தலைவர் கருது.

பாடியோர்:

முருகு நல் வாடையும் கீரன், முடத்தாமக் கண்ணி பொருந்
மருவு பாண், பாலை உருத்திரங் கண்ணன், மகிழ் சிறுபாண்
புரியும் நத்தத்தன், மருதன் காஞ்சி, நப்பூதன் முல்லை,
வருமெங் கபிலன் குறிஞ்சி, மலைகடாம் கௌசிகனே.

********************
நன்றி. வணக்கம்
உதவி : இணையம் மற்றும் பத்துப்பாட்டு நூல்கள்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment