அனைத்து சாதியினரும் பூசையர்(அருச்சகர்) ஆகலாம் என்னும் சட்டப்போராட்ட வரலாறு:
அனைத்து சாதியினரும் அருச்சகராவதற்கான சட்டப்போராட்டம் 1970களிலேயே தொடங்கிவிட்டது. 1970 ஆம் ஆண்டு நவம்பரில் அப்போதைய முதல்வர் கருணாநிதி இதற்கான சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதா 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள மத சுதந்திரம் - வழிபாட்டுரிமை ஆகியவற்றில் தமிழக அரசு தலையிடுவதாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் பட்டர்கள் தாக்கல் செய்த மனு உட்பட 12 மனுக்கள் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
மசோதா ஏற்கப்பட்டபோதும், ஆகமவிதிகள் மீறல் உள்ளிட்ட சந்தேகங்களை எழுப்பி, அர்ச்சகர் நியமனத்தில் குறைபாடுகள் இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, அனைத்து சாதியினரும் அருச்சகராகும் வாய்ப்பு முடங்கியது.
அதன்பிறகு 1974-ல் அனைத்து சாதியினரும் அருச்சகராகும் விதத்திலான சட்டத்திருத்தத்தைக் கருணாநிதி கொண்டு வந்தார். பின்னர், ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று 2006 ஆம் ஆண்டில் தனிச்சட்டத்தை நிறைவேற்றினார் கருணாநிதி.
அதன் தொடர் நடவடிக்கையாக 2007 ஆம் ஆண்டில் சைவ முறைப்படி திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களிலும், வைணவ முறைப்படி ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களிலும் ஆகம பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த சட்டத்தையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் தான், 2015 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அருச்சகராகும் சட்டம் செல்லும், என்று நீதிபதிகள் #_இரஞ்சன்_கோகாய், #_இரமணா ஆகியோர் தீர்ப்பளித்தனர். எனினும், அத்தீர்ப்பின் பகுதி 43-ல், ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்டவர் வழக்கு போட்டால் அதன்படிக்கான சட்டப் பரிகாரமே இறுதித்தீர்வாக அமையும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தவரலாற்றுத்தீர்ப்பின் பயனாகத்தான் மதுரை தல்லாகுளத்திலுள்ள ஐயப்பன் கோயிலில் பார்ப்பனரல்லாத திரு.மாரிச்சாமி என்பவர் பூசகராக கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணியாற்றிவருகிறார்.
தமிழகத்தால் சட்டம் இயற்றப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட இதே சட்டத்தால் தான் நம் அண்டை மாநிலமான கேரளத்தில் கடந்தமுறை திருவிதாங்கூர் திருக்கோயில் வாரியத்தின் சார்பில் பட்டிலினத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட பார்ப்பனரல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.
இப்போது, கொச்சி திருகோயில் வாரியத்தில் பார்ப்பனரல்லாத 39 பேர் அருச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளா அரசுக்கு நன்றி.
ஆனால், தமிழகத்தால் கொண்டுவரப்பட்ட சட்டத்தால் தமிழ்நாட்டில் இதுவரை ஒரே ஒரு பார்ப்பனரல்லாதவரைத்தான் பூசகர் ஆக்கியுள்ளனர் இங்குள்ள ஆட்சியாளர்கள். இதுவொரு அரியசாதனை தான். இருப்பினும் இது போதாது, சட்டப்பாதுகாப்பு இருக்கும்போது இன்னும் ஆயிரக்கணக்கில் பார்ப்பனரல்லாதவர்கள் பூசனைப் பணியில் அமர்த்தப்படவேண்டும். இப்போது இருக்கிற அரசும் இனிவரப்போகும் அரசும் இதைச்செய்யவேண்டும்.
பாருங்கள், 1970 சட்டமசோதா வந்து, பிறகு தனிச்சட்டமாகி, சரியான தீர்ப்பு வந்தது 2015, டிசம்பர் 14-ல். இந்த வஞ்சக பார்ப்பனர்களை எதிர்த்துச் சட்டம்கொண்டுவர முழுமையாக 45 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. பார்ப்பனரல்லாதோரை பணியமர்த்த மேலும் 3 ஆண்டுகள், ஆக 48 ஆண்டுகளாயின. பார்த்தீர்களா இந்த பார்ப்பனிய ஆதிக்கத்தை. நான் வெறும் கண்ணை மூடிக்கொண்டு பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை. நன்றாகச்சிந்தித்து வரலாற்றையறிந்துதான் எதிர்க்கிறேன்.
இந்தச் சட்டத்திலும் சில சிக்கல்கலுள்ளன. திருவண்ணாமலை கோயிலில் பார்ப்பானரல்லாத ஒருவரை நியமித்து, அவர் ஆகம விதிகளில் ஏதேனும் தவறு செய்தால், அதனை சுட்டிக்காட்டி அவரின் நியமனத்திற்கு தடை வாங்க முடியும். இந்த சிக்கலையும் முறியடிக்கும்வண்ணம் சட்டம் திருத்தப்படவேண்டும்.
இந்த மாற்றத்திற்கெல்லாம் அடித்தளமாக இருந்தது பெரியார் அறிவித்த திருக்கோயில் கருவறை நுழைவுப்போராட்டமே முதல்படி. இந்தப்போராட்டத்தை பெரியார் அறிவித்தவுடன், அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் பெரியாரிடம் சென்று நாங்கள் ஆட்சியிலுள்ளபோது நீங்கள் போராட்டம் செய்யலாமா ஐயா? நடப்பது உங்கள் ஆட்சி. போராட்டம் எதுவும் வேண்டாம். அனைத்து சாதியினரும் பூசகராகலாம் என்று சட்டத்தையே இயற்றிவிடலாம் என்றுசொல்லி போராட்டத்தை நிறுத்தினார். கருணாநிதியவர்கள் சொன்னதுபோலவே சட்டமசோதாகொண்டுவந்து நடைமுறைக்கும் கொண்டுவந்தார். 1974 முதல் 2006 வரை ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டு எந்த அரசும் இதை நிறைவேற்றவில்லை. மீண்டும் 2006ல் அதே கருணாநிதி அவர்கள்தான் தனிச்சட்டதை நிறைவேற்றினார். 2007ல் சைவ, வைணவ ஆகமப்பயிற்சி நிலையங்கள் அமைத்தார்.
இத்தனையும் இறைநம்பிக்கை இல்லாத திராவிட இயக்கப்போராட்டத்தாலும், திராவிடமுன்னேற்றக்கழகத்தாலும் தான் நடந்தது. இதையெல்லாம் சொல்வதால் உடனே எனக்கு திராவிடன் என்னும் பட்டங்கட்டவேண்டாம். திராவிடம் என்னும் சொல்லை நான் இப்போதும் எதிர்க்கிறேன். ஆனால், அந்த இயக்கம் கொண்டுவந்த நற்செயல்களை ஒருநாளும் எதிர்க்கமாட்டேன், நன்றிமறவாது போற்றுவேன்.
இவ்வழக்கில் வாதிட்ட வழக்கறிஞருக்கு உறுதுணையாக ஆகமங்களை விளக்கியவர் SRM பல்கலைக்கழகத்தில் தமிழ் அருச்சகர் பட்டையப்படிப்புத்துறையில் பலதமிழ் அருச்சகர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிற செந்தமிழ்வேள்விச்சதுரர் முனைவர் மு.பெ.சத்தியவேல்முருகனார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் உயர்திரு #_இரஞ்சன்கோகாய் அவர்கள். இவர்தான் அண்மையில் உச்சநீதிமன்றத்தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் நீதியரசராக இருந்தபோது இத்தீர்ப்பை வழங்கினார். இப்போது தலைமை நீதியரசராகியிருக்கிறார்.
(இப்பதிவில், பலவிடங்களில் சாதி, சாதி என்று குறிப்பிட நேர்ந்தது. இதை எதிர்க்கும் அடியேனே அதை பலமுறை பயன்படுத்திவிட்டேன். சான்றோர் பொறுத்தருளுங்கள். இப்படிப்பட்ட தலைப்பை பேசும்போது அதைச்சொல்லியேயாகவேண்டிய சூழல்)
பொறுமையுடன் படித்ததற்கு நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment