Thursday, April 23, 2020

தமிழரின் மரங்கள்கூட அறமுரைப்பவை

பொய்சான்று சொல்பவர்களை தமிழரின் மரங்கள்கூட ஏற்காது



விரிகாஞ்சித் தாதாடி யிருங்குயில் விளிப்பவும்
பிரிவஞ்சா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவுங்
கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி
யெரிபொத்தி யென்னெஞ்சஞ் சுடுமாயி னெவன்செய்கோ ..... 8 - 11.

- கலித்தொகை, பாலைக்கலி - 34ம் பாட்டு

பொருள் :

அலர்ந்த காஞ்சிப்பூவிற் றாதை அளைந்து கரிய குயில்கள் கூவா நிற்கவும் இக்காலத்தே பிரிந்துறைதற்கு அஞ்சாதவருடைய கொடுமையையான் மறையாநிற்பேன். அதனாற் பெற்றதென்? மறைப்பினும் சான்று பொய்த்தவன் வந்து தன்கீழே இருக்கப்பட்ட மரம்போல யான் அழகு கெடும்படி என்னெஞ்சு காமத்தீக்கொளுந்தி என்னைச்சுடுமாயின் யானதற்கு என்செய்வேன்?

தேவையான எளிய உரை: 

பொய்சாட்சி சொன்னவன் ஒருமரத்தடியில் நின்றால், அம்மரமானது, இவன் தீயவன் இத்தீயவனால் என்தூய்மை கெட்டுவிட்டதென்று தன் அழகை இழந்து தானே வாடிவிடுமாம். அதுபோல், தலைவியும் காமத்தீயால் வாடியிருக்கிறாளாம்.

இதுவொரு கற்பனைதான். ஆனால், அந்தக்கற்பனையிலேயும் அறத்தை வலியுறுத்தினானே தமிழன். இதுவே, தமிழர் வாழ்வின் செம்மையறத்திற்குச் சான்று. அதை தம் மரஞ்செடிகொடிகளுக்கும் பொருத்தினான். தமிழராய் பிறந்தமைக்கு பெருமிதங்கொள்வோம்.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment