உழைப்பாளர் நாளும் உழைப்பாளர்களுக்கு அம்பேத்கரின் பணிகளும் :
18, 19 ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்சாலைகளால் தொழில்மயமாகியது உலகம். அதனோடு முதலாளித்துவமும் மிகவிரைவாக வளர்ந்தது. உழைக்கும் மக்களை அடிமைகளாக மிகக்கடுமையாக வேலைவாங்கியது முதலாளித்துவம். நாளொன்றுக்கு 14, 18, 20 மணிநேரம் பணிசெய்ய கொடுமைபடுத்தப்பட்டார்கள். 3, 5 வயது குழந்தைகளும் 12 மணிநேரம் உழைக்கவைக்கும் கொடுமையான காலம் அது.
இதைக்கொடுமைகளையெல்லாம் தாளாத உழைக்கும் மக்கள், கிளர்ந்தெழத்தொடங்கினர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆசுதிரேலியா, பிரான்சு, நெதர்லாந்து, இந்தியா என பலநாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ந்தது.
சாசன இயக்கம், தொழிலாளர் இயக்கம், வேலைநிறுத்தங்கள், கம்யூனிச இயக்கம், சிகாகோ பேரெழுச்சி, இரசிய புரட்சி, இந்தியாவிலும் இரயில்வே ஊழியர்கலின் வேலைநிறுத்தம் என உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிராக போராட்டங்கள் எழுந்தன. இத்தகைய உலகப்போராட்டகளில் முதலாளித்துவத்தால் இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். பலபோராட்டங்கள் உயிரிழப்புகளுக்குப்பிறகு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் 8 மணிநேர வேலை என்னும் வெற்றியை அடைந்தனர்.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிச தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக பின்பற்ற வழிவகுத்தது.
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிசுட் தோழர் சிங்காரவேலர். பிரிட்டிசு இந்தியாவிலேயே முதன் முதலில் 1923இல் மேதினத்தை கொண்டாட திட்டமிட்டார். அந்த அடிப்படையில் மே 1, 1923 அன்று சென்னையில் கடற்கரையில் தோழர் சிங்காரவேலர் மற்றும் திரு.வி.க தலைமையில் மே தினக் கூட்டங்கள் நடைபெற்றன.
**********************
இந்தியாவிலும் பலபோராட்டங்கள் நடைபெற்றன. ஆனாலும், 14, 18 மணிநேரங்கள் உழைக்கும் கொடுமையே தொடர்ந்தன பல இடங்களில். 1942ஆம் ஆண்டு பிரிட்டிசு வைசிராய் லின்லித்தோ பிரபு வின் அமைச்சரவையில் முதல் தொழிலாளர்நல அமைச்சராக தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சட்டப்பாதுகாப்புத் தோழராக புரட்சியாளர் அம்பேத்கர் பதவியேற்றார்.
அப்போது அண்ணல் பெற்றுத்தந்த சட்டமே இந்தியாவில் உழைக்கும் மக்களின் வேலைநேரம் 8 மணிநேரம் என்பதாகும். அதே 1942ல் முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் இணைப்பு மாநாடு ஒன்று நடத்தி, இருபுறத்து சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள வழிவகை செய்தார். இந்த முறைகளே இன்றுவரை கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
1946ல் அம்பேத்கர் அவர்கள், பாராளுமன்றத்தில் "குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை" தாக்கல் செய்து, 1948ல் அது நடைமுறைப்படுத்த உழைத்தார்.
1945ஆம் ஆண்டு, "மத்திய தொழிலாளர் நல ஆணையர்" என்னும் புதிய பதவியை உருவாக்கி, தொழிலாளர் நலனை பாதுகாத்தார்.
இவரால், உழைக்கும் மக்கள் அடைந்த நன்மைகள்
* பணி உத்திரவாதம்.
* ஊதியத்துடன் கூடிய வாரவிடுமுறை.
* தொழிற்சங்க அங்கீகார சட்டம். - Trade Union Act.
* மருத்துவ விடுப்பு - Medical leave.
* பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன்கூடிய பேறுகால விடுப்பு. - Maternity benefit Act.
* ஊழியர்களின் விடுப்புகளைச் சேர்த்து அதை பணமாகப்பெற்றுக்கொள்ளும் ஈட்டிய விடுப்பு - Earned leave.
* அலுவலகநேரம் போக மிகுதிநேரம் வேலைசெய்வோருக்கு அதிக ஊதியம் - Overtime - OT.
இதுபோன்ற தொழிலாளர் நலச்சட்டங்களெல்லாம் கொண்டுவந்தவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.
ஆனால், இவரை ஒரு சமூகத்தின் தலைவராகவும், அவர்களுக்காக மட்டுமே உழைத்தவர் என்றும் அவரை ஒதுக்குகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இவர் ஒரு சமூகத்திற்கு மட்டும் உழைத்தவரா? உழைக்கும் மக்கள் அனைவருக்கும் போராடியவர். அனைவரும் இவரை நினைவுகூர்ந்து நன்றிகூறவேண்டும்.
உலகத்து உழைப்பாளர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.
************
இன்றும் பலவூர்களில் 8 மணிநேரத்திற்கும் மிகுதியாக உழைப்பைச் சுரண்டும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் மீது அரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.
***************
தகவல் உதவி : இணையம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment