Thursday, April 23, 2020

எப்போதும் எம்நாடு இந்தியா அல்ல "தமிழ்நாடு" - சான்றுகள்

என்னாடு தமிழ்நாடே பெருஞ்சான்றுகள் பாட்டும் பொருளும் :


தமிழகம் தமிழ்நாடு என்னும் சொல்லாட்சிகள் அமைந்த நூல்கள் பின்வருவன

௧) அகநானூறு
௨) புறநானூறு
௩) சிலப்பதிகாரம்
௪) இளம்பூரணனாரின் தொல்காப்பிய உரை
௫) கம்பராமாயணம்


௧) அகநானூறு ௨௨௭ (227)


''நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே;
திதலை அல்குல் வரியும் வாடின;
என் ஆகுவள்கொல் இவள்?'' என, பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,

இனையல் வாழி, தோழி! நனை கவுள்
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப்
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப,

முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து,
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,

நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள்,
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை,
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப்

பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்,
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து,

எல் உமிழ் ஆவணத்து அன்ன,
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே!

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்

பொருள்: இனையல் எனத் தலைவி தோழிக்குக் கூறினாள் என்க. நீர்மலி கண்ணொடு நெடிது நினைந்தொற்றுதல் தோழியிடத்துண்டாய வேறுபாடாகும். எனவே, இச்செய்யுள், இரண்டாவதாகக் குறிக்கப்பட்டுள்ள தலைவி கூற்றாதற்குப் பெரிதும் பொருத்தமாம். நோயிலராக நம் காதலர் எனத் தலைவி தோழியை உளப்படுத்திக் கூறலின், தலைவியும் தோழியும் தலைவனை வாழ்த்தினாரெனக் கொள்ளுதலும் அமையும். சிறந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு. ஒருத்தல் செந்நிலப் படுநீ றாடியது என்றதற் கேற்ப மள்ளர் குருதியால் உடல் சிவந்தமை கொள்க. ஒருத்தல் பகையை ஒழித்த பெருமிதத்துடன் முழங்குதலின் களங்கொள் மள்ளரின் முழங்கும் என்றார். நிலைஇ நோயிலராக-நோயிலராய் நிலைபெற்று வாழ்க என விகுதி பிரித்துக் கூட்டி யுரைக்க. முரசு-வீரமுரசும், கொடை முரசுமாம். அவனது வீரமும் வண்மையும் தமிழ்நாடு முழுதும் பரந்திருந்தமையின் தமிழகப்படுத்த இசைமுரசு என்றார். வாளினையும் முரசினையும் இருக்கையினையும் உடைய தழும்பன் எனவும், தூங்கல் பாடிய நல்லிசைத் தழும்பன் எனவும் கூட்டுக. தூங்கல்-தூங்கல் ஓரியார் என்னும் புலவர். அவர் தழும்பனைப் பாடிய பாட்டுக் கிடைத்திலது. பிடிமிதித்த புண்ணின் தழும்பு என்க. வழுதுணைத் தழும்பன் என்னும் பெயர் தழும்பன் என்றே வழங்கலுமுண்டு. 1'பெரும்புண், ஏஎர் தழும்பன் ஊணூர்’ என வருதலுங் காண்க. கழிப்படப்பை-உப்புவிளையும்செறு 'மங்கல மொழியும்’ என்னுஞ் சூத்திரத்து மங்கலமொழி என்ற தற்குத் ‘தலைவற்குத் தீங்கு வருமென்று உட்கொண்டுதோழியும்தலைவியும் அதற்கஞ்சி அவனை வழுத்துதலும்’ என்று பொருள் கூறி, அதற்கு; ‘நோயிலராக நங் காதலர்’ என்னும் இதனை எடுத்துக் காட்டினர்.

௨) புறநானூறு ௧௬௮(168)


அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
கடுங் கண் கேழல் உழுத பூழி,

நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி

வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்,
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,

நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர், நாளும்
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.

பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

பொருள்: அருவி ஒலித்திழியும்வேய் பயின்ற அகன்றவிடத்து மிளகுகொடி வளரும்மலைச்சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவியகிழங்குபிறழக் கிளறித் தன்னினத்தோடே கூடத்தறுகண்மையையுடைய கேழலுழுத புழுதிக்கண்ணே நல்லநாள்வந்த செவ்வியைப் பார்த்துக் குறவர் அந்நிலமுழாதேஅதுவே உழவாக வித்திய பரிய தோகையையுடைய சிறியதினை முற்பட விளைந்த புதுவருவாயாகிய கதிரை நல்லநாளின்கண்ணே புதிதுண்ணவேண்டி மரையாவைக் கறந்தநுரை கொண்ட இனிய பாலை மான்தடி புழுக்கப்பட்டபுலால் நாறும் பானையினது நிணந்தோய்ந்த வெளியநிறத்தினையுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலைநீராகவார்த்து ஏற்றிச் சந்தனவிறகான் உவிக்கப்பட்டசோற்றைக் கூதாளி கவின்பெற்ற மலைமல்லிகை நாறும்முற்றத்து வளவிய குலையையுடைய வாழையினது அகன்றஇலைக்கண்ணே பலருடனே பகுத்துண்ணும் ஊரப்படாத குதிரையென்னும்மலைக்குத் தலைவ! கூரிய வேலையும் நறைக்கொடியின்நாராற் றொடுக்கப்பட்ட வேங்கைப்பூமாலையினையும்வடித்தல் பயின்ற அம்பினையுமுடைய வில்லாட்களுக்குத்தலைவ! கையான் வழங்கும் வள்ளிய கொடையினையும்கடிய குதிரையையுமுடைய கொற்ற! உலகத்தெல்லையுள் தமிழ்நாடுகேட்கப் பொய்யாத செவ்விய நா வருந்தும்படிவாழ்த்திப் பாடுவரென்று சொல்லுவர் பரிசிலர்,நாடோறும்; கொடாத வேந்தர் நாணக் கெடாது பரந்தநினது வசையில்லாத வாலிய புகழை-எ - று.

கிழவ! பெரும! கொற்ற! பரிசிலர்நின்புகழை ஏத்திப் பாடுபவென்ப; அதனால், யானும்நின்பாற் பரிசில் பெற்றுப் பாடுவேனாக வேண்டுமெனப்பரிசிற்றுறைக்கேற்பக் கூறியதாக்குக.

௩) சிலப்பதிகாரம் இரண்டு பாடல்கள்


முதல் பாடல்

சிலப்பதிகாரத்தில் நாட்டிய அரங்கேற்றத்திற்கு வருகிற மாதவியை அறிமுகப்படுத்துகிறார் இளங்கோவடிகள். அவள் ஆடல், பாடல், அழகு என்று கூறிய இம் மூன்றனுள் ஒன்று குறையாதவள், அவளுக்குக் கற்றுக் கொடுத்த ஆசா னோ தமிழ் முழுதும் அறிந்தவன். தமிழகம் முழுவதும் அறியப்பட்ட வன் என்கிறார்.

“இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ்முழு தறிந்த தன்மையன் ஆகி” என்கிறார்.

சிலப்ப திகாரம் “தமிழ்நாடு” என்ற பெயரைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயமலைக்குக் கல் எடுக்கப் போகும்போது அங்கங்கே உள்ள வேற்று மன்னர்கள் குறிப்பாக ஆரிய மன்னர்கள் தடுப்பார்களோ, அதை எதிர் கொள்ளும் அளவுக் குப் படைகொண்டு செல்ல வேண் டுமோ என்று சேரன் செங்குட்டு வன் அமைச்சர்களிடம் கலந்து ஆய்வு செய்தான். அப்போது அமைச்சர் வில்லவன் கோதை கூறியது நமக்கு வியப்பளிக்கிறது.

அடுத்தபாடல்

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீர் உலகு முழுமையும் இல்லை
இமய மால்வரைக்கு எம்கோன் செல்வது
கடவுள் எழுதவோர் கற்கே யாதலின்”

ஒலிக்கின்ற கடலை எல்லையா கக் கொண்ட இந்நிலம் முழுவதை யும் ஒரே ஆட்சியின் கீழ் உள்ள தமிழ் நாடாக ஆக்கிட நினைக்கும் நீ இமய மலைக்குக் கல்லெடுக்கச் சென்றால் உன்னை எதிர்த்து நிற்க எவரும் வரமாட்டார் என்றான் வில்லவன் கோதை!

௪) இளம்பூரணனாரின் தொல்காப்பிய உரை


வினாவும் விடையும் குழப்ப மில்லாமல் துல்லியமாகவும் தெளி வாகவும் இருக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பது அந்நூற்பா. இதற்கு விளக்கவுரை எழுதிய இளம்பூரணர் குழப்ப மில்லாத துல்லியமான வினாவுக்கும் விடைக்கும் ஓர் எடுத்துக் காட்டைக் கூறினார். “நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“ என்று விளக்கினார். இளம்பூரணர் கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று காலவரையறை செய்துள்ளார்கள். 11 ஆம் நூற்றாண்டில் சோழநாடு இருந்தது பாண்டியநாடு இருந்தது. அப்போது எப்படித் தமிழ்நாடு வந்தது? ஏனென்றால் அப்போதே தமிழர்தம்நாட்டின் பெயர் தமிழ்நாடே.

௫) கம்பராமாயணம்


வடநாட்டுக் காப்பியமான இரா மாயணத்தைத் தமிழில் வடித்த கம்பர், “தமிழ்நாடு” என்று சில இடங்களில் அடையாளப் படுத்தி யுள்ளார். சீதையைத் தேடிக் காணு மாறு அனுமனுக்கும் மற்ற வானரப் படையினருக்கும் கட்டளை இட்ட சுக்ரீவன் - இலங்கைக்குச் செல்லும் வழிகளைச் சொல்கிறான். அப் போது தமிழ்நாட்டைக் கடந்து செல்ல வேண்டும் என்று கூறு கிறான்.

“துறக்கமுற்றார் மனமென்னத் துறைகெழுநீர்ச் சோணாடு கடந்தால் தொல்லை
மறக்கமுற்றா ரதனயலே மறைந்துறை வரவ்வழி நீர் வல்லையேகி
உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி
மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”

-கிட்கிந்தா காண்டம் நாட விட்ட படலம்-30

ஆக, நம்நாடு தமிழ்நாடே, இந்தியா அல்ல என்று இதைப் படித்தோர்க்கு புலனாகும்.

திருநெல்வேலியில் உள்ள பழம்பெரும் கல்வி நிறுவனமான ம.தி.மா. இந்துக் கல்லூரி தமிழ்த்துறையில் 11.09.2013 அன்று, இதில் கலந்து கொண்டு தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர் தோழர் பெ. மணியரசன் “தமிழ் இலக்கியத்தில் தமிழர்” என்ற தலைப்பில் பேசினார்.
அவ்வுரையரங்கத்தில் தோழர் பெ. மணியரசன் அவர்கள் பேசியதன் எழுத்து வடிவம் இது. இதை ஒரு குறிப்பாக எடுத்துக்கொண்டு அந்தந்த நூல்களிலுள்ள அந்த முழுப்பாடல்களையும் இங்கே தொகுத்துள்ளேன்.

உதவி : தமிழ்நூல்களும் திரு.பெ.மணியரசன் ஐயா அவர்களின் பேச்சும்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment