Saturday, April 25, 2020

பொருநராற்றுப்படை பாடினியின் முடிமுதல் அடிவரை அழகு கூறல்

பொருநராற்றுப்படை:


நூல் : பொருநராற்றுப்படை
இயற்றியவர் : முடத்தாமக் கண்ணியார்
தலைப்பு : பாலையாழின் அமைப்பு


செய்யுள்:


குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்
விளக்குஅழல் உருவின் விசிஉறு பச்சை,

எய்யா இளம்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப்,
பொல்லம் பொத்திய பொதிஉறு போர்வை
அளைவாழ் அலவன் கண்கண்டு அன்ன,
துளைவாய் தூர்ந்த துரப்புஅமை ஆணி

எண்நாள் திங்கள் வடிவிற்று ஆகி,
அண்-நா இல்லா அமைவரு வறுவாய்
பாம்பு அணந்தன்ன ஓங்குஇரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூடு இருக்கைத் திண்பிணித் திவவின்

ஆய்தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல்உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல்
மணம்கமழ் மாதரை மண்ணி அன்ன,
அணங்குமெய்ந் நின்ற அமைவுஅரு காட்சி

ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை.

=========================================

உரை:

நடுவிடம் உயர்ந்து அதன் இருபக்கங்களும் தாழ்ந்திருக்கும் வடிவினை உடையது யாழின் பத்தல் என்னும் உறுப்பு. இப்படி நடுவிடம் உயர்ந்தும் பக்கங்கங்கள் தாழ்ந்தும் உள்ள பத்தலின் வடிவம் மானின் குளம்பு அழுந்திய ஈரத்தரையைப் போல் உள்ளது. பத்தலின் மேல்பகுதி தோலால் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. அத்தோலின் நிறம் எரிகின்ற விளக்குச் சுடரின் நிறம்போல் இளமஞ்சள் நிறத்திலுள்ளது. பத்தல்மேல் போர்த்தப்பட்டுள்ள தோலின் பிளவுபட்ட நடுப்பகுதியை இணைத்துக் கூட்டி மிகநேர்த்தியாகத் தையல் போடப்பட்டுள்ளது. இத்தையல் இளஞ்சூலுற்ற சிவந்த பெண்ணின் அடிவயிற்றின் நடுவே மென்மையாக ஒழுங்குபடக் கொப்பூழ் நோக்கிச் செல்லும் மயிரொங்கினைப் போல் காட்சியளிக்கிறது. தோல் போர்த்தித் தைக்கப்பட்ட பத்தலின் பகுதிகளை இணைக்கத் துளையிடும் கருவியால் துளைபோட்டு அத்துளைகளின் வழியே ஆணிகளைக் கொண்டு முடுக்கப்பட்டுள்ளது. அப்படி முடுக்கப்பட்ட ஆணிகள் வளைகளில் மறைந்து வாழும் நண்டுகளின் கண்களைப் போல் தோன்றுகின்றன.

பத்தலின் உட்புறம் குடைந்தெடுக்கப்பட்டு அதன் மேற்பகுதி அரைவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அவ் அரைவட்டத்தின் தோற்றம் எட்டாம் நாள் நிலவினைப் போன்று செம்பாதி வடிவில் அமைந்துள்ளது. போர்த்தப்பட்ட தோலின் உட்புறத்தே உள்ள பத்தரின் வெற்றிடம் உள்நாக்கு இல்லாத வெறும்வாயாக அமைந்துள்ளது. பத்தலோடு பொருந்தி வளைந்து நீண்டுள்ள நரம்புகள் கட்டும் தண்டுப்பகுதி கரும்பாம்பு தலையெடுத்து நிற்பதனைப் போலுள்ளது. வளைந்து நீண்டுள்ள அத்தண்டுப் பகுதியில் நன்கு இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளன வார்க்கட்டுகள். இவ் வார்க்கட்டுகள் கரிய நிறமுடைய பெண்ணின் முன்கைகளில் அழகுற அடுக்கி அணிவிக்கப்பட்டுள்ள வளையல்களை ஒத்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட குத்தலரிசியாம் தினையரிசியை நிறத்தால் ஒத்ததாக உள்ளன யாழில் கட்டப்பட்டுள்ள நரம்புகள். விரலால் இசைக்கப்படும் அந்நரம்புகளும் குற்றமற்றனவாகத் தெரிவுசெய்யப்பட்டு யாழில் விசித்துக்கட்டத் தொடர்ச்சியினை உடையதாக அமைந்துள்ளன. முழுமையாகப் பார்க்கும்பொழுது யாழுக்குரிய இசைத்தெய்வம் நிலைபெற்றுள்ள பாலையாழின் இனிய அழகிய தோற்றமானது ஒப்பனைகளால் அழகூட்டப்பட்ட புதுமணப் பெண்ணின் கோலத்தை ஒத்துக் கவினுறக் காட்சியளிக்கின்றது.

இப்படிக் கவினுறக் காட்சியளிக்கும் பாலையாழ் தோற்றத்தில் மட்டும் இனிமை யுடையதாக இருக்கவில்லை. வழிப்பறி செய்து மக்களைத் துன்புறுத்தும் ஆறலைக் கள்வர்கள் தம் ஆயுதங்களை யெல்லாம் கைவிட்டு அருளின் எதிர்மறைப் பண்பாகிய போர்க்குணத்தை அவர்களிடமிருந்து நீக்குகின்ற இனிய இசையினைத் தம்மகத்துக் கொண்டிருத்தலால் நம்மைப் பிணைக்கும் பண்புடையதாகவும் திகழ்கின்றது.

உதவி : பொருநராற்றுப்படை நூல்
நன்றி. வணக்கம்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர்
மதங்கசூளாமணியார்

No comments:

Post a Comment