யானையை விழுங்கும் பாம்பு சிற்பம்:
சோழர்கள் கட்டிய கோயில்களில் வாயிற்காவலர்களின் போர்க்கருவிகளில் ஒரு பாம்பு சுற்றியிருக்கும், அப்பாம்பு ஒரு யானையை விழுங்கும். இப்படிப்பட்ட ஓர் அரிய கற்பனை சோழர்களுக்கு எப்படி உருவானதென்று எண்ணும்போது, அதற்கான விடை திருஞானசம்பந்தர் பாடிய திருக்கயிலாயமலை தேவராப்பதிகத்தின் இரண்டாம் பாடலிலுண்டு.
1ஆம் திருமுறை, 68ஆம் பதிகம், 2ஆம் பாட்டு:
"புரிகொள்சடைய ரடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
"பரியகளிற்றை யரவுவிழுங்கி" மழுங்க விருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே."
பொழிப்புரை:
பெரிய களிற்றை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள்மிக்க கயிலைமலையில் விடம் உண்ட கரியகண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமைமங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்ததேவர் தலைவராவார்.***********
இதைப்படித்துவிட்டு, அப்படியே சிற்பங்களில் வடித்துள்ளனர் சோழர்கள். யானை எவ்வளவு பெரியது, அதையே விழுங்கும் பாம்பு எவ்வளவு பெரியது, அப்பாம்பு சுற்றியிருக்கும் கருவி எவ்வளவு பெரியது, அக்கருவியையாளும் வாயிற்காவலன் எத்தகைய ஆற்றலுடையவன், அவர்களே இறைவனின் வாயிற்காவலனாக இருந்தால், உள்ளே உறையும் இறைவன் எத்தகைய ஆற்றலுடையவன் என்பதை குறிப்பால் உணர்த்தும் சிற்பம் இது என்பர்.
ஞானசம்பந்தரின் இப்பதிகத்திற்கு முற்பட்ட காலத்தில் கோயில்களில் ஏதேனும் இந்த சிற்பம் வடிக்கப்பட்ட சான்றுகள் உள்ளனவா என்பதை நண்பர்கள் அறிந்தால் தெளிவிக்கவும்.
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment