குடி என்பது தொழில், பணி, வேலை என்பவற்றையே குறித்தன:
நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்
-அப்பர்
பொருள் : நாம் யாருக்கும் அடிமையில்லை கூற்றுவனுக்கும் அஞ்சமாட்டோம்.
யாமார்க்கும் குடியல்லோம் யாதுமஞ்சோம்
-மணிவாசகர்.
பொருள் : யாம் யாருக்கும் அடிமையில்லை எதற்கும் அஞ்சமாட்டோம்.
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல்ஆமே
-நம்பியாரூரர்.
பொருள் : அப்பனே இறைவனே அன்றே நான் உனக்கு அடிமையாகிவிட்டேன் இப்போது இல்லை என்று சொல்வது தகுமோ?
***********************
ஈண்டு குடியல்லோம் என்று சொல்லப்பட்டது, அடிமையில்லை என்பதைக்குறிக்கிறது. அடிமை அல்லது வேலையாள் என்னசெய்வான்? ஆண்டான் இட்ட ஏவலை பணியைச்செய்வது அடிமையின் கடன். அதுவே அவன் வேலை அல்லது குடி.
நாம் இப்போதும் பயன்படுத்துகிறோம். நமக்கு யாராவது ஒருவேலையைச் செய்யச்சொன்னால் "நான் என்ன உனக்கு ஆளா?" என்று கேட்கிறோம். ஆகவே, வேலையைத் தொழிலைச் செய்பவன் "ஆள்" அல்லது "குடி".
மேற்கண்ட திருமுறை வரிகள் மூன்றனுள், பணி வேலை அல்லது தொழிலாகிய குடி என்னும் சொல், அப்பணியைச் செய்யும் மனிதனுக்கு ஆகுபெயராகி பணியைச்செய்பவன் "குடி" என்று ஆனது. அதனாலேயே "குடியல்லோம்" "ஆளாய்" என்று கூறினர்.
அதைப்பின்பற்றியே குறிப்பிட்ட பணியை செய்பவர்கள்(மக்கள்) அந்த குறிப்பிட்ட குடிகள் எனப்பட்டனர்.
வேட்டுவக்குடி - வேட்டைத்தொழிலர்
ஆயர் குடி - ஆமேய்க்குந்தொழிலர்
பறைக்குடி - பறைத்தொழிலர்
போர்க்குடி - போர்த்தொழிலர்
பாணர்க்குடி - பண்பாடுந்தொழிலர்
இன்னின்ன தொழிலர் கூட்டாகச்சேர்ந்து ஒரு இடத்தில் தங்கிவாழ்ந்தனர். இப்போது அதே வேலையாகிய குடி என்னும் சொல் மக்கள் கூடிவாழ்ந்த வீட்டிற்கும் வாழ்ந்த பகுதிக்கும் அதாவது ஊருக்கும் ஆகுபெயராகியது. குடி என்று முடியும் பலவூர்கள் தமிழ்நாட்டில் உண்டு.
இவ்வாறு இருந்த மக்கள் தத்தமக்குத் தெரிந்த தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தகாலத்து எப்பாகுபாடும் இல்லை.
பின்னே ஆரியன் வந்தான், பிணக்கில்லா மக்களின் ஒற்றுமையைப்பார்த்து, பிளவை உண்டாக்கி, இன்னின்ன தொழில் இழிவென்றும் உயர்வென்றும் மக்களின் மனங்களில் நஞ்சை விதைத்தான். சாதி என்னும் சொல்லையும் நம்மேல் திணித்தான். நாமும் மயங்கி அவனின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டோம். சாதிகளெனப்பிரிந்தோம். இப்போது அவன் வாழ்கிறான், நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம்.
அறிவாய் தமிழா, ஆரியச்சாதியென்பது உனதல்ல.
உன் ஒற்றை அடையாளம் நீசெய்த அனைத்துத் தொழில்களையும் உள்ளடக்கிய "தமிழ்க்குடித்தமிழன்"
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment