பொங்கல் திருநாளா? பொங்கற்றிருநாளா?
பொங்கலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தேன். அதில், பொங்கல் திருநாள் என்பதை பொங்கற்றிருநாள் என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பரொருவர், இப்படி எழுதுவது தவறு, பொங்கல் திருநாள் என்பதே சரியென்றார். அப்போது நேரமின்மையால் ஏதும் மறுமொழியளிக்கவில்லை. அவரின் கருத்தை மறுக்கும் பதிவே இது. அதற்காக மட்டுமல்ல, அறியாதோரும் அறிந்துகொள்ளக்கூடும். அதனாற்றான் பதிவிடுகிறேன். எனக்கும் இலக்கணநூல்களை மீண்டும் புரட்டும் வாய்ப்புகிடைத்தது. இதைப்படித்தபிறகும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் இதற்கு மறுப்பறுப்புப்பதிவை தக்க சான்றுகளுடன் இடலாம்.
பொங்கல் திருநாள் என்றெழுதுவது புணர்ச்சியிலக்கணத்தின்படி முதற்கண் தவறு. இதை, இருசொற்களாகப் பிரித்தல்கூடாது. தமிழ்நாடு அரசு என்பதைப்போல்தான். இதையும் பிரித்தல்கூடாது. பிரித்தால் இருவேறு சொற்களாகும். தமிழ்நாடுஅரசு, பொங்கல்திருநாள் என்று ஒரே சொல்லாக எழுதவேண்டும். இப்படி எழுதுங்கால், இரண்டு சொற்களும் புணரவேண்டும். அப்போது,
தமிழ்நாடு + அரசு = தமிழ்நாட்டரசு
பொங்கல் + திருநாள் = பொங்கற்றிருநாள்
இப்புணர்ச்சியின் இலக்கணம் யாதெனின்,
தொல்காப்பியம் 149
மேற்கூறு இயற்கை ஆவயினான"
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தொகைமரபில், உயிரீறு மெய்யீறுகளின் பொதுப்புணர்ச்சியை விளக்குங்கால், மேலே பல விதிகளைக்கூறிவிட்டு, இந்நூற்பாவில், லகர,னகர மெய்யீறுகள் நிலைமொழியினீற்றில் வந்து, வருமொழிமுதலில் தகர, நகரங்கள் வந்தால், அவை திரிந்து றகர, னகரங்களாகும் என்கிறார்.
ஈண்டு, பொங்கல்+திருநாள் என்பதில் ல்+தி, லகர மெய்யீறும் தகர வல்லெழுத்தும் புணருங்கால், தகரந்திரிந்து றகரம் வந்தது.
நன்னூலாரும் இதற்கு விதிகூறுகிறார்.
நன்னூல் 227
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி"
லகர,ளகர மெய்யீறுகள் வந்து வல்லெழுத்து வருங்கால், அவைதிரிந்து றகர,டகரங்கள் வரும் என்கிறார்.
மேற்கூறிய இவ்விரு நூற்பாக்களின் புணர்ச்சிவிதியின்படியே 40 ஆண்டுகளுக்கு முன்புவரை மக்கள் இலக்கணமுறைப்படியே வழங்கிவந்துள்ளனர். (ஆனால், இப்போது புணர்ச்சியிலக்கணத்தின்படி நான் என்னவெழுதினாலும், அதையெதிர்க்க ஒருகூட்டமே இங்குண்டு)
இப்புணச்சிச்சான்றுகள் :
(பரிபாடலின் திறம் விளக்கும் பாட்டு)
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற்_றிறம்.
பரிபாடல் + திறம் = பரிபாடற்றிறம்
******
நேமிநாதம் 85ஆம் பாட்டு:
விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர்
கரிப்பையங் காப்பச்சந் தேற்றமீ ராருந்
தெரிக்கிற் #_கடிசொற்_றிறம்.
கடிசொல் + திறம் = கடிசொற்றிறம்
******
சொல் + திகழும் = சொற்றிகழும்
நல் + தவம் = நற்றவம்
கல் + தூண் = கற்றூண்
சொல் + துணை = சொற்றுணை
நல் + துணை = நற்றுணை
பாடல் + திரட்டு = பாடற்றிரட்டு
அதனால் + தான் = அதனாற்றான்
பன்னூல் + திரட்டு = பன்னூற்றிரட்டு
பொழில் + திருப்புன்கூர் = பொழிற்றிருப்புன்கூர்
முதல் + திருமுறை = முதற்றிருமுறை
முதல் + திருப்பதிகம் = முதற்றிருப்பதிகம்
நல் + திணை = நற்றிணை
நல் + தமிழ் = நற்றமிழ்
பொங்கல் + திருநாள் = பொங்கற்றிருநாள்
1971ல் பதிப்புச்செம்மல் தாமோதரனாரின் பதிப்புகளை ஒருநூலாக, யாழ்ப்பாணத்தில் ஒரு பதிப்பகம் வெளியிட்டுள்ளது, அவ்வாண்டின் பொங்கலன்று. அந்நாளை எண்ணிட்டுவிட்டு பொங்கற்றிருநாளென்றே எழுதியுள்ளார்.
இச்சான்றுகளடங்கிய அச்சடித்த நூல்களின் படங்களை இங்கு இணைத்துள்ளேன்.
இலக்கணம் வல்லோர் யாராயினும் யானெழுதிய சொல் தவறென்று தக்கசான்றுகளுடன் மறுத்துநிறுவினால், என் தோல்வியை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வேன்.
************
நன்றி. வணக்கம்.
No comments:
Post a Comment