Friday, April 24, 2020

ஏழு வள்ளல்கள் - யாவர் என்று சொல்லும் பாடல்கள்

ஏழு வள்ளல்கள் :


வணக்கம். தலையேழு, இடையேழு, கடையேழு வள்ளல்கள் இருந்தனர் என்பர். ஆனால், முதல், இடை வள்ளல்கள் என்னும் பட்டியல் வரலாற்றிற்கு சிறிதும் ஒவ்வாதுள்ளன. கடையேழு வள்ளல்கள் என்போர் பட்டியலே இலக்கியங்களிலும் வரலாற்றிற்கும் ஒத்துள்ளது.  இவை எங்கு சொல்லப்பட்டுள்ளது என அறியாமல், நாம் வெறுமனே கடையேழு வள்ளல்கள் என்கிறோம். அதைத்தேடலாம் என்று தேடினேன். அப்போது, புறநானூறு-158ஆம் பாடலிலும், சிறுபாணாற்றுப்படையிலும் இவ்வள்ளல்கள் பட்டியலிட்டு புகழப்பட்டுள்ளனர் என தேடியறியப்பெற்றேன். கடையேழு என்று வகுக்காது, ஏழுவள்ளல்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.(தலை, இடை, கடை வள்ளல்கள் என்ற பகுப்பு இல்லை). சிறுபாணாற்றுப்படையில் அதிகன் எழுவரில் ஒருவனாகத் தொகுக்கப்பட்டுள்ளான். புறநானூற்றில் எழினி எழுவரில் ஒருவனாகத் தொகுக்கப்பட்டுள்ளான். மற்றை அறுவரும் இருநூற்பட்டியலிலும் பொதுவானவர்களே. அப்பாடல்களை நீங்களும் அறிய இங்கு பதிகிறேன். சிறிதே பெரும்பதிவு இது. வள்ளல்கள் பற்றி விரிவாக அறிய விரும்புவோர்  இதைப் படிக்கவும். இதைப்படிக்க துன்பப்படுவோர்க்காக சிறுவிளக்கங்களோடு அடுத்த பதிவில் பதிகிறேன். நன்றி.



1) முதல் நூல் 🏵🏵🏵🏵🏵

புறநானூறு 158. உள்ளி வந்தெனன் யானே!


பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை; பாடாண்.
துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம்.

சிறப்பு : எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு. 


முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;

காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,
கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை,

அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்,
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்,

கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்
உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக்

கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!

இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
இசைமேந் தோன்றிய வண்மையொடு,
பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!

சிறுவிளக்கம்: 

இப் பாட்டின்கண் பெருஞ்சித்திரனார் குமணன் தந்த பெருவளத்தைப் பெறுங்கால், அவனை இனிய தமிழால் வாழ்த்துகின்றார். இதன்கண் பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி யென்ற வள்ளல்கள் எழுவரையும் எடுத்தோதி, “இவ் வெழுவர்க்குப் பின்னே இரவலர் இன்மை தீர்த்தற்கு யான் உள்ளேன் என்று மேம்பட்டிருக்கும் நின்னை யடைந்தேன்; முதிரமலைத் தலைவ, குமண, என்னை ஏற்றுப்
பேணிச் சிறப்பித்த நீ வண்மையாலும், வேற்படை நல்கும் வென்றியாலும் மேம்படுவாயாக”என வாழ்த்துகின்றார்.

2) அடுத்த நூல் 🌺🌺🌺🌺

சிறுபாணாற்றுப்படை


ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

ஏழு வள்ளல்களின் சிறப்பு:


வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய

அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல்.

பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி
வாலுளைப் புரவியொடு வையக மருள
வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்

நீல நாக நல்கிய கலிங்க
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ
ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்ல

யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த
வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே
லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது
நட்டோ ருவப்ப நடைப்பரி கார
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாட னள்ளியு நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

வோரிக் குதிரை யோரியு மெனவாங்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோன்றாள்.

பெருவிளக்கம்: 

மழை ஓயாது பெய்யும் வளமிக்க மலைச் சாரலில், காட்டில் திரிந்த மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தவனும், ஆற்றலும் அழகும் நிறைந்தவனும், ஆவியர் குடியில் தோன்றியவனும், பெரிய மலை நாட்டுக்குத் தலைவனுமாகிய "பேகனும்",

வண்டுகள் வந்து தேனை உண்ணுமாறு மணம் வீசும் மலர்களை உதிர்க்கின்ற புன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், சிறிய பூக்களைப் பூக்கின்ற முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரைக் கொடுத்தவனும், ஒலிக்கின்ற அருவி வீழும் மலைச் சாரலில் அமைந்துள்ள பறம்புமலைக்கு அரசனுமாகிய "பாரியும்",

தன்னை நாடி வந்த இரவலருக்கு, ஒலிக்கின்ற மணியும் வெண்மையான தலையாட்டமும் அணிந்த குதிரையோடு, உலகத்தவர் கேட்டு வியக்க அன்பு நிறைந்த சொற்களையும் கொடுத்தவன். பகைவர் கண்டு அஞ்சுகின்ற சினத்தீ விளங்கும் ஒளி வீசும் நீண்ட வேலினை உடையவன். வீரக்கழலும், வளையும் அணிந்துள்ள பெரிய கைகளை உடையவனுமாகிய "காரியும்",

ஒளிவீசும் நீலமணியைத் தன்னகத்தே கொண்ட நாகம் தனக்குக் கொடுத்த ஆடையினை, ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள இறைவனுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தவன். வில்லைத் தாங்கிய, சந்தனம் பூசி உலர்ந்த வலிமை மிக்க தோளினை உடையவனும், அன்பான மொழிகளைப் பேசியவனுமாகிய "ஆய் அண்டிரனும்",

மேகம் தங்கும் மலையில் மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரலில் அழகிய நெல்லி மரத்தில் அமிழ்தாக விளைந்த இனிய நெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்தவன். பகைவரை அழிப்பதற்கு உறுதியோடு எழுந்த சினத்தீயும், ஒளி மிக்க நெடிய வேலும் ஆரவாரமிக்க கடல் போன்ற படையும் கொண்டவனுமாகிய "அதிகனும்",

தன்னிடம் இருக்கும் பொருளை மறைக்காது அன்பு காட்டுவோர் மனம் மகிழுமாறு, அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கான பொருளைக் குறைவின்றிக் கொடுத்தவன். போர் செய்வதில் வல்லவன். மழை விழுவதற்குக் காரணமான, காற்று தங்குகின்ற நெடிய குவடுகளைக் கொண்ட பெருமை பொருந்திய மலைநாட்டுக்குத் தலைவனாகிய "நள்ளியும்",

நெருக்கமான கிளைகளில், நறுமணம் வீசும் அரும்புகளைக் கொண்டுள்ள இளமையான உயர்ந்த புன்னை மரங்களையுடைய சிறிய மலைகளைக் கொண்ட நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்கு அளித்தவன். காரி என்னும் குதிரையில் ஏறிவரும் காரி என்ற வள்ளலோடு போரிட்டவன். பிடரிமயிர் அமைந்த குதிரையினை உடையவன். இத்தகைய "ஓரியும்".

அவ்வள்ளல்கள் எழுவரும் மேற்கொண்ட கொடையாகிய பாரத்தை, விரிந்த கடலை வேலியாகக் கொண்ட பரந்த இந்த உலகம் விளங்கும்படி, தான் ஒருவனே தாங்கிய திண்ணிய வலிய காலை உடையவன் நல்லியக்கோடன் எனப்போற்றுகிறார்.

நன்றி. வணக்கம்.
தொகுப்பு: தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment