பழந்தமிழ் நாட்டின் வரலாற்றுக் காலத்தைச் சங்க காலத்திலிருந்து தொடங்குவது வழக்கம். சங்க காலம் என்பது கி.மு.10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை எனக் கணக்கிடுவர். இக்காலக் கட்டங்களில் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியம் எனப் போற்றுவர். சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவாகும். இவ்விருவகை இலக்கியங்களில் சிவ வழிபாடு பரவலாகப் பேசப் பெறுகிறது. அவ்விலக்கியங்கள் காட்டும் சிவ வழிபாட்டு நிகழ்வுகளில் குறிப்பிட்ட செய்திகள் மட்டும் இங்கே சுட்டிக் காட்டப் பெறுகின்றன.
தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பாண்டிய நாட்டில் தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடிச் சங்கத்தை நிறுவிப் பணி செய்த காலம் சங்க காலம் எனப்படும். கடல் கொண்ட தென்மதுரையிலும், கபாடபுரத்திலும், தற்பொழுது உள்ள மதுரையிலும் மூன்று சங்கங்கள் இருந்தன. அவை முறையே தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என வழங்கப்பட்டன. கடைச்சங்கம் என்பது இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே நிலவியதாகும். அச்சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்டவையே பத்துப் பாட்டு எட்டுத்தொகைஎன்ற இலக்கியங்களாகும். அப்பாடல்களில் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. வாழ்வியல் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி கடவுள் கொள்கையாகும். கடவுள் கொள்கையில் தமிழ் மக்கள் மேற்கொண்ட தெய்வ வழிபாட்டு நெறிமுறைகள் பிரிவின்றிக் காணப் பெறுகின்றன.
சங்க இலக்கியங்களில் ஒரு தெய்வ வழிபாடு என்பது அன்றிப் பல தெய்வ வழிபாடுகள் காணப் பெறுகின்றன. மக்கள் வாழுகின்ற நிலத்தின் இயல்புகளுக்கு ஏற்பத் தெய்வங்கள் முதன்மை பெற்றன. மலைகளைக் கொண்டுள்ள குறிஞ்சி நிலத்தில் முருகனைத் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள் நடத்தப்பெற்றன. வயல்களைக் கொண்ட மருத நிலத்தில் இந்திரனையும், பெருமணல் உலகம் எனப்படும் நெய்தல் நிலத்தில் வருணனையும் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள் நடத்தப் பெற்றன. காடுகளைக் கொண்ட முல்லை நிலத்திற்குத் திருமாலும், பாலை நிலத்திற்குக் கொற்றவையாகிய காளியும் தெய்வங்களாகக் கருதப்பட்டனர். இத்தகைய தெய்வங்களின் வழிபாடுகள் சங்க இலக்கியங்களில் பரந்து காணப்படுகின்றன. இத்தெய்வ வழிபாடுகளோடு பேய், பூதம், யமன் போன்ற அச்சத்தைத் தருவதற்கு உரிய சக்திகளையும் தெய்வமெனக் கொண்டு வழிபடும் செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றன.
பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் பேய் என்பது 'அணங்கு' என்ற சொல்லால் குறிக்கப் பெற்று வழிபடப் பெற்றமை காணப்படுகின்றது. “துணங்கையம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு” (அடி.459). பட்டினப்பாலையில் பேயின் வழிபாடு இடம் பெற்றதைக் கீழ்வரும் அடி உறுதிப்படுத்துகிறது.
“பிணம் தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்” (வரி. 260).
பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப் படையில் முருக வழிபாட்டின் வரலாறு அமைந்துள்ளது. கூற்றுவன் எனப்படும் யமனைப் பற்றிய வழிபாடு சங்க இலக்கியங்களில் பலவாறு காணப்படுகிறது. பதிற்றுப்பத்தில் அமைந்த ‘மாற்றரும் சீற்றத்து மாயிருங் கூற்றம்’ (பா. 51) என்பதனைக் காட்டலாம். இத்தகைய சிறு தெய்வ வழிபாட்டோடு இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் நடப்பட்ட கல்லை வழிபடுகின்ற நடுகல் வழிபாடும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
“களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும் கடவுளும் இலவே” (பா. 335) என்ற புறநானூற்றுப் பகுதி இங்குச் சுட்டிக் காட்டத் தக்கதாகும். பரிபாடலில் கொற்றவை வழிபாடும், திருமால் வழிபாடும் இடம் பெற்ற பாடல்கள் பல உள்ளன. திருமாலின் வழிபாடு சிவ வழிபாட்டிற்கு ஒத்த நிலையில் சங்க இலக்கிய நூல்கள் பலவற்றிலும் காணப் பெறுகின்றது. திருமாலின் 10 அவதாரச் செய்திகளைப் பற்றிய நிகழ்ச்சிகள் பலவாறாக இடம் பெற்றுள்ளன. இவ்வாறு சங்க இலக்கியங்களில் தெய்வ வழிபாட்டு முறைகள் நிலங்களின் சூழல்களுக்கு ஏற்பப் பல்வேறு தெய்வ வழிபாடாகக் காணப் பெறுகின்றன. இவ்வழிபாடுகளோடு சிவ வழிபாடும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தனிநிலை பெற்று விளங்குகிறது.
1.2.1 எட்டுத்தொகை நூல்களில் சிவ வழிபாடு
சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். சிவ வழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும் காளி, அருள் வழங்கும் மலைமகள் ஆகிய 3 சக்திகளோடு நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் சிவன் என்ற சொல்லால் குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான். அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான். எனவே சக்தியாகிய பெண் தெய்வங்களுடனும், தன் திருமேனிக்கு உரிய பெயர்களுடனும் சங்க இலக்கியங்களில் சிவபெருமான் இடம் பெற்றுள்ளான். வழிபாட்டில் அவனுக்கென்று தனியே கோயில் அமைத்து வழிபடும் வழக்கமும், ஊருக்கு நடுவே மன்றங்கள் அமைத்து வழிபடும் வழக்கமும் இருந்தமை சங்க இலக்கியங்களில் தெரிகின்றது.
மேலும் சிவனைப் பற்றிப் பெருமையாகப் பேசும் எட்டுத்தொகை நூல்கள் அவனுடைய திருமேனியைப் பற்றிய செய்திகளைப் பலவாறாகக் குறிப்பிடுகின்றன. அவற்றில் ஒருசிலவற்றைக் காண்போம். எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பற்றியனவே ஆகும். இப்பாடல்களில் சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை உடையவன் என்ற செய்தி கடவுள் வாழ்த்துப் பாடலில் அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்ன மேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’ என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில் கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.
இவ்வாறு உருவ வழிபாடுகளைக் கூறுவதோடு சிவபெருமானுடைய புராணச் செய்திகளும் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. வானிடத்தில் பறந்து திரியும் இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன் சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும். இச்செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.
மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான் - (பரி.5, 25-27)
அதுபோலக் கலித்தொகையில் “எயில் எய்யப் பிறந்த எரிபோல” (கலி-150) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை எட்டுத்தொகை நூல்களில் காண முடிகிறது.
தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி மணிமிடற் றண்ணல் - (பரி. 9, 6-7)
ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான் அறம் உரைத்த செய்தியை,
ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல் - (கலி - 81)
ஆலமர் கடவுளன்ன நின் செல்வம் - (புற - 198)
என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதுபோலக் கயிலைக் கடவுள் என்றும், இராவணனை அடக்கியவன் என்றும், பிறை அணிந்தவன் என்றும், உமையொரு பாகத்தவன் என்றும் குறிப்பிட்டு, அவ்வரலாறுகளையும் எட்டுத்தொகை நூல்கள் கூறுகின்றன.
சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாகக் கருதப்பட்டது. அத்திருநாளில் சிவபெருமானுக்கு விழாக்கள் எடுத்தல் பற்றியும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன. அதிலும் மார்கழித் திருவாதிரை நாள் சிறப்புடைய திருநாளாகக் கருதப்பட்டது. இதனைப் பரிபாடலின் 11ஆம் பாடல் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. மழைக்காலத்தின் கடைசிப் பகுதியாகிய மார்கழி மாதத்தில் சந்திரன் முழுதாக நிறைந்துள்ள திருவாதிரை நாளில் சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கி நடத்தினார்கள் என்ற செய்தி அப்பாடலில் இடம்பெற்றுள்ளது.
சிவபெருமானுக்கு வேள்வித் தீ வழிபாடு இன்றியமையாதது என்பதையும் அதனைச் செய்தவர்கள் அவிர்சடை முனிவர்கள் என்பதையும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.
கடுந்தெறற் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்துவோனே - (புறம் - 251)
சிவபெருமானின் ஒரு வடிவாக அமைந்த முருகனின் வழிபாட்டில் சிவ வழிபாட்டு முறைகள் பல காணப்படுகின்றன. வெறியாட்டு வழிபாடு நடத்தினால் காதலர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என்பது சங்க இலக்கிய மரபாகத் தெரிகிறது.
அகநானூறு 96ஆவது பாடலில் வேலன் வெறியாட்டுநிகழ்ச்சிகள் முழுமையாகக் காட்டப் பெற்றுள்ளன. நற்றிணையின் 34ஆம் பாட்டில்,
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே (பா- 34)
என்று முருகனுக்கு எடுக்கப் பெற்ற வெறியாடல் குறிக்கப் பெறுகிறது. முருக வழிபாடு இவ்வாறு கூறப்பெற்றாலும் சிவபெருமானின் மூத்த பிள்ளையாகிய யானைமுகப் பிள்ளையாரின் வழிபாடுகள் சங்கச் செய்திகளில் இடம் பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் சிவனுக்குரிய பெண் தெய்வமாகிய உமையவள், வீரத்திற்குரிய தெய்வமாகக் கருதப் பட்டுக் கொற்றவையாக வணங்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பரிபாடலில் கொற்றவை பற்றிக் கூறப்பட்டுள்ள பாடலை அதற்குச் சான்றாகக் காட்டலாம்.
இவ்வாறு எட்டுத் தொகை நூல்களில் சிவபெருமானைப் பற்றிய செய்திகளும் வழிபாட்டு முறைமைகளும் இடம்பெற்றுச் சிவவழிபாட்டின் தொன்மையைப் புலப்படுத்துகின்றன.
1.2.2 பத்துப்பாட்டு நூல்களில் சிவ வழிபாடு
பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய செய்திகளும், வழிபாட்டு முறைகளும் இடம் பெற்றுள்ளன. பத்துப்பாட்டின் முதலாவது பாட்டான திருமுருகாற்றுப்படை சைவ சமய வழிபாட்டின் தொன்மையை எடுத்துக் காட்டும் பாடலாகும். சைவ சமய வழிபாட்டின் ஒரு பகுதியாக முருக வழிபாடு இருந்தமையை அப்பாடல் பெருமையாக எடுத்துக் காட்டுகிறது. முருகனின் வடிவம் பற்றியும், அவனுடைய கரங்கள் பற்றியும் கூறப்படுகின்ற செய்திகள் தொல் பழங்காலத்தில் சைவ சமய வழிபாட்டில் சிறப்பிடம் பெற்ற உருவ வழிபாட்டு முறையைக் கூறுவதாகும். மேலும் முருகன் இருக்கும் இடங்களாகப் படை வீடுகள் குறிக்கப் பெற்றிருப்பதும் சிறப்புடையதாகும். முருகன் குன்றுதோறும் ஆடுகின்றவன் என்பதை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில், “குன்றுதோறாடலும் நின்றதன் பண்பே” என்று குறிப்பிடுகின்றார்.
திருமுருகாற்றுப்படையில் மக்கள் ஒன்றுகூடி முருகனின் திருத்தலங்களில் செய்கின்ற வழிபாட்டு முறைகள் சிறப்பாகக் காட்டப் பெற்றுள்ளன. முருகப் பெருமானுடைய வரலாறுகள் அதாவது மாமரமாய் நின்ற சூரனைத் தடிந்தது போன்றவை சிறப்பாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. எனவே தொல் பழங்காலத்தில் சிவ வழிபாடு என்று நினைக்கிற பொழுது பத்துப்பாட்டில் அமைந்த திருமுருகாற்றுப் படை சிறப்புப் பெறுவதை உணரலாம். அப்பாட்டின் மூலம் முருக வழிபாடாம் சிவ வழிபாட்டுத் தொன்மை எடுத்துக் கூறப்பெறுகிறது.
மற்ற பாடல்களில் சிவ வழிபாட்டின் தொன்மைகள் பலவாறு காணப் பெறுகின்றன. எட்டுத்தொகைப் பகுதியில் கூறப்பட்டவை போன்று சிவபிரானின் புராணச் செய்திகள் இவற்றிலும் இடம் பெற்றுள்ளன.
சிறுபாணாற்றுப்படையில், “ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த.... ஆர்வ நன்மொழி” (அடி97 - 99) என்று ஆலமர்ச் செல்வர் நிலை குறிக்கப் பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியில் சிவபெருமானுக்கு எடுக்கப்பெற்ற வேள்வி பற்றிய செய்தி, “நல்வேள்வித் துறைபோகிய” (760) என்றும் பாண்டிய நாட்டில் 7 நாட்கள் சிவபெருமானுக்கு விழா எடுக்கப் பெற்ற செய்தி,
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி ஆடுதுவன்று விழவின் நாடார்த் தன்றே (427-428)
என்றும் குறிக்கப்பெறுகின்றன. அதுபோலப் பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலையில் அவிர்சடை முனிவர் சிவபெருமானுக்குரிய வேள்வியை நடத்தினர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவனை வழிபடுபவர்கள் துவராடை உடுத்தி முக்கோலினைக் கொண்டிருந்தனர் என்பதை முல்லைப்பாட்டு,
கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப (36-37)
என்று குறிப்பிடுகின்றது. இவ்வாறு சிவ வழிபாட்டின் தொன்மையைப் பத்துப்பாட்டில் இடம்பெற்ற பாடல்களும் வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம்.
1.2.3 தொல்காப்பியத்தில் சிவ வழிபாடு
‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல்’ என்ற மரபுக்கேற்பச் சங்க இலக்கியங்கள் அல்லது முற்பட்ட இலக்கியங்கள் கொண்டு தொல்காப்பியம் என்ற பழந்தமிழ் இலக்கண நூல் இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் தெய்வ வழிபாட்டுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் காணப்பெறும் சிவவழிபாட்டுச் செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம். அவ்விலக்கண நூல் கூறுகின்ற முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் என்ற மூன்று பொருள்களில் கருப்பொருளில் தெய்வம் இடம்பெற்றுள்ளது. தெய்வ நம்பிக்கையை அது காட்டுகிறது. அவ் இலக்கணநூல் நிலங்களை ஐவகையாகப் பிரித்து அந்நிலங்களுக்குரிய தெய்வங்களையும் குறிப்பிடுகிறது. ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று தொடங்கும் சூத்திரத்தின் மூலம் அத்தெய்வங்கள் உணர்த்தப் பெறுகின்றன. குறிஞ்சிக்குரிய தெய்வமாக முருகன் - செவ்வேள் என்று குறிக்கப் பெற்றுச் சைவ வழிபாடு இடம் பெறுகிறது. எனவே தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருந்தமை புலப்படுகிறது. மேலும் சமய வழிபாட்டின் கொள்கையான விதிக் (ஊழ்) கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டமை தெரிய வருகிறது. “ஒன்றே வேறே என்றிரு பால்வயின்” என்று தொடங்குகின்ற தொல்காப்பியச் சூத்திரம் இதற்கு எடுத்துக்காட்டாகும். 'பால்வரை தெய்வம்' என்றும், 'வழிபடு தெய்வம்' என்றும் தெய்வங்கள் அவ்விலக்கண நூலில் குறிக்கப் பெறுகின்றன. தெய்வ வழிபாட்டின் அங்கமாகிய விரிச்சி (குறி கேட்டல்), வெறியாட்டு எடுத்தல், கழங்குகளை எறிந்து சகுனம் பார்த்தல் ஆகியவையும் அவ்விலக்கண நூலில் கூறப்பட்டுள்ளன. அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாடு சிறப்பிடம் பெற்றது என்பதைக் “கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே“ என்ற சூத்திரப்பகுதி வலியுறுத்தும். சமயக் கொள்கையாகிய நிலையாமை பற்றி புறத்திணையில் காஞ்சித்திணை வலியுறுத்துகிறது. இவ்வாறு சமய வழிபாட்டின் தொன்மையையும், சைவ வழிபாட்டின் ஒரு பகுதியாகிய முருக வழிபாட்டின் சிறப்பையும், சமய நம்பிக்கைகளையும் தொல்காப்பியம் கூறுகிறது எனலாம்.
1.2.4 திருக்குறளில் சிவ வழிபாடு
சங்க இலக்கியக் காலம் சார்ந்த திருக்குறளில் ஒரு குறிப்பிட்ட கடவுள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை என்றாலும் சமய நெறிமுறைகளும், தத்துவ உண்மைகளும் இடம் பெற்றிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. “ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற தொடர் கடவுள் உண்மையைப் புலப்படுத்தும். கடவுள் வாழ்த்தில் அமைந்த 10 பாடல்களும் தெய்வ நம்பிக்கையை வலியுறுத்தும். “இருள்சேர் இருவினை” (குறள் எண்.5) என்ற தொடர் வினைக் கொள்கையின் சிறப்பை எடுத்துக் காட்டும். "பிறவிப் பெருங்கடல்" (10) என்பது மறுபிறப்பு உண்மையை வெளிப்படுத்தும் "எண்குணத்தான்" என்பது இறைவன் எண்ணற்ற - அளவில்லாத குணங்களை உடையவன் என்பதை உணர்த்தும்.
திருக்குறளில் “உலகு இயற்றியான்” (1062) என்ற தொடர் உலகத்தைப் படைத்த முதல்வனாம் கடவுள் உண்டு என்பதை வலியுறுத்தும். கடவுளுக்குரிய சொல்லாகிய 'இறை' என்ற சொல் திருக்குறளில் கையாளப் பெற்றிருப்பது கடவுட் கொள்கையை நிலைநாட்டும். அதுபோலப் “பற்றுக பற்றற்றான் பற்றினை” (350) என்ற தொடர் சிவ தத்துவ உணர்வை வெளிக்காட்டும். “மெய்யுணர்வு” (354) என்ற சொல் இறையுணர்ச்சி உடைய பெரியோரை நினைவுபடுத்தும்.
“சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்” (359) என்ற தொடர் சிவ தத்துவக் கொள்கையைத் தெளிவுற உணர்த்தும். ஆகூழ், போகூழ் என்ற தொடர்கள் (371) விதிக் கொள்கையை வலியுறுத்தும். “வகுத்தான் வகுத்த வகை” (377) என்ற தொடர் இறைக் கொள்கையை வலியுறுத்தும். ஊழ் என்னும் அதிகாரம் சிவ தத்துவக் கொள்கையை வலியுறுத்தும் அதிகாரமாகும். இவ்வாறு திருக்குறளில் சமயம் சார்ந்த வாழ்வியல் முறைகள் சுட்டிக் காட்டப் பெற்றுத் தொல் பழந்தமிழ்நாட்டு வழிபாட்டுமுறை உணர்த்தப் பெறுகிறது.
நன்றி. வணக்கம்
தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் கட்டுரை.
|
No comments:
Post a Comment