Thursday, April 23, 2020

திருக்குறள் கிட்டிய வரலாறு - வள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர்களும்

திருக்குறள் கிட்டிய சுருக்கவரலாறும்

வள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர்களும்

 



திருவள்ளுவர் என்றாலே நம் நினைவிற்கு வரும் உருவம் இது தான். பள்ளிப் பாடநூல்களில், அரசுப்பேருந்துகளில், அரசு அலுவலகங்களில், நீதிமன்றங்களில்... என  பல இடங்களிலும், நாம் பார்த்துப் பழகிய மார்பு வரை நீண்ட வெண்தாடியோடு, ஒரு கையில் எழுத்தாணியையும், மறு கையில் பனையோலையையும் பிடித்தபடி அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தவர் இவர்தான். அதுவரை உருவம் இல்லாத திருவள்ளுவருக்கு 1959-ம் ஆண்டு தன் தூரிகையால் உருவம் கொடுத்தவர் வேணுகோபால் என்பவர். (படங்களை இணைத்துள்ளேன்).





அந்தத் திருவள்ளுவர் ஓவியம், தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பெரியவிழா நடத்தி 1964-ம் ஆண்டு அப்போதைய இந்தியக்குடியரசுத்தலைவர் சாகீர் உசேனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. அந்த ஓவியம் மட்டும் அல்ல... நின்ற நிலையில் திருவள்ளுவர், தமிழ்த்தாய் ஓவியங்களை வரைந்துள்ளார்.

திருக்குறள் கிட்டிய சுருக்க வரலாறு:


இவர் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முன்பே, ஆங்கிலேயரான எல்லீசு துரை என்பவர் திருக்குறளைப் பதிப்பித்தும் திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து தங்கக்காசையும் வெளியிட்டுள்ளார்.





1796-இல் சென்னை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற எல்லீசு, மிகுந்த தமிழார்வம் கொண்டவர். தமிழ்மீது அவருக்கு இருந்த அன்பால் தம் பெயரை "எல்லீசன்" என்று தமிழ்படுத்திக்கொண்டார். அதுவரை தமிழ்மொழி சமற்கிருதத்திலிருந்து உருவானது என்று நிலவிவந்த கருத்தை ஒழித்து, தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்று நிறுவினார். அவர் சென்னையிலே தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி பழைய தமிழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டும் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஆரிங்டன். இவரும் எல்லீசும் நண்பர்கள். ஆரிங்டனின் சமையற்காரர் #_கந்தப்பனார். வடமொழி ஆரியர்களின் வஞ்சகத்தால், அப்போதெல்லாம் தமிழ் ஓலைச்சுவடிகளைத் தான் அடுப்பெரிக்கப் பயன்படுத்துவர். அவரிடம் சமையலுக்கு அடுப்பெரிக்க வந்த ஓலைச்சுவடிகளைப் பார்த்து அவற்றை எரிக்காது, தம் முதலாளியின் நண்பர் எல்லீசர் பழைய ஓலைச்சுவடிகளை சேகரிக்கிறாரே அவருக்குக்கொடுக்கலாம் என்று எடுத்துக்கொடுக்க, ஆரிங்டன் அதையெல்லாம் எடுத்து எல்லீசருக்குக் கொடுக்க, அவர் அந்த ஓலைச்சுவடிகளை எல்லாம் பதிப்பித்தார். அடுப்பெரிக்க வந்த அந்த ஓலைகள்தான் நாம் பெருமையுடன் தமிழரின் அடையாளமாகப் பேசும் திருக்குறளைத் தாங்கியிருந்த சுவடிகள்.





அந்த சமையற்காரர் கந்தப்பனார் யார் தெரியுமா? நம்முடைய அயோத்திதாசப் பண்டிதரின் பாட்டனார். அயோத்திதாச பண்டிதர் யார் தெரியுமா? நம்முடைய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனாரின் பாட்டனார்.

ஐயா.திருமாவளவனாரின் பாட்டனாரின் பாட்டனார் தான் நமக்கு ஒப்பற்ற திருக்குறளை காப்பாற்றித்தந்தவர். அவர் அன்றே அந்த ஓலைச்சுவடிகளையெல்லாம் அடுப்பிலிட்டு எரித்திருந்தால் நமக்கு இன்று திருக்குறள் இல்லை. கந்தப்பனாரின் தலைமுறைக்கு, தமிழர்கள் எந்நாளும் கடப்பாடுடையவர்களாக நன்றிமறவாதிருக்கவேண்டும்.

எல்லீசர் 1812ஆம் ஆண்டு திருக்குறளைப்பதிப்பித்து திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து, அத்திருவள்ளுவர் உருவத்தை தங்கக்காசிலே பொறித்து வெளியிட்டார். அதில் திருவள்ளுவரை சமணத்துறவியாக வடிவமைத்திருந்தார். வேதமதத்திற்கு எதிரான இயக்கங்கள் யாவும் சமணம் எனப்பட்டன. அதேயாண்டு "திருக்குறள் மூலபாடம்" என்னும் பெயரில் தஞ்சையிலே ஞானப்பிரகாசனார் என்பவர் திருக்குறளைப் பதிப்பித்தார்.

திருவள்ளுவரை தெய்வமாக வழிபட்டவர் எல்லீசர். தமிழ்மீது அளப்பரிய அன்புகொண்டிருந்தவர். தமிழ்மொழி சமற்கிருதத்திலிருந்து வேறுபட்டது, உயர்மொழி என்று நிறுவ நீண்டதொரு ஆய்வுநூலை தம்முடைய 45 அகவைக்குமேல் ஆராய்ந்து வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இதையெல்லாம் கண்டு பொறுக்காத சங்கரன்கோவில் ஆரியப்பார்ப்பனார்கள், எல்லீசர் இராமநாதபுரத்திற்கருகில் முகாமிட்டிருந்தபோது, எல்லீசருக்கு உணவிலே நஞ்சுவைத்து கொன்றார்கள். 43ஆம் அகவையிலேயே எல்லீசர் காலமானார். அவர் எழுதக்கருதிய தமிழாய்வு நூலும் எழுதாமலே போனது. இவரின் பெயரில் மதுரையில் "எல்லீசு தெரு" என்று ஒரு தெருவிற்கு பெயரிடப்பட்டுள்ளது.

அவருக்குப்பின் கால்டுவெல் வந்து தென்மொழிகளுக்கு திராவிடம் என்னும் பெயரிட்டு இந்த ஆய்வுகளையெல்லாம் செய்தார் என்பது பிறிதொரு வரலாறு.

திருக்குறளைக் காப்பாற்றித் தந்தவர்களுக்கும் பதிப்பித்தவர்களுக்கும் திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர்களுக்கும் நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment